வேதாகமத்தை வாசி

எண்ணாகமம் 13

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் மோசேயிடம்,
2“கானான் தேசத்தைக் கண்டு வருமாறு சிலரை அனுப்பு. இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் கொடுக்கப்போகும் நாடு இதுதான். குடும்பத்திற்கு ஒரு தலைவன் என்கிற வீதம் 12 கோத்திரங்களில் இருந்தும் 12 தலைவர்களை அங்கு அனுப்பு” என்று கூறினார்.
3கர்த்தருடைய கட்டளைக்கு மோசே கீழ்ப்படிந்தான். ஜனங்கள் அனைவரும் பாரான் பாலைவனத்தில் தங்கியிருந்தபோது இந்தத் தலைவர்களை மோசே கானானுக்கு அனுப்பி வைத்தான்.
4ரூபனின் கோத்திரத்திலிருந்து சக்கூரின் மகனான சம்முவா;
5சிமியோனின் கோத்திரத்திலிருந்து ஓரியின் மகனான சாப்பாத்;
6யூதாவின் கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகனான காலேப்;
7இசக்காரின் கோத்திரத்திலிருந்து யோசேப்பின் மகனான ஈகால்;
8எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து நூனின் மகனான ஓசேயா;
9பென்யமீன் கோத்திரத்திலிருந்து ரப்பூவின் மகனான பல்த்தி;
10செபுலோன் கோத்திரத்திலிருந்து சோதியின் மகனான காதியேல்;
11யோசேப்பின் கோத்திரத்திலிருந்து (மனாசே) ஆசின் மகனான காதி;
12தாண் கோத்திரத்திலிருந்து கெமல்லியின் மகனான அம்மியேல்;
13ஆசேர் கோத்திரத்திலிருந்து மிகாவேலின் மகனான சேத்தூர்;
14நப்தலி கோத்திரத்திலிருந்து ஒப்பேதியின் மகனான நாகபி;
15காத் கோத்திரத்திலிருந்து மாகியின் மகனான கூவேல்;
16நாட்டைப் போய் கண்டுபிடிக்கவும், அதைப் பற்றி அறியவும் மோசேயால் அனுப்பட்டவர்களின் பெயர்கள் இவைகளே ஆகும். (நூனின் மகனான ஓசேயாவுக்கு மோசே, யோசுவா என்று பெயர் வைத்திருந்தான்.)
17மோசே அவர்களைக் கானான் தேசத்தைக் கண்டு வருமாறு அனுப்பும்போது அவர்களிடம், “நீங்கள் இந்தப் பாலைவனத்தின் தெற்குப் பகுதி வழியாகச் சென்று மலையில் ஏறவேண்டும்.
18அந்த நாடு எவ்வாறு தோற்றம் அளிக்கிறது என்று பார்க்க வேண்டும், அங்கே வாழுகிற ஜனங்களைப் பற்றித் தெரிந்துக்கொள்ளுங்கள். அவர்கள் பலமானவர்களா, அல்லது பலவீனமானவர்களா? அவர்களின் எண்ணிக்கை குறைவா, மிகுதியா?
19நாட்டைப் பற்றியும் அதில் வாழும் ஜனங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள், இது நல்ல நாடா கெட்ட நாடா? எந்த விதமான பட்டணங்களில் குடியிருக்கிறார்கள்? நகரங்களைப் பாதுகாக்க மதில் சுவர்கள் உள்ளனவா? நகரங்கள் பலமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளனவா?
20நாட்டிலுள்ள மற்ற செய்திகளைப் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள். அங்குள்ள மண் விவசாயம் செய்வதற்குரிய வளம் உள்ளதா, அல்லது சாரம் அற்றதா? இந்நாட்டில் மரங்கள் உள்ளனவா? அங்குள்ள பழவகைகளில் சிலவற்றைக் கொண்டு வர முயலுங்கள்” என்றான். (அது முதல் திராட்சைகள் பழுக்கும் காலமாய் இருந்தது.)
21எனவே அவர்கள் நாட்டைப் பற்றித் தெரிந்துக்கொள்ளச் சென்றனர். பின் அவர்கள் சீன் பாலைவனம் முதல் ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்வரை சுற்றிப் பார்த்தனர்.
