வேதாகமத்தை வாசி

எண்ணாகமம் 8

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் மோசேயிடம்,
2“நான் காட்டிய இடத்தில் ஏழு விளக்குகளையும் வைக்க வேண்டும் என்று ஆரோனிடம் சொல். ஏழு விளக்குகளும் விளக்குத் தண்டுக்கு நேரே எரிய வேண்டும்” என்று கூறினார்.
3ஆரோன் அவ்வாறே விளக்குகளைச் சரியான இடத்தில் வைத்தான். விளக்குத் தண்டுக்கு எதிரேயுள்ள பகுதியில் ஒளி வீசுமாறு விளக்குகள் இருந்தன. கர்த்தர் மோசேக்கு இட்ட கட்டளைக்கு ஆரோன் கீழ்ப்படிந்தான்.
4விளக்குத் தண்டு கீழ்க் கண்டவாறு அமைக்கப்பட்டது. இது அடித்த பொன்னால் செய்யப்பட்டது. அடிப்பாகம் முதல் உச்சிவரை பொன்னால் பூ வேலைகள் செய்யப்பட்டிருந்தது. மோசேயிடம் கர்த்தர் சொன்னபடியே விளக்கு அமைக்கப்பட்டிருந்தது.
5கர்த்தர் மோசேயிடம்,
6“மற்ற இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து லேவியர்களைப் பிரித்து, அவர்களைச் சுத்திகரிப்பாயாக.
7கீழ்க்கண்டவாறு அவர்களைச் சுத்தப்படுத்த வேண்டும். அவர்கள் மீது பாவப் பரிகாரத்திற்குரிய சிறப்பான தண்ணீரைத் தெளிக்க வேண்டும். பின் அவர்கள் உடல் முழுவதிலும் சவரம் பண்ணிக் கொண்டு ஆடைகளைச் சலவை செய்ய வேண்டும். இது அவர்களின் உடலைச் சுத்தமாக்கும்.
8“லேவியர்களில் ஆண்கள் ஒரு இளங்காளையையும், தானியக் காணிக்கையையும் எடுத்து வரவேண்டும். அப்பலியானது எண்ணெயோடு கலக்கப்பட்ட மெல்லிய மாவாக இருக்கும். பின் இன்னொரு இளங்காளையைப் பாவப் பரிகார பலியாகக் கொண்டு வரவேண்டும்.
9லேவியர்களை ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிரேயுள்ள இடத்தில் கூட்டவேண்டும். பின் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் அங்கே கூட்டவேண்டும்.
10பின் லேவியரைக் கர்த்தருக்கு முன்னால் அழைத்து வாருங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அவர்கள்மீது தம் கைகளை வைக்க வேண்டும்.
11பிறகு ஆரோன் லேவியர்களைக் கர்த்தருக்கு அர்ப்பணிக்க வேண்டும். அவர்கள் தேவனுக்கு அளிக்கப்படும் காணிக்கையைப் போன்று இருப்பார்கள். இம்முறையில் லேவியர்கள் கர்த்தருக்குத் தாங்கள் செய்ய வேண்டிய சிறப்பு வேலைகளுக்காகத் தயாராயிருப்பார்கள்.
12“தங்கள் கைகளை காளைகளின் தலை மீது வைக்குமாறு லேவியர்களுக்குக் கூறுங்கள். ஒரு காளை, கர்த்தருக்குரிய பாவப்பரிகார பலியாகும். இன்னொரு காளை, கர்த்தருக்குரிய தகன பலியாகும். இப்பலிகளினால் லேவியர்கள் சுத்தம் செய்யப்படுகின்றனர்.
13ஆரோன் மற்றும் அவனது மகன்களின் முன்னிலையில் நிற்குமாறு லேவியர்களிடம் கூறு. பிறகு லேவியர்களை கர்த்தருக்கு அர்ப் பணித்துவிடு அவர்கள் அசை வாட்டும் பலியைப் போன்றவர்கள்.
14இது லேவியர்களைப் பரிசுத்தமாக்கும். அவர்கள் தேவனுக்காக ஒரு சிறப்பான முறையில் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைக் காட்டும். இவர்கள் மற்ற இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து வேறுபட்டவர்கள். லேவியர்கள் எனக்குரியவர்கள்.
15“எனவே லேவியர்களை சுத்தமாக்குங்கள். அவர்களைக் கர்த்தருக்குக் கொடுங்கள். அவர்கள் அசைவாட்டும் பலியைப் போன்றவர்கள். நீங்கள் இவ்வாறு செய்த பிறகு அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் வந்து தம் பணியைச் செய்யலாம்.
