1 | உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் வேரற்றுப்போகப்பண்ணுவதினால், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அவர்கள் பட்டணங்களிலும் அவர்கள் வீடுகளிலும் குடியேறும்போது, |
2 | நீ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்துவைக்கக்கடவாய். |
3 | கொலைசெய்தவன் எவனும் அங்கே ஓடிப்போகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சுதந்தரிக்கப்பண்ணப்போகிற உன் தேசத்தின் எல்லையை நீ மூன்று பங்காகப் பகுத்து அதற்கு வழியை உண்டுபண்ணக்கடவாய். |
4 | கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன்தானே. |
5 | ஒருவன் விறகுவெட்ட மற்றொருவனோடே காட்டில் போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பை விட்டுக் கழன்று மற்றவன்மேல் பட்டதினால் அவன் இறந்துபோனால், |
6 | இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரிகையில் கொலைசெய்தவனை வழி தூரமாயிருக்கிறதினாலே பின்தொடர்ந்து பிடித்து, அவனைக் கொன்றுபோடாதபடிக்கு, இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக; இவன் அவனை முன்னே பகைக்காதபடியினால், இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை. |
7 | இதினிமித்தம் மூன்று பட்டணங்களை உனக்காகப் பிரித்துவைக்கக்கடவாய் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். |
8 | நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, எந்நாளும் அவர் வழிகளில் நடப்பதற்காக, இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு அதின்படி செய்து, |
9 | உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால், |
10 | அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுதிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடிக்கு, இந்த மூன்று பட்டணங்களும் அல்லாமல் இன்னும் மூன்று பட்டணங்களை ஏற்படுத்தக்கடவாய். |
11 | ஒருவன் பிறனொருவனைப் பகைத்து, அவனுக்குப் பதிவிருந்து, அவனுக்கு விரோதமாய் எழும்பி, அவன் சாகும்படி அவனை அடித்து, இந்தப் பட்டணங்களில் ஒன்றில் ஓடிப்போயிருப்பானாகில், |
12 | அந்தப் பட்டணத்தின் மூப்பர்கள் ஆள் அனுப்பி, அங்கேயிருந்து அவனைக் கொண்டுவரும்படி செய்து, அவன் சாகும்படிக்கு அவனை இரத்தப்பழி வாங்குகிறவன் கையில் ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். |
13 | உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; குற்றமில்லாத இரத்தப்பழியை இஸ்ரவேலை விட்டு விலக்கக்கடவாய்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய். |
14 | உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் உன் கைவசமாயிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை ஒற்றிப்போடாயாக. |
15 | ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும். |
16 | ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தும்படி, ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சி சொல்ல எழும்பினால், |
17 | வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக. |
18 | அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசாரணை செய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன்மேல் அபாண்டமாய்க் குற்றஞ்சாற்றினான் என்றும் கண்டால், |
19 | அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடியே அவனுக்குச் செய்யக்கடவீர்கள்; இவ்விதமாய்த் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக. |
20 | மற்றவர்களும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தீமையைச் செய்யாதிருப்பார்கள். |
21 | உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும். |