1 | குற்றநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது. |
2 | சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரணபலியும் கொல்லப்படவேண்டும்; அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, |
3 | அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், |
4 | இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறுகுடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடே கூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக. |
5 | இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி. |
6 | ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது. |
7 | பாவநிவாரணபலி எப்படியோ குற்ற நிவாரணபலியும் அப்படியே; அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே; அதினாலே பாவநிவிர்த்தி செய்த ஆசாரியனை அது சேரும். |
8 | ஒருவருடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும். |
9 | அடுப்பிலே பாகம்பண்ணப்பட்டதும், சட்டியிலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான போஜனபலி யாவும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாயிருக்கும். |
10 | எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல போஜனபலியும் ஆரோனுடைய குமாரர் யாவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும். |
11 | கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் பிரமாணம் என்னவென்றால், |
12 | அதை ஸ்தோத்திரத்துக்காகச் செலுத்துவானானால், அவன் ஸ்தோத்திர பலியோடுகூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன். |
13 | அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியோடுகூட படைக்கவேண்டும். |
14 | அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதானபலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும். |
15 | சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றைத்தினமே புசிக்கப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலமட்டும் வைக்கப்படலாகாது. |
16 | அவன் செலுத்தும் பலி பொருத்தனையாயாவது உற்சாகபலியாயாவது இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியானது மறுநாளிலும் புசிக்கப்படலாம். |
17 | பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது. |
18 | சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் புசிக்கப்படுமானால், அது அங்கிகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைப் புசிக்கிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான். |
19 | தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்ற மாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம். |
20 | ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால், அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். |
21 | மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த வஸ்துவையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்திலே புசித்தால், அவன் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார். |
22 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
23 | நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு, ஆடு, வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாது. |
24 | தானாய்ச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், பீறுண்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவித வேலைகளுக்கு வழங்கலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் புசிக்கலாகாது. |
25 | கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். |
26 | உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது. |
27 | எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார். |
28 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
29 | நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், கர்த்தருக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவருவானாக. |
30 | கர்த்தருக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவன் கைகளே கொண்டுவரவேண்டும்; மார்க்கண்டத்தையும் அதனோடுகூட அதின்மேல் வைத்த கொழுப்பையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக்குக் கொண்டுவரக்கடவன். |
31 | அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கவேண்டும்; மார்க்கண்டமோ ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும். |
32 | உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப்படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக. |
33 | ஆரோனுடைய குமாரரில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும். |
34 | இஸ்ரவேல் புத்திரரின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப்படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இஸ்ரவேல் புத்திரருக்குள் நடக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார். |
35 | கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவன் குமாரரும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம் பண்ணப்பட்ட அவர்களுக்குக் கர்த்தருடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை. |
36 | இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாகக் கொடுக்கும்படி கர்த்தர் அவர்களை அபிஷேகம்பண்ணின நாளிலே கட்டளையிட்டார். |
37 | சர்வாங்கதகனபலிக்கும் போஜனபலிக்கும் பாவநிவாரணபலிக்கும் குற்றநிவாரணபலிக்கும் பிரதிஷ்டைபலிகளுக்கும் சமாதானபலிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. |
38 | கர்த்தருக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் புத்திரருக்குச் சீனாய் வனாந்தரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய்மலையில் கட்டளையிட்டார். |