1 | மோசே இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி அவர்களை நோக்கி, “நீங்கள் செய்ய வேண்டுமெனக் கர்த்தர் கட்டளையிட்ட காரியங்களை நான் உங்களுக்குக் கூறுவேன்: |
2 | “ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாவது நாள் நீங்கள் ஓய்வெடுப்பதற்குரிய மிக விசேஷ நாளாகும். அந்த நாளில் ஓய்வெடுப்பதன் மூலம் கர்த்தரை மகிமைப்படுத்துவீர்கள். ஏழாவது நாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்பட வேண்டும். |
3 | ஓய்வு நாளில் நீங்கள் வாழுமிடங்களில் நெருப்பை மூட்டவும் கூடாது” என்றான். |
4 | மோசே இஸ்ரவேலின் எல்லா ஜனங்களுக்கும் கூறியதாவது, “இதுவே கர்த்தர் கட்டளையிட்டவை: |
5 | கர்த்தருக்காக விசேஷ காணிக்கைகளைச் சேர்த்து வையுங்கள். என்ன காணிக்கையைக் கொடுக்க வேண்டும் என்பதை மனதுக்குள்ளேயே ஒவ்வொருவரும் தீர்மானம் செய்து கொள்ளுங்கள். பின் அந்த காணிக்கையைக் கர்த்தருக்குக் கொண்டுவர வேண்டும். பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றைக் கொண்டு வாருங்கள். |
6 | இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு ஆகிய நூலையும், வெள்ளாட்டு மயிராலான கம்பள துணியையும் |
7 | சிவப்புத் தோய்த்த கடாவின் தோலையும், மெல்லிய தோலையும், சீத்திம் மரத்தையும், |
8 | குத்து விளக்குகளுக்கு எண்ணெயையும், தூபம் காட்டுவதற்கு நறுமணப் பொருள்களையும் கொண்டு வாருங்கள். |
9 | மேலும் கோமேதகக் கல்லையும், ஏபோத்திலும் நியாயத்தீர்ப்பு மார்ப்பதகத்திலும் வைக்க வேண்டிய கற்களையும் கொண்டு வாருங்கள். |
10 | “கர்த்தர் கட்டளையிட்ட பொருள்களையெல்லாம் திறமை மிகுந்த கைவேலைக்காரர் அனைவரும் செய்ய வேண்டும். |
11 | பரிசுத்தக் கூடாரம், அதன் வெளிப்பிரகாரம், அதன் மேற் பரப்பு: கொக்கிகள், பலகைகள், தாழ்ப்பாள்கள், தூண்கள், அடித்தளங்கள், |
12 | பரிசுத்தப் பெட்டி, அதன் தண்டுகள், கிருபாசனம், பெட்டி இருக்குமிடத்தை மூடும் திரை, |
13 | மேசையும் அதன் தண்டுகளும், மேசையின் மீதிருக்கும் பொருள்கள், மேசையின் மீது வைக்க வேண்டிய விசேஷ ரொட்டி, |
14 | வெளிச்சத்திற்கான குத்து விளக்குத் தண்டு, அதனோடு பயன்படுத்தப்படும் பொருட்கள், விளக்குகள், விளக்குக்கு எண்ணெய், |
15 | நறுமணப் பொருள்களை எரிக்கும்பீடம், அதன் தண்டுகள், அபிஷேக எண்ணெய், நறுமணப் புகைப் பொருள், பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலை மூடும் திரை, |
16 | தகன பலிபீடம், வெண்கலத் தளம், அதின் தண்டுகள், பலிபீடத்தில் பயன்படும் பொருட்கள், வெண்கலத் தொட்டிகள், அதன் பீடம், |
17 | பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள திரைகள், அவற்றிற்கான தூண்களும், பீடங்களும், பிரகாரத்திற்கான நுழை வாயிலை மூடும் திரை, |
18 | கூடாரத்தைத் தாங்கி நிற்க உதவும் வெண்கல முளைகள், திரைகளின் சுவர்கள், வெளிப்பிரகாரத்தின் முளைகள், முளைகளில் கட்டப்படும் கயிறுகள், |
19 | பரிசுத்த இடத்தில் ஆசாரியர் அணியும் பொருட்டு விசேஷமாக நெய்த ஆடைகள். இந்த விசேஷ ஆடைகள் ஆசாரியனான ஆரோனும் அவன் மகன்களும் அணிவதற்குரியவை. அவர்கள் ஆசாரியராகப் பணியாற்றும் போது இந்த விசேஷ ஆடைகளை அணிவார்கள்” என்றான். |
20 | இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயிடமிருந்து புறப்பட்டு சென்றனர். |
21 | கர்த்தருக்கு காணிக்கைகளைக் கொடுக்க விரும்பியவர்கள் அனைவரும் கொண்டு வந்தனர். ஆசாரிப்புக் கூடாரம், அதிலுள்ள பொருட்கள், விசேஷ ஆடைகள் ஆகியவற்றைச் செய்வதற்கு இப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. |
