1 | அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப்பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார். |
2 | ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: |
3 | இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப்பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். |
4 | அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார். |
5 | பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்து சிலர் சொன்னபோது, |
6 | அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார். |
7 | அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள். |
8 | அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள். |
9 | யுத்தங்களையும் கலகங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார். |
10 | அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். |
11 | பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும். |
12 | இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள். |
13 | ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும். |
14 | ஆகையால் என்ன உத்தரவு சொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள். |
15 | உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன். |
16 | பெற்றோராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள். |
17 | என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். |
18 | ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது. |
19 | உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள். |
20 | எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். |
21 | அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும்கடவர்கள். |
22 | எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே. |
23 | அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும். |
24 | பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும். |
25 | சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். |
26 | வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோகும். |
27 | அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள். |
28 | இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார். |
29 | அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள். |
30 | அவைகள் தளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள். |
31 | அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள். |
32 | இவையெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். |
33 | வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. |
34 | உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். |
35 | பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். |
36 | ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். |
37 | அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்து, இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார். |
38 | ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள். |