வேதாகமத்தை வாசி

ரூத் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?
2நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.
3நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப்போ; அந்த மனுஷன் புசித்துக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாமலிரு.
4அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.
5இதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.
6அவள் களத்திற்குப்போய், தன் மாமி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தாள்.
7போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெள்ளப்போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்டாள்.
8பாதி ராத்திரியிலே, அந்த மனுஷன் அருண்டு. திரும்பி, ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதைக் கண்டு,
9நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்.
10அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.
11இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.
12நான் சுதந்தரவாளி என்பது மெய்தான்; ஆனாலும் என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான்.
13இராத்திரிக்குத் தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணச் சம்மதித்தால் நல்லது, அவன் விவாகம்பண்ணட்டும்; அவன் உன்னை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தானேயாகில் நான் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலமட்டும் படுத்துக்கொண்டிரு என்றான்.
14அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்.
15அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப்பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான்.
16அவள் தன் மாமியினிடத்தில் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவளுக்கு விவரித்தாள்.
17மேலும் அவர், நீ உன் மாமியாரண்டைக்கு வெறுமையாய்ப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்.
18அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாற மாட்டான் என்றாள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.