1 | ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். |
2 | அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டு வந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். |
3 | தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும், யோவானையும் அவன் கண்டு பிச்சை கேட்டான். |
4 | பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். |
5 | அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். |
6 | அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி, |
7 | வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. |
8 | அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். |
9 | அவன் நடக்கிறதையும், தேவனைத்துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு: |
10 | தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். |
11 | குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள். |
12 | பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப்பார்க்கிறதென்ன? |
13 | ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள். |
14 | பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலை பண்ணவேண்டுமென்று கேட்டு, |
15 | ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். |
16 | அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப்பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது. |
17 | சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன். |
18 | கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார். |
19 | ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், |
20 | உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள். |
21 | உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும். |
22 | மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. |
23 | அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான். |
24 | சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள். |
25 | நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடேபண்ணின உடன்படிக்கைக்கும் புத்திரராயிருக்கிறீர்கள். |
26 | அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான். |