1 | பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது. |
2 | அவர்: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன். |
3 | அந்நாளிலே தேவாலயப்பாட்டுகள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பலில்லாமல் எறிந்துவிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். |
4 | தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண, எளியவர்களை விழுங்கி: |
5 | நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரரைப் பணத்துக்கும், எளியவர்களை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் கொள்ளும்படிக்கும், தானியத்தின் பதரை விற்கும்படிக்கும், |
6 | நாங்கள் தவசம் விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் பண்டசாலைகளைத் திறக்கத்தக்கதாக ஓய்வு நாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள். |
7 | அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார். |
8 | இதினிமித்தம் தேசம் அதிரவும் அதின் குடிகள் எல்லாம் துக்கிக்கவும், எங்கும் நதிகளாய்ப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ? |
9 | அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி, பட்டப்பகலிலே தேசத்தை அந்தகாரப்படுத்தி, |
10 | உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுகளையெல்லாம் புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமானமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். |
11 | இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக்குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். |
12 | அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசைதொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள். |
13 | அந்நாளிலே சௌந்தரியமுள்ள கன்னிகைகளும் வாலிபரும் தாகத்தினால் சோர்ந்துபோவார்கள். |
14 | தாணே! உன் தேவனுடைய ஜீவனைக்கொண்டும், பெயெர்செபா மார்க்கத்தின் தேவனுடைய ஜீவனைக்கொண்டும் என்று சொல்லி, சமாரியாவின் தோஷத்தின்மேல் ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்; இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள் என்றார். |