1 | யோசேப்பை வாங்கிய வியாபாரிகள் அவனை எகிப்தில் பார்வோனின் படைத் தலைவன் போத்திபாரிடம் விற்றார்கள். |
2 | ஆனால் கர்த்தர் அவனுக்கு உதவினார். யோசேப்பு ஒரு வெற்றியுள்ள மனிதன் ஆனான். அவன் தன் எஜமானனின் வீட்டில் வசித்தான். |
3 | கர்த்தர் யோசேப்போடு இருப்பதையும், அவன் செய்கிற எல்லாவற்றிலும் கர்த்தரின் உதவியால் வெற்றி பெறுவதையும் பார்த்தான். |
4 | அதனால் யோசேப்பைப்பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். எனவே, தனக்காக யோசேப்பு வேலை செய்வதை அனுமதித்ததுடன், தன் வீட்டைக் கவனித்துக் கொள்ளவும் வைத்தான். போத்திபாருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் யோசேப்பு ஆளுகை செய்தான். |
5 | யோசேப்பைத் தனது வீடு முழுவதற்கும் அதிகாரியாக்கியதும் கர்த்தர் அந்த வீட்டையும், போத்திபாருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார். இவை அனைத்தையும் கர்த்தர் யோசேப்புக்காகச் செய்தார். போத்திப்பாருக்குரிய வீடு மற்றும் வயல்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். |
6 | ஆகவே போத்திபார் யோசேப்பிற்கு வீட்டிலுள்ள எல்லா பொறுப்புகளையும் கொடுத்துவிட்டான். அவன் உண்ணும் உணவைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. மனைவியுடன் பாவம் செய்ய மறுத்தல் யோசேப்பு கம்பீரமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தான். |
7 | கொஞ்சக் காலம் ஆனதும், யோசேப்பின் எஜமானனின் மனைவி யோசேப்பு மீது ஆசைப்பட ஆரம்பித்தாள். ஒரு நாள் அவனிடம், “என்னோடு பாலின உறவு கொள்ள வா” என்றாள். |
8 | ஆனால் யோசேப்பு மறுத்துவிட்டான். “என் எஜமானன் என்னை நம்பி வீட்டிலுள்ள எல்லாவற்றையும் ஒப்படைத்திருக்கிறார். |
9 | என் எஜமானன் இந்த வீட்டில் ஏறக்குறைய என்னைத் தனக்குச் சமமாக வைத்திருக்கிறார். நான் அவரது மனைவியோடு பாலின உறவு கொள்ளக் கூடாது. இது தவறு, தேவனுக்கு விரோதமான பாவம்” என்று கூறினான். |
10 | அவள் ஒவ்வொரு நாளும் யோசேப்போடு பேசி அவனை அழைத்தாள். அவனோ அவளோடு பாவத்தில் ஈடுபட மறுத்துவிட்டான். |
11 | ஒரு நாள் அவன் வீட்டிற்குள் வேலை செய்வதற்காகப் போனான். அப்போது வீட்டில் அவன் மட்டும் தான் இருந்தான். |
12 | அவனது எஜமானனின் மனைவி அவனது அங்கியை பற்றிப் பிடித்து, “என்னோடு பாலின உறவுகொள்ள வா” என்றாள். எனவே அவன் வேகமாக வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டான். அப்போது அவனது அங்கி அவளது கையில் சிக்கிக்கொண்டது. |
13 | அவள் அதனைக் கவனித்தாள். நடந்ததைப்பற்றி அவள் பொய்யாகச் சொல்லத் திட்டமிட்டாள். |
14 | அவள் வீட்டிலுள்ள வேலைக்காரர்களை அழைத்து “பாருங்கள், நம்மை அவமானம் செய்வதற்காக இந்த எபிரெய அடிமை கொண்டு வரப்பட்டுள்ளான். அவன் வந்து என்னோடு படுக்க முயன்றான். |
15 | நான் சத்தமிட்டதால் அவன் ஓடிப் போய்விட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது” என்று முறையிட்டாள். |
16 | அவள் அந்த அங்கியை அவள் புருஷன் வரும் வரை வைத்திருந்து, |
17 | அவனிடமும் அதே கதையைக் கூறினாள். “நீங்கள் கொண்டுவந்த எபிரெய அடிமை என்னைக் கெடுக்கப் பார்த்தான். |
18 | அவன் என்னருகில் வந்ததும் நான் சத்தமிட்டேன், அவன் ஓடிவிட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது” என்றாள். |
19 | யோசேப்பின் எஜமானன் அவனது மனைவி சொன்னதைக் கேட்டு கோபம் கொண்டான். |
20 | அரசனுடைய பகைவர்களைப் போடுவதற்கென்றிருந்த சிறையிலே போத்திபார் யோசேப்பைப் போட்டுவிட்டான். யோசேப்பு அங்கேயே தங்கினான். |
21 | ஆனால் கர்த்தர் யோசேப்போடு இருந்தார். அவர் தொடர்ந்து தனது இரக்கத்தை அவன்மீது காட்டி வந்தார். சிறையதிகாரி யோசேப்பை விரும்ப ஆரம்பித்தான். |
22 | யோசேப்பை கைதிகளைக் கண் காணிப்பவனாக நியமித்தான். அங்கு நடப்பவற்றுக்கு அவன் பொறுப்பாளியாக்கப்பட்டான். |
23 | அந்த அதிகாரி அவனை முழுமையாக நம்பினான். கர்த்தர் யோசேப்போடு இருந்ததால் இது இவ்வாறு நடந்தது. அவன் செய்கிற ஒவ்வொரு காரியத்தையும் வெற்றிகரமாக்க கர்த்தர் உதவினார். |