1 | பிறகு கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் பார்த்து, |
2 | “நீங்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: ஒருவனுக்கு உடற்கழிவுகள் ஏற்பட்டால் அதனாலும் தீட்டு உண்டாகும். |
3 | இக் கழிவுகள் அவன் உடம்பிலிருந்து சரளமாக வெளியேறுகிறதா இல்லையா என்பது முக்கியமில்லை. |
4 | “உடற்கழிவு ஏற்பட்டவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும். அவன் எதன் மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும். |
5 | அவனது படுக்கையைத் தொடுகிறவன் தனது ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை அவன் தீட்டுள்ளவனாக இருப்பான். |
6 | உடற் கழிவு ஏற்பட்டவன் உட்காருகிற இடத்தில் உட்காருகிறவனும் தன் ஆடைகளைத்துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை இவனும் தீட்டு உள்ளவனாக இருப்பான். |
7 | உடற்கழிவு ஏற்படுகிறவனைத் தொடுபவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்கவேண்டும். மாலைவரை இவனுக்கும் தீட்டு இருக்கும். |
8 | “உடற்கழிவு உள்ளவனின் எச்சில் மேலேபட்டாலும் ஒருவன் தன் ஆடைகளைத்துவைத்து தண்ணீரில் குளிக்கவேண்டும். மாலைவரை அவனுக்குத் தீட்டு இருக்கும். |
9 | இத்தகையவன் ஏறுகிற எந்த சேணமும் தீட்டாகும். |
10 | இத்தகையவனுக்குக் கீழ் இருக்கிற எந்தப் பொருளையும் தொடுகிறவன் மாலைவரை தீட்டாயிருப்பான். அப்பொருளை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டு உள்ளவனாக இருப்பான். |
11 | சிற்சில இடங்களில் உடற் கழிவு உள்ளவன் தண்ணீரில் தன் கைகளைக் கழுவாமலே அடுத்தவனைத் தொட்டுவிட்டால், தொடப்பட்டவன் தன் ஆடைகளைத் துவைத்து குளிக்க வேண்டும். மாலைவரை அவன் தீட்டாக இருப்பான். |
12 | “உடற்கழிவு ஏற்பட்டவன் ஏதேனும் மண் பாண்டத்தைத் தொட்டால் அம்மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும். மரத்தாலான பாத்திரத்தை அவன் தொடநேர்ந்தால், அதைத் தண்ணீரால் கழுவ வேண்டும். |
13 | “உடற்கழிவு உள்ளவன் அது நீங்கி சுத்தமானதும் அதற்குச் சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். அதற்காக ஏழு நாட்கள் காத்திருந்து, தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அப்போதுதான் அவன் சுத்தமாவான். |
14 | எட்டாவது நாள் அவன் இரண்டு காட்டுப் புறாக்களையாவது, புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரத்திற்குக் கொண்டுவர வேண்டும். அவற்றைக் கர்த்தருக்கு முன் கொண்டுவந்து ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். |
15 | அவற்றுள் ஒன்று பாவப்பரிகார பலியாகவும் இன்னொன்று தகன பலியாகவும் ஆசாரியன் கர்த்தருக்கு செலுத்துவான். இம் முறையில் ஆசாரியன் கர்த்தருக்கு முன் அவனைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும். |
16 | “ஒருவனுக்கு விந்து வெளிப்பட்டால், அவன் தண்ணீரில் குளிக்க வேண்டும். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். |
17 | தோல் ஆடையிலும், துணியிலும் விந்துபட்டிருந்தால் அவற்றை தண்ணீரால் கழுவவேண்டும். அது மாலைவரை தீட்டுள்ளதாக இருக்கும். |
18 | விந்து கழிந்தவனோடு ஒரு பெண்படுத்திருந்தால் இருவரும் தண்ணீரில் குளிக்க வேண்டும். அவர்கள் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். |
19 | “இரத்தப் போக்குடைய மாதவிலக்கான பெண், ஏழு நாட்கள் தீட்டுப்பட்டவளாக இருப்பாள். அவளைத் தொடுகிறவன் எவனும் மாலை வரை தீட்டுள்ளவனாக இருப்பான். |
20 | அவள் மாத விலக்காக இருக்கும் போது எதன் மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதன் மீது உட்காருகிறாளோ அவை தீட்டாகும். |
21 | அவளது படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை அவனும் தீட்டுள்ளவனாக இருப்பான். |
22 | அவள் அமர்ந்த இருக்கையைத் தொட்டவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். |
23 | அவள் படுக்கையையோ இருக்கையையோ தொட்டவன் மாலைவரை தீட்டு உடையவனாக இருப்பான். |
24 | “அவளோடு ஒருவன் படுத்துக்கொண்டால் அவள் தீட்டு அவன்மேல் படும். அதனால் அவன் ஏழு நாள் தீட்டாய் இருப்பான். அவன் படுக்கிற படுக்கையும் தீட்டாகும். |
25 | ஒருத்திக்கு மாதவிலக்கு அல்லாத நாட்களிலும் அவளிடம் இரத்தம் கசிந்தால் அப்போதும் அவள் விலக்கானவள் போலவே கருதப்பட வேண்டும். |
26 | அந்த நாட்களிலும் அவள் படுக்கும் படுக்கையும் விலக்கான நாட்களுக்குரிய படுக்கை போன்று தீட்டாகும். அவள் அமரும் இருக்கையும் விலக்கத் தீட்டைப் போன்றே கருதப்படும். |
27 | இத்தகையவற்றைத் தொடுகிற எவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலை வரை தீட்டாய் இருப்பான். |
28 | அவளது தீட்டு நின்றதும் ஏழு நாட்கள் அவள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகே அவள் சுத்தமாகிறாள். |
29 | எட்டாவது நாளில் அவள் இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரு புறாக்குஞ்சுகளையோ கொண்டு வந்து அவற்றை ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். |
30 | ஆசாரியன் அவற்றில் ஒன்றைப் பாவப்பரிகார பலியாகவும், இன்னொன்றை தகன பலியாகவும் செலுத்த வேண்டும். கர்த்தருடைய சந்நிதியில் அவளை இவ்வாறு ஆசாரியன் சுத்திகரிப்பு செய்ய வேண்டும். |
31 | “இஸ்ரவேல் ஜனங்கள் தீட்டு இல்லாதவர்களாக இருக்க எச்சரிக்கை செய்யுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் எனது ஆராதனை கூடாரத்தைத் தீட்டுள்ளதாக்குவதுடன், அவர்கள் அழிந்தும் போவார்கள்” என்று கூறினார். |
32 | இவையே, உடற்கழிவு உள்ளவர்களுக்கான விதிகள். விந்து கழிவினால் தீட்டான ஆண்களுக்கும், |
33 | மாதவிலக்கால் தீட்டான பெண்களுக்கும், தீட்டானவளோடு படுத்துக் கொண்டவனுக்குமுரிய விதிகள் இவைகளேயாகும். |