1 | ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான். |
2 | அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார். |
3 | அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார். |
4 | என் சதையையும், என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார். |
5 | அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைந்துகொண்டார். |
6 | பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார். |
7 | நான் புறப்படக்கூடாதபடி என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார். |
8 | நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார். |
9 | வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார். |
10 | அவர் எனக்குப் பதிவிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார். |
11 | என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப்பாழாக்கிவிட்டார். |
12 | தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார். |
13 | தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார். |
14 | நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப்பாடலுமானேன். |
15 | கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார். |
16 | அவர் பருக்கைக்கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார். |
17 | என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன். |
18 | என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன். |
19 | எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும். |
20 | என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது. |
21 | இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கை கொண்டிருப்பேன். |
22 | நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. |
23 | அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. |
24 | கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன். |
25 | தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். |
26 | கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. |
27 | தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது. |
28 | அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன். |
29 | நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக. |
30 | தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக. |
31 | ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். |
32 | அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார். |
33 | அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை. |
34 | ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் யாவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும், |
35 | உன்னதமானவரின் சமுகத்தில் மனுஷருடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும், |
36 | மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ? |
37 | ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? |
38 | உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ? |
39 | உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன? |
40 | நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம். |
41 | நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம். |
42 | நாங்கள் துரோகஞ்செய்து, கலகம்பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர். |
43 | தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர். |
44 | ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர். |
45 | ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர். |
46 | எங்கள் பகைஞர் எல்லாரும் எங்களுக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தார்கள். |
47 | திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது. |
48 | என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது. |
49 | கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும், |
50 | என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது. |
51 | என் நகரத்தினுடைய குமாரத்திகள் அனைவரினிமித்தமும், என் கண் என் ஆத்துமாவுக்கு நோவுண்டாக்குகிறது. |
52 | முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப்போல வேட்டையாடினார்கள். |
53 | காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லைவைத்தார்கள். |
54 | தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன். |
55 | மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப்பற்றிக் கூப்பிட்டேன். |
56 | என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும். |
57 | நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர். |
58 | ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் பிராணனை மீட்டுக்கொண்டீர். |
59 | கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும். |
60 | அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர். |
61 | கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும், |
62 | எனக்கு விரோதமா.ய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர். |
63 | அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன். |
64 | கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்த கிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர். |
65 | அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும். |
66 | கோபமாய் அவர்களைப் பின்தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின் கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர். |