1 | பிறகு யாக்கோபு தன் பயணத்தைத் தொடர்ந்து, கிழக்கே உள்ள நாட்டுக்குப் போனான். |
2 | யாக்கோபு வயல்வெளியில் ஒரு கிணற்றைப் பார்த்தான். அக்கிணற்றின் அருகில் மூன்று ஆட்டு மந்தைகள் மடக்கப்பட்டிருப்பதையும் பார்த்தான். அக்கிணறு தான் ஆடுகள் தண்ணீர் குடிக்கும் இடம் ஆகும். கிணற்றின் வாயானது ஒரு பெரிய கல்லால் அடைக்கப்பட்டிருந்தது. |
3 | ஆடுகள் எல்லாம் அங்கு ஒன்று சேர்ந்ததும் மேய்ப்பர்கள் கிணற்றை மூடியுள்ள பாறையை அகற்றி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள். ஆடுகள் வயிறு நிறைய தண்ணீர் குடித்த பிறகு மேய்ப்பர்கள் அக்கிணற்றைப் பாறையால் மூடி வைப்பார்கள். |
4 | யாக்கோபு அந்த மேய்ப்பர்களிடம், “சகோதரர்களே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். மேய்ப்பர்கள், “நாங்கள் ஆரானிலிருந்து வருகிறோம்” என்றார்கள். |
5 | பிறகு யாக்கோபு “உங்களுக்கு லாபா னைத் தெரியுமா? அவர் நாகோரின் மகன்” என்று கேட்டான். மேய்ப்பர்கள் “எங்களுக் குத் தெரியும்” என்று பதில் சொன்னார்கள். |
6 | “அவர் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டான் யாக்கோபு. அதற்கு அவர்கள் “அவர் நன்றாக இருக்கிறார். அதோ பாரும் அவரது மகள் ராகேல் ஆட்டு மந்தையோடு வந்து கொண்டிருக்கிறாள்” என்றார்கள். |
7 | யாக்கோபு, “சூரியன் அஸ்தமிக்க இன்னும் பொழுது இருக்கிறதே. ஆடுகளை இன்னும் கொஞ்சம் மேய்த்து தண்ணீர் காட்டலாமே! இது ஆடுகளை அடைக்கிற நேரமில்லையே. தண்ணீர் காட்டிவிட்டு மீண்டும் அவற்றை, வயல்வெளிக்கு அனுப்புங்கள்” என்றான். |
8 | அதற்கு மேய்ப்பர்கள், “எல்லா ஆடுகளும் சேரு முன்னால் நாங்கள் அவ்வாறு செய்யக் கூடாது. சேர்ந்த பின்னரே கிணற்றின் கல்லை அகற்றுவோம் அப்போது எல்லா ஆடுகளும் தண்ணீர் குடிக்கும்” என்றனர். |
9 | யாக்கோபு மேய்ப்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போதே ராகேல் தன் தந்தையின் ஆடுகளோடு வந்தாள். (அவளது வேலையே ஆடு மேய்ப்பது தான்.) |
10 | ராகேல் லாபானின் மகள். லாபான் யாக்கோபின் தாயான ரெபெக்காளின் சகோதரன். அவன் ராரேலைக் கண்டதும் கிணற்றின் மேலுள்ள கல்லை நகர்த்தி ஆடுகள் தண்ணீர் குடிக்க உதவினான். |
11 | பிறகு அவன் ராகேலை முத்தமிட்டு, அழுதான். |
12 | அவன் அவளிடம், தான் அவளது தந்தையின் குடும்பத்திலிருந்து வந்திருப்பதாகச் சொன்னான். தான் ரெபெக்காளின் மகன் என்றான். ராகேல் ஓடிப் போய் தந்தையிடம் கூறினாள். |
13 | லாபான் தன் சகோதரியின் மகன் யாக்கோபைப் பற்றிக் கேள்விப்பட்டதும் அவனைச் சந்திக்க ஓடி வந்தான். அவனை அணைத்து முத்தமிட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றான். யாக்கோபு நடந்தவற்றையெல்லாம் சொன்னான். |
14 | அப்பொழுது லாபான் “இது ஆச்சரியமானது. நீ எனது சொந்தக் குடும்பத்தில் உள்ளவன்” என்றான். எனவே யாக்கோபு அங்கு ஒரு மாத காலம் தங்கி இருந்தான். |
15 | ஒரு நாள் லாபான் யாக்கோபிடம், “நீ என்னிடம் தொடர்ந்து சம்பளமில்லாமல் வேலை செய்து கொண்டிருப்பது சரியல்ல. நீ எனது அடிமையல்ல, உறவினன். நான் உனக்கு என்ன சம்பளம் தரட்டும்?” என்று கேட்டான். |
16 | லாபானுக்கு இரண்டு பெண்கள் இருந்தனர். மூத்தவள் பெயர் லேயாள் இளையவள் பெயர் ராகேல். |
17 | ராகேல் மிக அழகானவள். லேயாளின் கண்களோ கூச்சம் உடையவை. |
