1 | கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும். |
2 | உம்முடைய சந்நிதியிலிருந்து என் நியாயம் வெளிப்படுவதாக; உம்முடைய கண்கள் நியாயமானவைகளை நோக்குவனவாக. |
3 | நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணியிருக்கிறேன். |
4 | மனுஷரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக்கொள்ளுகிறேன். |
5 | என் நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன. என் காலடிகள் வழுவிப்போகவிலலை. |
6 | தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், ஏனெனில் நீர் எனக்குப் பதிலருளுவீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும். |
7 | உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும். |
8 | கண்மணியைப்போல என்னைக் காத்து. |
9 | என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணின் பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும். |
10 | அவர்கள் கொழுத்துப்போய், தங்கள் வாயினால் இருமாப்பாய் பேசுகிறார்கள். |
11 | நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை நோக்கிக்கொண்டிருக்கின்றன. |
12 | பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கும், மறைவிடங்களில் பதிவிருக்கிற பால சிங்கத்துக்கும் ஒப்பாயிருக்கிறார்கள். |
13 | கர்த்தாவே, உம்முடைய பட்டயத்தினால் என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு தப்புவியும். |
14 | கர்த்தாவே, மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள். |
15 | நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன். |