வேதாகமத்தை வாசி

யாத்திராகமம் 31

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் மோசேயை நோக்கி,
2“யூதாவின் கோத்திரத்திலிருந்து ஒரு மனிதனை எனது விசேஷ பணிக்காகத் தெரிந்தெடுத்துள்ளேன். அவன் ஊருடைய மகனான ஊரியின் மகன் பெசலெயேல்.
3தேவ ஆவியால் நான் பெசலெயேலை நிரப்பியுள்ளேன். எல்லாவிதமான கைவேலைகளையும் செய்யக்கூடிய திறமையையும், அறிவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறேன்.
4பெசலெயேல் கலைப் பொருட்களை வடிப்பதில் வல்லவன். பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றால் பொருட்களைச் செய்ய அவனுக்கு இயலும்.
5பெசலெயேலால் அழகான அணிகலன்களை வெட்டி உருவாக்க முடியும். மரவேலைகளிலும் அவன் கை தேர்ந்தவன். அவன் எல்லாவிதமான வேலைகளையும் செய்யும் ஆற்றல்மிக்கவன்.
6அவனுக்கு உதவி செய்வதற்குத் தாண் கோத்திரத்திலிருந்து அகிசாமாக்கின் மகன் அகோலியாபை தெரிந்தெடுத்துள்ளேன். நான் உனக்குக் கூறிய எல்லாப் பொருட்களையும் செய்யும் திறமையை எல்லாப் பணியாட்களுக்கும் கொடுத்துள்ளேன். நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்.
7ஆசாரிப்புக் கூடாரம், உடன்படிக்கைப் பெட்டி, கிருபாசனம், கூடாரத்தின் பணி முட்டுகளும்,
8மேசையும் அதற்குத் தேவையான பொருட்களும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் கருவிகளும், நறுமணப் பொருளை எரிக்கும் பீடம்,
9காணிக்கைகளை எரிக்கும் பலிபீடம், பலிபீடத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தொட்டியும் அதன் பீடமும்,
10ஆசாரியனாகிய ஆரோனின் விசேஷ ஆடைகள், ஆரோனின் மகன்கள் ஆசாரியராக சேவை செய்ய அவர்களுக்கான உடைகள்,
11நறுமணம் மிக்க அபிஷேக எண்ணெய், மகா பரிசுத்த இடத்தின் நறுமணப்பொருள் அனைத்தையும் நான் உனக்குக் கூறிய விதத்திலேயே பணியாளர்கள் செய்ய வேண்டும்” என்றார்.
12பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி,
13“இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதைக் கூறு. ‘ஓய்வுக்குரிய விசேஷ தினங்களின் விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். எல்லாத் தலைமுறைகளிலும் அது உங்களுக்கும் எனக்கும் மத்தியிலுள்ள அடையாளமாக விளங்கும். உங்களை எனது விசேஷமான ஜனங்களாக கர்த்தராகிய நான் ஏற்றுக்கொண்டதை இது உணர்த்தும்.
14“ஒய்வு நாளை ஒரு விசேஷ நாளாக எண்ணுவாயாக. பிறநாட்களுக்கு சமமாக ஓய்வு நாளையும் ஒருவன் எண்ணினால் அம்மனிதன் கொல்லப்பட வேண்டும். ஓய்வு நாளில் வேலை செய்கிறவனை அவனது ஜனங்களிடமிருந்து ஒதுக்கிவிட வேண்டும்.
15வேலை நாட்களாக வாரத்தில் ஆறு நாட்கள் உள்ளன. ஏழாவது நாள் ஓய்வுக்குரிய விசேஷ நாளாகும். கர்த்தரை மகிமைப்படுத்தும் விசேஷ நாள் அது. ஓய்வு நாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்பட வேண்டும்.
16இஸ்ரவேல் ஜனங்கள் ஓய்வு நாளை நினைவுகூர்ந்து அதை விசேஷ நாளாக்க வேண்டும். என்றென்றும் தொடர்ந்து இதைச் செய்துவர வேண்டும். என்றென்றும் எனக்கும் அவர்களுக்கும் மத்தியில் தொடர்கிற உடன்படிக்கையாக அது விளங்கும்.
17ஓய்வு நாள் எனக்கும் இஸ்ரவேலருக்கும் மத்தியில் ஒரு அடையாளமாக எப்போதும் இருக்கும். கர்த்தர் ஆறு நாட்கள் உழைத்து வானையும் பூமியையும் உண்டாக்கினார். அவர் ஏழாம் நாளில் ஓய்வாகவும் அமைதியாகவும் இருந்தார்’” என்றார்.
18சீனாய் மலையில் கர்த்தர் மோசேயிடம் பேசி முடித்தார். உடன்படிக்கை பதித்த இரண்டு கற்பலகைகளை கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார். தேவன் தமது விரல்களால் அக்கற்பலகைகளில் எழுதினார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.