18 | யாக்கோபு ராகேலை நேசித்தான். எனவே அவன் லாபானிடம், “உங்கள் மகள் ராகேலை மணமுடிக்க நீங்கள் அனுமதித்தால் நான் ஏழு ஆண்டுகள் உங்களுக்காக வேலை செய்யத் தயார்” என்றான். |
19 | அதற்கு லாபான், “அவள் வேறு யாரை யாவது மணந்துகொள்வதைவிட உன்னை மணந்து கொள்வது அவளுக்கு நல்லது” என்றான். |
20 | அதனால் யாக்கோபு அங்கு ஏழு ஆண்டுகள் தங்கி வேலை பார்த்தான். ஆனால் அவன் ராகேலை நேசித்ததால் ஆண்டுகள் வேகமாக முடிந்துவிட்டன. |
21 | ஏழு ஆண்டுகள் ஆனதும் அவன் லாபானிடம், “ராகேலை எனக்குத் தாருங்கள். நான் அவளை மணமுடிக்க வேண்டும். நான் வேலை செய்ய வேண்டிய காலமும் முடிந்துவிட்டது” என்றான். |
22 | அதனால் அந்த இடத்திலுள்ள எல்லா ஜனங்களுக்கும் லாபான் ஒரு விருந்து கொடுத்தான். |
23 | அன்று இரவு அவன் தன் மூத்த மகள் லேயாளை யாக்கோபிடம் அழைத்து வந்தான். இருவரும் பாலின உறவு கொண்டனர். |
24 | (லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளை லேயாளுக்கு வேலைக்காரியாக ஆக்கி இருந்தான்.) |
25 | காலையில் எழுந்ததும் யாக்கோபு இரவு முழுக்க தன்னோடு இருந்தது லேயாள் என்பதை அறிந்து கொண்டான். லாபானிடம் சென்று “என்னை ஏமாற்றிவிட்டீர்கள். நான் ராகேலை மணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஏழு ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறேன். ஏன் என்னை ஏமாற்றினீர்கள்?” என்று கேட்டான். |
26 | லாபான், “மூத்தவள் இருக்கும்போது இளையவளுக்கு மணம் முடிக்க எங்கள் நாட்டில் அனுமதிக்கமாட்டோம். |
27 | ஆனால் திருமணச் சடங்குகளை ஒரு வாரத்திற்குத் தொடர்ந்தபின் நான் உனக்கு ராகேலையும் திருமணம் செய்து கொள்ளத் தருவேன். ஆனால் நீ இன்னும் ஏழு ஆண்டுகள் எனக்குப் பணியாற்ற வேண்டும்” என்றான். |
28 | எனவே யாக்கோபு அதற்கு ஒப்புக் கொண்டு ஒரு வாரத்தைக் கழித்தான். லாபான் ராகேலை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். |
29 | (தனது வேலைக்காரியான பில்காளை ராகேலுக்கு வேலைக் காரியாகக் கொடுத்தான்.) |
30 | யாக்கோபு ராகேலோடும் பாலின உறவு கொண்டான். அவன் லேயாளைவிட ராகேலைப் பெரிதும் நேசித்ததால் மேலும் ஏழு ஆண்டுகள் அங்கு வேலை செய்தான். |
31 | யாக்கோபு லேயாளைவிட ராகேலை அதிகமாக நேசிப்பதைக் கர்த்தர் கண்டார். எனவே லேயாள் மட்டுமே கருத்தரிக்குமாறு கர்த்தர் செய்தார். ஆனால் ராகேலோ மலடியாய் இருந்தாள். |
32 | லேயாளுக்கு ஓர் மகன் பிறந்தான். அவள் அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள். “கர்த்தர் நான் படும் தொல்லைகளைக் கண்டார். என் கணவன் என்னை நேசிக்காமல் இருந்தார். இப்போது ஒரு வேளை அவர் என்னை நேசிக்கலாம்” என்று நினைத்தாள். |
33 | லேயாள் மீண்டும் கர்ப்பமானாள். அவள் இன்னொரு மகனைப் பெற்றாள். அவனுக்கு சிமியோன் என்று பெயர் வைத்தாள். “நான் நேசிக்கப்படாததைக் கண்டு கர்த்தர் எனக்கு இன்னொரு மகனை கொடுத்தார்” என்று கூறினாள். |
34 | லேயாள் மீண்டும் கர்ப்பமாகி இன்னொரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவனுக்கு லேவி என்று பெயரிட்டாள். “இப்பொழுது என் கணவர் என்னை நிச்சயம் நேசிப்பார். நான் அவருக்கு மூன்று மகன்களைக் கொடுத்திருக்கிறேன்” என்றாள். |
35 | லேயாள் மேலும் ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு யூதா என்று பெயரிட்டாள். அவள், “நான் இப்போது கர்த்தரைத் துதிப்பேன்” என்றாள். பிறகு குழந்தை பெறுவது நின்றுவிட்டது. |