1 | இது ஏசாவின் குடும்ப வரலாறு. |
2 | ஏசா கானான் நாட்டுப் பெண்களை மணந்து கொண்டான். அவன் ஏத்தியனான ஏலோனின் மகளான ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாளையும் முதலில் மணந்து கொண்டான். |
3 | இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமான பஸ்மாத்தையும் பிறகு மணந்தான். |
4 | ஏசாவுக்கும் ஆதாளுக்கும் எலீப்பாஸ் என்ற மகன் பிறந்தான். பஸ்மாத்துக்கு ரெகுவேல் என்ற மகன் பிறந்தான். |
5 | அகோலி பாமாளுக்கு எயூஷ்,யாலாம், கோரா என்ற மூன்று மகன்கள் பிறந்தனர். ஏசாவின் இந்தப் பிள்ளைகள் கானான் நிலப் பகுதியிலேயே பிறந்தனர். |
6 | யாக்கோபு மற்றும் ஏசா ஆகியோரின் குடும்பங்கள் கானான் நாட்டில் வளர்ந்து மிகப் பெரிதாயின. எனவே ஏசா தன் சகோதரன் யாக்கோபை விட்டு விலகிப்போனான். |
7 | ஏசா தனது மனைவியரையும், பிள்ளைகளையும், அடிமைகளையும், பசுக்கள் மற்றும் மிருகங்களையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டு சேயீர் எனும் மலைப் பகுதிக்குச் சென்றான். |
8 | (ஏசாவுக்கு ஏதோம் என்ற பேரும் உண்டு. சேயீர் நாட்டுக்கும் இந்தப் பெயர் உண்டு) |
9 | ஏசா ஏதோம் ஜனங்களுக்குத் தந்தையானான். சேயீர் எனும் மலைப் பகுதியில் வாழ்ந்த ஏசா குடும்பத்தினரின் பெயர்கள் பின்வருமாறு: |
10 | ஏசாவுக்கும் ஆதாவுக்கும் பிறந்த மகன் எலிப்பாஸ். ஏசாவுக்கும் பஸ்மாத்துக்கும் பிறந்த மகன் ரெகுவேல். |
11 | எலிப்பாசுக்கு தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் எனும் ஐந்து மகன்கள். |
12 | எலிப் பாசுக்குத் திம்னா என்ற வேலைக்காரி இருந்தாள். அவளுக்கும் அவனுக்கும் அமலேக்கு என்ற மகன் பிறந்தான். |
13 | ரெகுவேலுக்கு நகாத், செராகு, சம்மா, மீசா என்று நான்கு மகன்கள். இவர்கள் ஏசாவுக்கு பஸ்மாத் மூலம் வந்த பேரக்குழந்தைகள். |
14 | ஏசாவின் மூன்றாவது மனைவியான சிபியோனின் மகள் ஆனாகினின் மகளான அகோலிபாமாள் எயூஷ், யாலாம், கோராகு எனும் மகன்களைப் பெற்றாள். |
15 | ஏசாவின் மகன்களில் கீழ்க்கண்ட கோத்திரங்கள் தோன்றினர். ஏசாவின் மூத்த மகன் எலீப்பாஸ். எலீப் பாசிலிருந்து தேமான், ஓமார், செப்போ, கேனாஸ், |
16 | கோராகு, கத்தாம், அமலேக்கு என்பவர்கள். இவர்கள் ஏதோம் நாட்டில் எலீப்பாசின் சந்ததியும் ஏசாவின் மனைவி வழி வந்த ஆதாளின் கோத்திரங்கள். |
17 | ஏசாவின் மகனாகிய ரெகுவேலின் மகன்களில் நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள் முக்கியமானவர்கள். இவர்கள் ஏதோம் நாட்டில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகனுமாயிருந்த பிரபுக்கள். |
18 | ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் மகன்கள் எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள். இவர்கள் ஆனாகின் மகளும் ஏசாவின் மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த தலைவர்கள். |
19 | இவர்கள் எல்லோரும் ஏசாவின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். |
