1 | உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்: |
2 | உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், |
3 | சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள். |
4 | அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள். |
5 | அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். |
6 | ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். |
7 | அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். |
8 | தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். |
9 | விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே. |
10 | கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; |
11 | அவருக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். |
12 | உங்களுக்குப் புத்திசொல்லும்படிக்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதி, எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன். |
13 | உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். |
14 | ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடே வாழ்த்துதல் செய்யுங்கள். கிறிஸ்து இயேவுக்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானமுண்டாவதாக. ஆமென். |