1 | கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும். |
2 | நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன்; என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும். |
3 | கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். |
4 | நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. |
5 | வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர். |
6 | பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப் பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார். |
7 | நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன். |
8 | கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும். |
9 | அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி; தங்கள் நாவினால் இச்சகம் பேசுகிறார்கள். |
10 | தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்; அவர்கள் தங்கள் ஆலோசனைகளாலேயே விழும்படி செய்திடும்; அவர்கள் துரோகங்களினுடைய திரட்சியினிமித்தம் அவர்களைத் தள்ளிவிடும்; உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்களே. |
11 | உம்மில் அடைக்கலம் புகுவோர் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக. |
12 | கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர். |