1 | பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார். |
2 | அப்படியே என் வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்குப் புசிக்கக்கொடுத்து: |
3 | மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது. |
4 | பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ போய், இஸ்ரவேல் சந்ததியாரிடத்திலே சேர்ந்து, என் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசு. |
5 | விளங்காத பேச்சும், கடினமான பாஷையுமுள்ள ஜனத்தண்டைக்கல்ல, இஸ்ரவேல் சந்ததியாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய். |
6 | விளங்காத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான பாஷையுமுள்ள அநேகமான ஜனங்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்களோ? |
7 | இஸ்ரவேல் வீட்டாரோவெனில், உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; எனக்கே செவிகொடுக்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள். |
8 | இதோ, உன் முகத்தை அவர்கள் முகத்துக்கு எதிராகவும், உன் நெற்றியை அவர்கள் நெற்றிக்கு எதிராகவும் கெட்டியாக்கினேன். |
9 | உன் நெற்றியை வச்சிரக்கல்லைப்போலாக்கினேன், கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கினேன்; அவர்கள் கலகமுள்ள வீட்டாரென்று நீ அவர்களுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகங்களுக்குக் கலங்காமலும் இரு என்றார். |
10 | பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நான் உன்னுடனே சொல்லும் என் வார்த்தைகளையெல்லாம் நீ உன் செவிகளாலே கேட்டு, உன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, |
11 | நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார். |
12 | அப்பொழுது ஆவி, என்னை உயர எடுத்துக்கொண்டது; கர்த்தருடைய ஸ்தானத்திலிருந்து விளங்கிய அவருடைய மகிமைக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று எனக்குப் பின்னாக கூப்பிட்ட மகா சத்தத்தின் இரைச்சலைக் கேட்டேன். |
13 | ஒன்றோடொன்று இணைந்திருக்கிற ஜீவன்களுடைய செட்டைகளின் இரைச்சலையும், அதற்கெதிரே ஓடிய சக்கரங்களின் இரைச்சலையும், மகா சத்தத்தின் இரைச்சலையும் கேட்டேன். |
14 | ஆவி என்னை உயர எடுத்துக்கொண்டது; நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்து போனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது. |
15 | கேபார் நதியண்டையிலே தெலாபீபிலே தாபரிக்கிற சிறைப்பட்டவர்களிடத்துக்கு நான் வந்து, அவர்கள் தாபரிக்கிற ஸ்தலத்திலே தாபரித்து, ஏழுநாள் அவர்கள் நடுவிலே பிரமித்தவனாய்த் தங்கினேன். |
16 | ஏழுநாள் முடிந்தபின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
17 | மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக. |
18 | சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன். |
19 | நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற்போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய். |
20 | அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன். |
21 | நீதிமான் பாவஞ் செய்யாதபடிக்கு நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவஞ்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன் ஆத்துமாவைத் தப்புவித்தாய் என்றார். |
22 | அவ்விடத்திலே கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடனே பேசுவேன் என்றார். |
23 | அப்படியே நான் எழுந்திருந்து, பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப் போனேன்; இதோ, கேபார் நதியண்டையிலே நான் கண்ட மகிமைக்குச் சரியாக அங்கே கர்த்தருடைய மகிமை விளங்கினது; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன். |
24 | உடனே ஆவி எனக்குள்ளே புகுந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது, அப்பொழுது அவர் என்னுடனே பேசி: நீ போய், உன் வீட்டுக்குள்ளே உன்னை அடைத்துக்கொண்டிரு. |
25 | இதோ, மனுபுத்திரனே, உன் மேல் கயிறுகளைப்போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள்; ஆகையால் நீ அவர்களுக்குள்ளே போகவேண்டாம். |
26 | நான் உன் நாவை உன் மேல்வாயோடே ஒட்டிக்கொள்ளப்பண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்து கொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலகவீட்டார். |
27 | நான் உன்னோடே பேசும்போது, உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் என்று அவர்களோடே சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேளாதவன் கேளாதிருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார். |