1 | சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. |
2 | இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். |
3 | அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன். |
4 | உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, |
5 | என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது. |
6 | அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, |
7 | உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். |
8 | அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. |
9 | எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; |
10 | நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார். |
11 | மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். |
12 | நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். |
13 | அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம். |
14 | ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். |
15 | ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். |
16 | கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது. |