1 | ஏழாம் வருஷத்தின் முடிவிலே விடுதலைபண்ணுவாயாக. |
2 | விடுதலையின் விபரமாவது: பிறனுக்குக் கடன் கொடுத்தவன் எவனும், கர்த்தர் நியமித்த விடுதலை கூறப்பட்டபடியால், அந்தக் கடனைப் பிறன் கையிலாகிலும் தன் சகோதரன் கையிலாகிலும் தண்டாமல் விட்டுவிடக்கடவன். |
3 | அந்நிய ஜாதியான் கையிலே நீ கடனைத் தண்டலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடக்கடவது. |
4 | எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும்படியாக இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்பாயானால்., |
5 | உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார். |
6 | உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை. |
7 | உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், |
8 | அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக. |
9 | விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவுகொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும். |
10 | அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார். |
11 | தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். |
12 | உன் சதோதரனாகிய எபிரெய புருஷனாகிலும் எபிரெய ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவிக்கவேண்டும்; ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடுவாயாக. |
13 | அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாய் அனுப்பிவிடாமல், |
14 | உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும், உன் களத்திலும், உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக. |
15 | நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவு கூரக்கடவாய்; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன். |
16 | ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில், |
17 | நீ ஒரு கம்பியை எடுத்து, அவன் காதைக் கதவோடே சேர்த்துக் குத்துவாயாக; பின்பு அவன் என்றைக்கும் உனக்கு அடிமையாயிருக்கக்கடவன்; உன் அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யக்கடவாய். |
18 | அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு விசனமாய்க் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு ஈடாக ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவித்தானே; இப்படி உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார். |
19 | உன் ஆடுமாடுகளில் தலையீற்றாகிய ஆணையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கக்கடவாய்; உன் மாட்டின் தலையீற்றை வேலை கொள்ளாமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்தரியாமலும் இருப்பாயாக. |
20 | கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தலத்திலே வருஷந்தோறும் நீயும் உன் வீட்டாருமாய் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைப் புசிக்கக்கடவீர்கள். |
21 | அதற்கு முடம் குருடு முதலான யாதொரு பழுது இருந்தால், அதை உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிட வேண்டாம். |
22 | அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும், வெளிமானையும், புசிப்பதுபோலப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப்புசிக்கலாம். |
23 | அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடக்கடவாய். |