1 | ஆனால் தேவன் நோவாவை மறக்கவில்லை. தேவன் அவனையும் அவனது குடும்பத்தினரையும் அவனோடு கப்பலிலுள்ள விலங்குகளையும் நினைவுகூர்ந்தார். பூமியின்மீது காற்று வீசுமாறு செய்தார். தண்ணீரெல்லாம் மறையத்தொடங்கியது. |
2 | வானிலிருந்து பெய்த மழை நின்றது. |
3 | பூமியின் மீதிருந்த தண்ணீர் கீழே செல்லத் துவங்கியது. 150 நாட்கள் ஆனதும் மீண்டும் கப்பல் பூமியைத் தொடுகிற அளவிற்குக் குறைந்து போனது. |
4 | கப்பல் அரராத் என்ற மலைமீது அமர்ந்தது. அது ஏழாவது மாதத்தின் 17வது நாள். |
5 | வெள்ளமானது மேலும் மேலும் கீழே போயிற்று. பத்தாவது மாதத்தின் முதல் நாளில் அனைத்து மலைகளின் மேல்பாகமெல்லாம் தெரிய ஆரம்பித்தது. |
6 | நாற்பது நாட்களுக்குப் பிறகு நோவா கப்பலின் ஜன்னலைத் திறந்து, |
7 | ஒரு காகத்தை வெளியே அனுப்பினான். அது பூமியிலுள்ள தண்ணீர் வற்றிப்போகும்வரை போவதும் வருவதுமாக இருந்தது. |
8 | நோவா ஒரு புறாவையும் வெளியே அனுப்பினான். அது தான் தங்கிட ஒரு வறண்ட இடத்தைக் கண்டுக்கொள்ளும் என எண்ணினான். இதன் மூலம் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டதா என்பதை அறிந்துகொள்ளலாம் என நினைத்தான். |
9 | ஆனால் தண்ணீர் இன்னும் பூமியில் பரவியிருந்தது. எனவே புறா மீண்டும் கப்பலுக்கே திரும்பி வந்தது. நோவா அதனைத் தன் கையை நீட்டிப் பிடித்து கப்பலுக்குள் சேர்த்துக் கொண்டான். |
10 | ஏழு நாட்களானதும் நோவா மீண்டும் புறாவை அனுப்பினான். |
11 | அன்று மாலையில் அப்புறா மீண்டும் திரும்பி வந்தது. அதன் வாயில் ஒலிவ மரத்தின் புதிய இலை இருந்தது. இதன் மூலம் அவன் தண்ணீர் வற்றிவிட்டது என்பதை அறிந்துக்கொண்டான். |
12 | மேலும் 7 நாட்கள் ஆனதும் மீண்டும் புறாவை வெளியே அனுப்பினான். ஆனால் அது திரும்பி வரவே இல்லை. |
13 | அதன் பிறகு நோவா கப்பலின் கதவைத் திறந்தான். தரை காய்ந்துபோனதை நோவா தெரிந்துகொண்டான். இதுதான் அந்த ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளாக ஆயிற்று. நோவா 601 வயதுடையவன் ஆனான். |
14 | இரண்டாவது மாதத்தின் 27வது நாளில் தரை முழுவதும் நன்றாகக் காய்ந்துவிட்டது. |
15 | பிறகு தேவன் நோவாவிடம், |
16 | “நீயும் உன் மனைவியும் உன் மகன்களும் அவர்களின் மனைவியரும் இப்போது கப்பலை விட்டு வெளியே வாருங்கள். |
17 | உங்களோடுள்ள அனைத்தையும் வெளியே கொண்டு வாருங்கள். பறவைகள், விலங்குகள், ஊர்வன அனைத்தும் மீண்டும் குட்டிகளும் குஞ்சுகளும் இட்டு பூமியை நிரப்பட்டும்” என்றார். |
18 | எனவே நோவா தன் மனைவி, மகன்கள், மருமகள்கள் ஆகியோரோடு வெளியே வந்தான். |
19 | கப்பலிலுள்ள அனைத்து மிருகங்களும் பறவைகளும் ஊர்வனவும் எல்லா விலங்கினங்களும் கப்பலை விட்டு ஜோடிகளாக வெளியே வந்தன. |
20 | பிறகு நோவா கர்த்தருக்கு ஓர் பலிபீடத்தைக் கட்டினான். அவன் பலிக்குரிய சுத்தமான மிருகங்களையும், பறவைகளையும் தேர்ந்தெடுத்து தேவனுக்குப் பலியிட்டான். |
21 | கர்த்தர் அதன் வாசனையை முகர்ந்தார். அது அவருக்கு விருப்பமாக இருந்தது. கர்த்தர் தமக்குள், “மனிதர்களைத் தண்டிக்க நான் மீண்டும் இது போன்று பூமியைச் சபிக்கமாட்டேன். ஜனங்கள் இளமை முதலாகவே பாவத்தில் இருக்கிறார்கள். நான் செய்ததுபோல, மீண்டும் ஒருமுறை உயிர்களை அழிக்கமாட்டேன். |
22 | பூமி தொடர்ந்து இருக்கும் காலம்வரை நடுவதற்கென்று ஒரு காலமும், அறுவடைக்கென்று ஒரு காலமும் இருக்கும். பூமியில் குளிரும் வெப்பமும், கோடையும் வசந்தமும், இரவும் பகலும் இருக்கும்” என்றார். |