16இஸ்ரவேலர்கள் லேவியர்களை எனக்குக் கொடுப்பார்கள். அவர்கள் எனக்கு உரியவர்கள். ஒவ்வொரு இஸ்ரவேல் குடும்பமும் தனக்கு முதலில் பிறக்கும் ஆண் குழந்தைகளை எனக்குத் தர வேண்டும் என்று கடந்த காலத்தில் கூறியிருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்களில் முதலில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பதிலாக லேவியர்களை நான் இப்போது எடுத்துக் கொண்டேன்.
17இஸ்ரவேலர்களில் முதலில் பிறக்கும் ஆண் குழந்தைகள் ஒவ்வொன்றும் எனக்குரியதாகும். அது மனிதர்களா, அல்லது மிருகங்களா என்பது ஒரு பொருட்டல்ல. அவை எனக்குரியதாகும். ஏனென்றால் நான் எகிப்திலே, முதலில் பிறக்கும் ஆண் குழந்தைகளையும் மிருகங்களையும் கொன்றேன். அதோடு இஸ்ரவேலில் முதலில் பிறக்கும் ஆண் குழந்தைகளை எனக்குரியவர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
18ஆனால் இப்போது இவர்களின் இடத்தில் லேவியர்களை எடுத்துக்கொண்டேன். இஸ்ரவேலில் உள்ள மற்ற குடும்பங்களில் முதலாவதாகப் பிறந்த ஆண் மகன்களுக்குப் பதிலாக லேவியர்களை எடுத்துக் கொண்டேன்.
19இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களிலிருந்தும் லேவியர்களைத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை ஆரோனுக்கும், அவனது மகன்களுக்கும் தத்தமாகக் கொடுத்தேன். அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்காவும் சேவை செய்வார்கள். இஸ்ரவேல் ஜனங்களை சுத்தப்படுத்தும் பலிகளைச் செலுத்த உதவி செய்வார்கள். இதனால் பெருநோய்களும், துன்பங்களும் இஸ்ரவேலர்கள் பரிசுத்தமான இடத்திற்குள் வரும்போது ஏற்படுவதில்லை” என்றார்.
20எனவே மோசே, ஆரோன், இஸ்ரேவேல் ஜனங்கள் அனைவரும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தனர். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் லேவியரோடு சேர்ந்து செயல்பட்டனர்.
21லேவியர்கள் தங்களையும், தங்கள் ஆடைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டனர். ஆரோன் லேவியர்களை அசைவாட்டும் பலிபோன்று கர்த்தருக்கு அர்ப்பணித்தான். ஆரோன் பலிகளைக் கொடுத்ததின் மூலம் அவர்களின் பாவங்கள் நீக்கப்பட்டு, அவர்கள் பரிசுத்தம் அடைந்தனர்.
22அதன் பிறகு லேவியர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் தங்கள் பணியைச் செய்ய வந்தனர். ஆரோனும் அவனது மகன்களும் அவர்களைக் கண்காணித்தனர். லேவியர்களின் பணிகளுக்கு இவர்களே பொறுப்பானவர்கள். மோசேயிடம் கர்த்தர் சொன்னபடியே ஆரோனும் அவனது மகன்களும் செயல்பட்டனர்.
23மேலும் கர்த்தர் மோசேயிடம்,
24“இது லேவியர்களுக்கான சிறப்புக் கட்டளைகள் ஆகும். ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள வேலைகளை லேவியர்களில் 25 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்டவர்கள் வந்து பங்கிட்டுச் செய்ய வேண்டும்.
25ஆனால், ஒருவனுக்கு 50 வயதாகும்போது அவன் தன் பணியிலிருந்து ஓய்வுபெற வேண்டும். அவன் மேலும் வேலை செய்ய வேண்டிய தேவை இல்லை.
26இப்படிப்பட்ட 50 வயதும் அதற்கு மேலும் ஆன ஆண்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் தங்கள் சகோதரர்களின் வேலைக்கு உதவியாக இருக்கலாம். ஆனால், அவர்கள் அவ்வேலைகளைத் தாமாகவே செய்யக் கூடாது. நீங்கள் லேவியர்களை அவர்களின் வேலைக்குத் தேர்ந்தெடுக்கும்போது இவற்றைச் செய்யவேண்டும்” என்றார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.