22நெகேவ் வழியாக நாட்டிற்குள் நுழைந்தனர். தெற்கேயும் எபிரோன் வரை சென்றார்கள். (எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.) அங்கே ஆனாக்கின் சந்ததியாகிய அகீமானும், சேசாயும் தல்மாயும் இருந்தார்கள்.
23பிறகு அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை சென்றனர். அங்கே அவர்கள் திராட்சைக் கொடியில் ஒரு குலையை அறுத்துக் கொண்டனர். அதனை ஒரு கம்பிலே கட்டி, இரண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர். அவர்கள் மாதுளம் பழங்களிலும், அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டு வந்தனர்.
24அந்த இடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது. காரணம் அந்த இடத்தில்தான் இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு குலை திராட்சை பழத்தைக் கொடியோடு வெட்டிக் கொண்டு வந்தார்கள்.
25அவர்கள் 40 நாட்கள் அந்த தேசத்தை நன்கு சுற்றி பார்த்தனர். பிறகு அவர்கள் தங்கள் முகாமுக்கு திரும்பி வந்தனர்.
26இஸ்ரவேல் ஜனங்கள் பாரான் பாலைவனத்தில் காதேஷ் என்ற இடத்துக்கு அருகில் தம் கூடாரங்களை அடித்திருந்தனர். அவர்கள் மோசே, ஆரோன் மற்றும் மற்ற இஸ்ரவேல் ஜனங்கள் இருந்த இடத்துக்குத் திரும்பி வந்தனர். அந் நாட்டிலிருந்து கொண்டு வந்த பழங்களைக் காட்டினார்கள்.
27மேலும் அவர்கள் மோசேயிடம், “நீங்கள் அனுப்பிய இடத்திற்கு நாங்கள் சென்றோம். பல நல்ல பொருட்களால் நிறைந்த நாடு அது. அங்கே பழுத்துள்ள சில பழங்களில் கொஞ்சம் இதோ;
28ஆனால் அங்கு ஜனங்கள் மிகவும் பல முள்ளவர்களாக வாழ்கிறார்கள். நகரங்கள் மிகவும் விரிவானவை, மிகவும் பலமான பாதுகாப்பு கொண்டவை. அங்கே சில ஏனாக்கின் ஜனங்களையும் கண்டோம்.
29அமலேக்கியர் தென்புறமான நாட்டில் குடியிருக்கிறார்கள். மலை நாடுகளில் ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் குடியிருக்கிறார்கள். கானானியர்கள் கடற்கரைகளிலும், யோர்தான் நதி அருகேயும் வாழ்கிறார்கள்” என்றனர்.
30மோசேயின் அருகே இருந்த ஜனங்களைக் காலேப் அமைதிப்படுத்தி, “நாம் போய் அந்நாட்டை நமக்குரியதாக எடுத்துக் கொள்வோம். நாம் எளிதில் இவர்களை வென்றுவிடலாம்” என்றான்.
31ஆனால் அவனோடு சென்று வந்த மற்றவர்களோ, “நாம் அவர்களோடு சண்டையிட முடியாது. அவர்கள் நம்மைவிட பலமுள்ளவர்கள்” என்றனர்.
32மேலும் அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களிடம் தம்மால் அந்நாட்டில் உள்ளவர்களை வெல்ல முடியாது என்று கருத்து தெரிவித்தனர். அவர்கள், “நாங்கள் பார்வையிட்ட அந்நாட்டில் பல முள்ளவர்கள் பலர் இருக்கின்றனர். எனவே அங்கே செல்லும் எவரையும் அவர்கள் எளிதாக வென்று விடுவார்கள்.
33அங்கே நாங்கள் இராட்சதர்களையும் பார்த்தோம்! (ஏனாக்கின் சந்ததியிலுள்ள சிலர் இராட்சதப் பிறவிகளாயிருந்தனர்.) எங்கள் பார்வையில் அவர்களுக்கு முன் நாங்கள் சிறிய வெட்டுக்கிளிகளைப் போன்று இருந்தோம். அவர்களது பார்வையில் நாங்களும் அப்படியே தோன்றினோம்!” என்றார்கள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.