20 | அந்த நாட்டில் ஏசாவுக்கு முன் வாழ்ந்த சேயீருக்கு லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, |
21 | திஷோன், ஏதசேர், திஷான் என்னும் மகன்கள் இருந்தனர். இவர்கள் ஏதோம் நாட்டில் சேயீரின் மகன்களாகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள். |
22 | லோத்தானுக்கு ஓரி, ஏமாம் எனும் மகன்கள் இருந்தனர். லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள். |
23 | சோபாலினுக்கு அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் எனும் மகன்கள் இருந்தனர். |
24 | சிபியோனுக்கு அயா, ஆனாகு எனும் மகன்கள் இருந்தனர். ஆனாகு தன் தகப்பனாகிய சிபியோனின் கழுதைகளைப் பாலைவனத்தில் மேய்க்கையில் வெந்நீர் ஊற்றுகளைக் கண்டுபிடித்தான். |
25 | ஆனாகினுக்கு திஷோன், அகோலிபாமாள் எனும் பிள்ளைகள் இருந்தனர். |
26 | திஷோனுக்கு எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் எனும் மகன்கள் இருந்தனர். |
27 | ஏத்சேனுக்கு பில்கான், சகவான், அக்கான் என்னும் மகன்கள் இருந்தனர். |
28 | திஷானுக்கு ஊத்ஸ், அரான், என்னும் மகன்கள் இருந்தனர். |
29 | ஓரியரின் சந்ததியிலே லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, |
30 | திஷோன், ஏத்சேர், திஷான் என்பவகள் தலைவர்கள் ஆனார்கள். இவர்களே சேயீர் நாட்டிலே தங்கள் பகுதிகளில் இருந்த ஓரியர் சந்ததியிலே உள்ள பிரபுக்கள். |
31 | அப்பொழுது ஏதோமிலே இராஜாக்கள் இருந்தார்கள். இஸ்ரவேலுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஏதோமில் பல மன்னர்கள் இருந்தனர். |
32 | பேயோர் எனும் அரசனின் மகனாகிய பேலா ஏதோமில் ஆட்சி செலுத்தி வந்தான். அவன் தின்காபா எனும் நகரிலிருந்து ஆண்டான். |
33 | பேலா மரித்ததும் யோபாப் அரசன் ஆனான். இவன் போஸ்றாவிலுள்ள சேராகுவின் மகன். |
34 | யோபாப் மரித்ததும் ஊசாம் அரசாண்டான். இவன் தேமானிய நாட்டினன். |
35 | ஊசாம் மரித்ததும் ஆதாத் அரசாண்டான். இவன் பேதாதின் மகன். (ஆதாத் மோவாபிய நாட்டிலே மீதியானியரை வெற்றி பெற்றவன்) இவன் ஆவீத் நாட்டிலிருந்து வந்தவன். |
36 | ஆதாத் மரித்தபின் சம்லா அரசாண்டான். இவன் மஸ்ரேக்கா ஊரைச் சார்ந்தவன். |
37 | சம்லா மரித்தபின் சவுல் அரசாண்டான். இவன் அங்குள்ள ஆற்றின் அருகிலுள்ள ரெகொபோத் ஊரைச் சேர்ந்தவன். |
38 | சவுல் மரித்தபின் பாகால்கானான் அரசாண்டான். இவன் அக்போருடைய மகன். |
39 | பாகால் கானான் மரித்தபின் ஆதார் அரசாண்டான். இவன் பாகு எனும் நகரைச் சேர்ந்தவன். இவனது மனைவியின் பெயர் மெகேதபேல். இவள் மத்ரேத் மற்றும் மேசகாவின் மகள். |
40 | ஏசாவே ஏதோமிய குடும்பங்களின் தந்தை ஆவான். ஏசாவின் வம்சத்தில் திம்னா, அல்வா, ஏதேத், |
41 | அகோலிபாமா, ஏலா, பினோன், |
42 | கேனாஸ், தேமான், மிப்சர், |
43 | மக்தியேல், ஈராம் எனும் பிரபுக்கள் இருந்தனர். ஒவ்வொரு குடும்பமும் அந்தந்த குடும்பப் பெயர்களால் அழைக்கப்படுகிற பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். |