வேதாகமத்தை வாசி

யாத்திராகமம் 19

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.
2அவர்கள் ரெவிதீமிலிருந்து பிரயாணம் புறப்பட்டு, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்து, அந்த வனாந்தரத்தில் பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேலர் அங்கே மலைக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.
3மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக்கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,
4நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.
5இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைகொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
6நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்.
7மோசே வந்து ஜனங்களின் மூப்பரை அழைப்பித்து, கர்த்தர் தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.
8அதற்கு ஜனங்கள் எல்லாரும் ஏகமாய், கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தரிடத்தில் தெரிவித்தான்.
9அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான்.
10பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து,
11மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய் மலையின்மேல் இறங்குவார்.
12ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.
13ஒரு கையும் அதைத்தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும் சரி, மனிதனானாலும் சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார்.
14மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்.
15அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான்.
16மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.
17அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.
18கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.
19எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.
20கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.
21அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி.
22கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.
23அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லை குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், ஜனங்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான்.
24கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும், ஜனங்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடிக்கு, எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதிருக்கக்கடவர்கள் என்றார்.
25அப்படியே மோசே இறங்கி ஜனங்களிடத்தில் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.