1 | அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான். |
2 | கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான். |
3 | அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகியோடினான். |
4 | அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று. |
5 | ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். |
6 | மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது. |
7 | அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலாயிற்று. |
8 | அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவிகொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள். |
9 | இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன் வாக்குக்குச் செவிகொடமலும் இருப்பார்களானால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார். |
10 | அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான். |
11 | அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா? |
12 | ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார். |
13 | அதற்கு அவன்: ஆண்டவரே. நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றான். |
14 | அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபம்மூண்டவராகி: லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும். |
15 | நீ அவனோடே பேசி, அவன் வாயில் வார்த்தைகளைப் போடு; நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன். |
16 | அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய். |
17 | இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார். |
18 | மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்துக்கு வந்து: நான் எகிப்திலிருக்கிற என் சகோதரரிடத்துக்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடே இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்தரவு தரவேண்டும் என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: சுகமாய்ப் போய்வாரும் என்றான். |
19 | பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத்தேடின மனிதர் எல்லாரும் இறந்துபோனார்கள் என்றார். |
20 | அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டு போனான். |
21 | அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப்போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான். |
22 | அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். |
23 | எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார். |
24 | வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப்பார்த்தார். |
25 | அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து: நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள். |
26 | பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்தசேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள். |
27 | கர்த்தர் ஆரோனை நோக்கி: நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டுபோ என்றார். அவன் போய், தேவபர்வதத்தில் அவனைச் சந்தித்து, அவனை முத்தஞ்செய்தான். |
28 | அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான். |
29 | மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர் எல்லாரையும் கூடிவரச் செய்தார்கள். |
30 | கர்த்தர் மோசேக்குச் சொல்லிய சகல வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான். |
31 | ஜனங்கள் விசுவாசித்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள். |