வேதாகமத்தை வாசி

லேவியராகமம் 27

                   
புத்தகங்களைக் காட்டு
1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால், பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்.
3இருபது வயதுமுதல் அறுபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய ஐம்பது வெள்ளிச்சேக்கலாகவும்,
4பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
5ஐந்து வயதுமுதல் இருபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை இருபது சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச்சேக்கலாகவும்,
6ஒரு மாதம்முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை ஐந்து வெள்ளிச்சேக்கலாகவும், பெண்பிள்ளையை மூன்று வெள்ளிச்சேக்கலாகவும்,
7அறுபது வயதுதொடங்கி, அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளையைப் பதினைந்து சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச் சேக்கலாகவும் மதிக்கக்கடவாய்.
8உன் மதிப்பின்படி செலுத்தக்கூடாத தரித்திரனாயிருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனைபண்ணினவனுடைய திராணிக்கேற்றபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன்.
9ஒருவன் பொருத்தனைபண்ணினது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருக ஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக.
10அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளப்பமானதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளப்பமானதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்திற்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக் கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாயிருப்பதாக.
11அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமல்லாத யாதொரு மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.
12ஆசாரியன் அது நல்லதானாலும் இளப்பமானதானாலும் அதை மதிப்பானாக; உன் மதிப்பின்படியே இருக்கக்கடவது.
13அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.
14ஒருவன் தன் வீட்டைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், ஆசாரியன் அதின் நலத்துக்கும் இளப்பத்துக்கும்தக்கதாக அதை மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி அது இருக்கக்கடவது.
15தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.
16ஒருவன் தன் காணியாட்சியான வயலில் யாதொரு பங்கைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாய் இருக்கவேண்டும்; ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.
17யூபிலி வருஷமுதல் அவன் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், அது உன் மதிப்பின்படி இருக்கவேண்டும்.
18யூபிலி வருஷத்துக்குப்பின் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டானானால், யூபிலி வருஷம்மட்டுமுள்ள மற்ற வருஷங்களின்படியே ஆசாரியன் திரவியத்தைக் கணக்குப்பார்த்து, அதற்குத்தக்கது உன் மதிப்பிலே தள்ளப்படவேண்டும்.
19வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.
20அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறோருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல்,
21யூபிலி வருஷத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாயிருக்கக்கடவது; அது ஆசாரியனுக்குக் காணியாட்சியாகும்.
22ஒருவன் தனக்குக் காணியாட்சி வயலாயிராமல் தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,
23அது யூபிலி வருஷம்மட்டும், உன் மதிப்பின்படி பெறும்விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.
24யார் கையிலே அந்த வயலைக் கொண்டானோ, அந்தக் காணியாட்சிக்காரன் வசமாய் அது யூபிலி வருஷத்தில் திரும்பச்சேரும்.
25உன் மதிப்பெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.
26தலையீற்றானவைகள் கர்த்தருடையது, ஆகையால் ஒருவரும் தலையீற்றாகிய மிருகஜீவனைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொள்ளலாகாது; அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது.
27சுத்தமல்லாத மிருகத்தினுடைய தலையீற்றானால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; மீட்கப்படாமலிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது.
28ஒருவன் தன் வசத்திலுள்ள நரஜீவனிலாவது, மிருகஜீவனிலாவது, காணியாட்சி நிலத்திலாவது, எதையாகிலும் கர்த்தருக்கென்று சாபத்தீடாக நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் கர்த்தருக்காகப் பரிசுத்தமாயிருக்கும்.
29நரஜீவனில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவைகளெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவது.
30தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
31ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானானால், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.
32கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
33அது நல்லதோ இளப்பமானதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக்கூடாதென்று அவர்களோடே சொல் என்றார்.
34இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி கர்த்தர் சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.