22 | பல வகை பொன் அணிகலன்களைக் கொடுக்க விரும்பிய தாராள மனமுள்ள ஆண்களும், பெண்களும் அவற்றைக் கொண்டு வந்தனர். அவர்கள் ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், மற்றும் பிற அணிகலன்களைக் கொண்டு வந்தார்கள். கர்த்தருக்காக தம் ஆபரணங்களை அவர்கள் கொடுத்தனர். இது கர்த்தருக்கு விசேஷ காணிக்கையாகும். |
23 | மெல்லிய துகில், மற்றும் இளநீல இரத்தாம்பர, சிவப்பு நூல் வைத்திருந்தவர்கள் அனைவரும் அவற்றைக் கர்த்தருக்காகக் கொண்டு வந்தார்கள். மேலும் ஆட்டுத் தோலோ, சிவப்புச் சாயமிட்ட செம்மறியாட்டுத் தோலோ அல்லது பதனிடப்பட்ட மெல்லிய தோலோ வைத்திருந்தவர்கள் அதைக் கர்த்தருக்காகக் கொண்டு வந்தனர். |
24 | வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றைக் கொடுக்க விரும்பியவர்கள், கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தனர். சீத்திம் மரத்தை வைத்திருந்தவர்கள் அதைக் கர்த்தருக்குக் கொண்டுவந்து கொடுத்தார்கள். |
25 | கலைத்திறன் வாய்ந்த ஒவ்வொரு பெண்ணும் மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நிற நூல்களையும் தயாரித்தனர். |
26 | திறமை மிகுந்தவர்களும், உதவிசெய்ய விரும்பிய எல்லா பெண்களும் வெள்ளாட்டு மயிரால் ஆடைகளைச் செய்தனர். |
27 | தலைவர்கள் கோமேதகக் கற்களையும் பிற விலையுயர்ந்த கற்களையும் கொண்டுவந்தனர். ஆசாரியரின் ஏபோத்திலும் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திலும் இவை வைக்கப்பட்டன. |
28 | ஜனங்கள் தூபவர்க்க பொருட்களையும், ஒலிவ எண்ணெயையும் கொண்டு வந்தனர். நறுமணப் பொருள்களுக்கும், அபிஷேக எண்ணெய்க்கும், குத்துவிளக்கின் எண்ணெய்க்கும் இவை பயன்படுத்தப்பட்டன. |
29 | உதவிசெய்ய விரும்பிய இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். இவ்வன்பளிப்புகளை அவர்கள் விரும்பிக் கொடுத்ததால் தாராளமாகக் கொடுத்தார்கள். கர்த்தர் மோசேக்கும், அவனது ஜனங்களுக்கும் செய்யுமாறு கட்டளையிட்ட எல்லாப் பொருட்களையும் செய்வதற்கு இப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. |
30 | பின் மோசே இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, “பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தைச் சேர்ந்த ஊர் என்பவனின் குமாரனாகிய, ஊரியின் மகனான பெசலெயேலை தெரிந்தெடுத்துள்ளார். |
31 | தேவ ஆவியால் பெசலெயேலை நிரப்பியுள்ளார். பலவகை காரியங்களையும் செய்யவல்ல திறனையும், அறிவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார். |
32 | அவன் பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றால் பொருள்களைச் செய்து அவற்றை வடிவமைக்க வல்லவன். |
33 | கற்களைச் செதுக்கி அவற்றில் ஆபரணங்களைச் செய்யமுடியும். பெசலெயேலுக்கு மரவேலைகள் அனைத்தும் தெரியும். |
34 | பிறருக்குக் கற்பிக்கும்படியான விசேஷ திறமைகளைக் கர்த்தர் பெசலேயேலுக்கும், அகோலியாபிற்கும் (தாண் கோத்திரத்து அகிசமாகின் மகன்.) கொடுத்திருக்கிறார். |
35 | எல்லா வகை வேலைகளையும் செய்யும் ஆற்றலைக் கர்த்தர் இவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். தச்சு, உலோக வேலைகளையும் அவர்கள் செய்வார்கள். இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலாலும், மெல்லிய துகிலாலும் ஆடைகளைச் சித்திர வேலைப்பாடுகளோடு நெய்வதில் வல்லவர்கள். கம்பளியும் அவர்களால் நெய்ய முடிந்தது. |