1 | கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும். |
2 | எங்கள் சுதந்தரம் அந்நியர் வசமாகவும், எங்கள் வீடுகள் புறத்தேசத்தார் வசமாகவும் தாண்டிப்போயின. |
3 | திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள். |
4 | எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கிக்குடிக்கிறோம்; எங்கள் விறகு விலைக்கிரயமாய் வருகிறது. |
5 | பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை. |
6 | அப்பத்தால் திருப்தியாகும்படி எகிப்தியருக்கும் அசீரியருக்கும் எங்களைக் கையளித்தோம். |
7 | எங்கள் பிதாக்கள் பாவஞ்செய்து மாண்டுபோனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம். |
8 | அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பாரில்லை. |
9 | வனாந்தரத்தில் இருக்கிற பட்டயத்தினால் பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் எங்கள் அப்பத்தை தேடுகிறோம். |
10 | பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று. |
11 | சீயோனில் இருந்த ஸ்திரீகளையும் யூதா பட்டணங்களில் இருந்த கன்னிகைகளையும் அவமானப்படுத்தினார்கள். |
12 | பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை. |
13 | வாலிபரை எந்திரம் அரைக்கக்கொண்டுபோனார்கள்; இளைஞர் விறகு சுமந்து இடறிவிழுகிறார்கள். |
14 | முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோயிற்று. |
15 | எங்கள் இருதயத்தின் களிகூருதல் ஒழிந்துபோயிற்று; எங்கள் சந்தோஷம் துக்கமாய் மாறிற்று. |
16 | எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே. |
17 | அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின. |
18 | பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது. |
19 | கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும். |
20 | தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன? |
21 | கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும். |
22 | எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? எங்கள்பேரில் கடுங்கோபமாயிருக்கிறீரே! |