வேதாகமத்தை வாசி

யாத்திராகமம் 7

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் மோசேயிடம், “நான் உன்னோடு இருப்பேன். பார்வோனுக்கு நீ ஒரு பேரரசனைப் போல் தோன்றுவாய். ஆரோன் உனக்காகப் பேசுகிறவனாய் இருப்பான்.
2நான் உனக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் ஆரோனுக்குச் சொல். நான் சொல்லும் காரியங்களை அவன் அரசனுக்குச் சொல்வான். இஸ்ரவேல் ஜனங்கள் இத்தேசத்தை விட்டுச் செல்வதற்கு பார்வோன் அனுமதிப்பான்.
3ஆனால் பார்வோன் பிடிவாதமாக இருக்கும்படி நான் செய்வேன். நீங்கள் சொல்லுகிற காரியங்களுக்கு அவன் கீழ்ப்படியமாட்டான். நான் யாரென்பதை நிரூபிப்பதற்காக எகிப்தில் அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வேன். ஆனால் உங்களுக்கு செவிகொடுக்க மறுப்பான்.
4பிறகு நான் எகிப்தை அதிகமாகத் தண்டிப்பேன். என் ஜனங்களையும் வெளியே கொண்டு வருவேன்.
5அப்போது எகிப்து ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். அதன்பின் அவர்கள் தேசத்திலிருந்து என் ஜனங்களை வழி நடத்துவேன்” என்றார்.
6கர்த்தரின் கட்டளைகளுக்கு மோசேயும் ஆரோனும் கீழ்ப்படிந்தனர்.
7பார்வோனிடம் பேசும்போது, மோசே 80 வயதுள்ளவனாகவும் ஆரோன் 83 வயதுள்ளவனாகவும் இருந்தனர்.
8கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும்,
9“பார்வோன் உங்கள் வல்லமையை நிரூபித்துக் காட்டச் சொல்வான். உங்களிடம் ஒரு அற்புதத்தைச் செய்ய வேண்டுமென பார்வோன் கேட்பான். ஆரோனின் கைத்தடியை நிலத்தில் வீசும்படியாகச் சொல். பார்வோன் கவனித்துக்கொண்டிருக்கும்போதே, கைத்தடி ஒரு பாம்பாக மாறும்” என்றார்.
10எனவே மோசேயும், ஆரோனும் பார்வோனிடம் போய், கர்த்தர் சொன்னபடியே செய்தார்கள். ஆரோன் அவனது கைத்தடியைக் கீழே எறிந்தான். பார்வோனும் அவனது அதிகாரிகளும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, கைத்தடி பாம்பாக மாறிற்று.
11எனவே, அரசன் தன் நாட்டுԔஞானிகளுக்கும், மந்திரவாதிகளுக்கும் சொல்லியனுப்பினான். அம்மனிதர்களும் அவர்களது உபாயங்களைப் பயன்படுத்தி ஆரோன் செய்தவாறே செய்தனர்.
12அவர்களும் தங்கள் கைத்தடிகளை நிலத்தின் மேல் எறிந்தபோது, அக்கைத்தடிகள் பாம்புகளாயின, ஆனால் ஆரோனின் கைத்தடியோ அவற்றைத் தின்றது.
13பார்வோனின் இருதயம் கடினமாகி, இப்போதும் ஜனங்களைப் போக விட மறுத்துவிட்டான். கர்த்தர் நடக்குமெனக் கூறியபடியே இது நிகழ்ந்தது. மோசேயும் ஆரோனும் கூறுவதைக் கேட்க அரசன் மறுத்தான்.
14கர்த்தர் மோசேயிடம், “பார்வோன் பிடிவாதமாக இருக்கிறான். பார்வோன் ஜனங்களை அனுப்ப மறுக்கிறான்.
15காலையில் பார்வோன் நதிக்குப் போவான். நைல் நதியினருகே பாம்பாக மாறின உனது கைத்தடியை எடுத்துக்கொண்டு அவனிடம் போ.
16அவனிடம் இதைக் கூறு: ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர் என்னை உன்னிடம் அனுப்பினார். பாலைவனத்தில் அவரது ஜனங்கள் சென்று தொழுதுகொள்ள அனுப்பு என்று உன்னிடம் கூறுமாறு எனக்குக் கர்த்தர் சொன்னார். இதுவரைக்கும் நீ கர்த்தர் கூறியவற்றிற்கு செவிசாய்க்கவில்லை.
17எனவே, அவரே கர்த்தர் என்பதை உனக்குக் காட்டுவதற்காக சில காரியங்களைச் செய்வதாகக் கர்த்தர் சொல்கிறார். எனது கையிலிருக்கும் இந்தக் கைத்தடியால் நைல் நதியின் தண்ணீரை அடிப்பேன். நதி இரத்தமாக மாறும்.
18நதியின் மீன்கள் செத்துப்போகும், நதியிலிருந்து துர் நாற்றம் வீச ஆரம்பிக்கும். அப்போது நதியின் தண்ணீரை எகிப்தியர்கள் பருகமுடியாது’” என்று கூறினார்.
19கர்த்தர் மோசேயை நோக்கி, “ஆரோனின் கையிலுள்ள கைத்தடியை நதிகள், கால்வாய்கள், ஏரிகள், தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள் அனைத்தின் மேலாகவும் நீட்டும்படியாக ஆரோனுக்குக் கூறு, அவன் அவ்வாறு செய்தவுடன் தண்ணீரெல்லாம் இரத்தமாகும். மரத்தாலும் கல்லாலுமாகிய ஜாடிகளில் நிரப்பியிருக்கும் தண்ணீர் உட்பட, எல்லா இடங்களிலுள்ள தண்ணீரும் இரத்தமாக மாறும்” என்றார்.
20ஆகையால் மோசேயும் ஆரோனும் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்தார்கள். ஆரோன் கைத்தடியை உயர்த்தி நைல் நதியின் தண்ணீரை பார்வோன் முன்பாகவும் அவனது அதிகாரிகள் முன்பாகவும் அடித்தான். நதியின் தண்ணீர் முழுவதும் இரத்தமாயிற்று.
21நதியின் மீன்கள் இறந்தன. நதி நாற்றமெடுத்தது. நதியின் தண்ணீரை எகிப்தியர்கள் பருக முடியா மலாயிற்று. எகிப்தில் எல்லா இடங்களிலும் இரத்தம் காணப்பட்டது.
22எகிப்திய மந்திரவாதிகளும் தங்கள் உபாயங்களைப் பயன்படுத்தி இதையே செய்தார்கள். எனினும், பார்வோன் மோசேக்கும், ஆரோனுக்கும் செவிசாய்க்க மறுத்தான். இது கர்த்தர் சொன்னபடியே நடந்தது.
23மோசேயும், ஆரோனும் செய்தவற்றைப் பார்வோன் பொருட்படுத்தவில்லை. பார்வோன் மறுபுறமாகத் திரும்பி வீட்டிற்குள் சென்றான்.
24நதியிலிருந்து தண்ணீரை எகிப்தியர்கள் பருக முடியாமற் போயிற்று. எனவே, அவர்கள் நதியைச் சுற்றிலும் குடிப்பதற்குரிய தண்ணீரைப் பெறுவதற்காக கிணறுகளைத் தோண்டினர்.
25நைல் நதியை கர்த்தர் மாற்றிய பின்னர் ஏழு நாட்கள் கழிந்தன.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.