வேதாகமத்தை வாசி

எண்ணாகமம் 30

                   
புத்தகங்களைக் காட்டு
1மோசே இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் தலைவரை நோக்கி: கர்த்தர் கட்டளையிடுவது என்னவென்றால்:
2ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்.
3தன் தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு பெண்பிள்ளை தன் சிறுவயதிலே கர்த்தருக்குப் பொருத்தனைபண்ணி யாதொரு காரியத்தைச் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டால்,
4அவள் செய்த பொருத்தனையையும், அவள் பண்ணிக்கொண்ட நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்டும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருப்பானானால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.
5அவள் செய்த பொருத்தனைகளையும், அவள் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்தால், அது நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய தகப்பன் வேண்டாம் என்று தடுத்தபடியால், கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.
6அவள் பொருத்தனை பண்ணும்போதும், தன் உதடுகளைத் திறந்து தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளும்போதும், அவளுக்குப் புருஷன் இருந்தால்,
7அப்பொழுது அவளுடைய புருஷன் அதைக் கேட்டிருந்தும், அதைக் கேள்விப்படுகிற நாளில் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தால், அவளுடைய பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.
8அவளுடைய புருஷன் அதைக் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்து, அவள் செய்த பொருத்தனையும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் செல்லாதபடி செய்தானேயானால், அப்பொழுது கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.
9ஒரு விதவையாவது, தள்ளப்பட்டுப்போன ஒரு ஸ்திரீயாவது தன் ஆத்துமாவை எந்த நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளுகிறாளோ அந்த நிபந்தனை நிறைவேறவேண்டும்.
10அவள் தன் புருஷனுடைய வீட்டில் யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும்,
11அவளுடைய புருஷன் அதைக் கேட்டும் அவளுக்கு அதை வேண்டாமென்று தடுக்காமல் மவுனமாயிருந்தால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின எல்லா நிபந்தனைகளும் நிறைவேறவேண்டும்.
12அவளுடைய புருஷன் அவைகளைக்கேட்ட நாளில் அவைகளைச் செல்லாதபடி பண்ணினால், அப்பொழுது அவள் செய்த பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவையுட்படுத்தின நிபந்தனையைக்குறித்து அவள் வாயிலிருந்து புறப்பட்டதொன்றும் நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய புருஷன் அவைகளைச் செல்லாதபடி பண்ணினதினாலே கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.
13எந்தப் பொருத்தனையையும், ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்தும்படி செய்யப்பட்ட எந்த ஆணையையும், அவளுடைய புருஷன் ஸ்திரப்படுத்தவுங்கூடும், செல்லாதபடி பண்ணவும் கூடும்.
14அவளுடைய புருஷன் ஒருநாளும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தானாகில், அவன் அவளுடைய எல்லாப் பொருத்தனைகளையும், அவள் பேரிலிருக்கிற அவளுடைய எல்லா நிபந்தனைகளையும் ஸ்திரப்படுத்துகிறான்; அவன் அதைக் கேட்ட நாளிலே அவளுக்கு ஒன்றும் சொல்லாமற்போனதினால், அவைகளை ஸ்திரப்படுத்துகிறான்.
15அவன் அவைகளைக் கேட்டபின்பு செல்லாதபடி பண்ணினால், அவளுடைய அக்கிரமத்தை அவன் சுமப்பான் என்றார்.
16புருஷனையும், ஸ்திரீயையும், தகப்பனையும், தகப்பனுடைய வீட்டில் சிறு வயதில் இருக்கிற அவன் குமாரத்தியையும் குறித்து, கர்த்தர் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.