1 | இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது: |
2 | உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது. |
3 | பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது. |
4 | ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது. |
5 | நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார். |
6 | தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார். |
7 | அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். |
8 | அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள். |
9 | பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத்துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான். |
10 | இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள். |
11 | இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள். |
12 | இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ்செத்து வேரற்றுப்போன மரங்களும், |
13 | தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. |
14 | ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், |
15 | தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெள்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். |
16 | இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப் பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள். |
17 | நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள். |
18 | கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. |
19 | இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே. |
20 | நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, |
21 | தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள். |
22 | அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம்பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து, |
23 | மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள். |
24 | வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், |
25 | தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். |