1 | அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் பிரதியுத்தரமாக: |
2 | ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்லவேண்டாமோ? வாய்ச்சாலகன் நீதிமானாய் விளங்குவானோ? |
3 | உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனுஷர் மவுனமாயிருப்பார்களோ? நீர் பரியாசம்பண்ணும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ? |
4 | என் சொல் சுத்தம் என்றும், நான் தேவரீருடைய பார்வைக்குத் துப்புரவானவன் என்றும் நீர் சொல்லுகிறீர். |
5 | ஆனாலும் தேவன் பேசி, உமக்கு விரோதமாய்த் தம்முடைய உதடுகளைத் திறந்து, |
6 | உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால், அது இரட்டிப்புள்ளதாயிருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும். |
7 | தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ? |
8 | அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன? |
9 | அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும், சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது. |
10 | அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், அவரைத் தடைபண்ணுகிறவன் யார்? |
11 | மனுஷருடைய மாயத்தை அவர் அறிவார்; அக்கிரமத்தை அவர் கண்டும், அதைக் கவனியாதிருப்பாரோ? |
12 | புத்தியில்லாத மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான். |
13 | நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும். |
14 | உம்முடைய கையிலே அக்கிரமம் இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும். |
15 | அப்பொழுது உம்முடைய முகத்தை மாசில்லாமல் ஏறெடுத்து, பயப்படாமல் திடன்கொண்டிருப்பீர். |
16 | அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர். |
17 | அப்பொழுது உம்முடைய ஆயுசுகாலம் பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர். |
18 | நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாய்ப் படுத்துக்கொள்வீர். |
19 | பயப்படுத்துவாரில்லாமல் நித்திரை செய்வீர்; அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம் பண்ணுவார்கள். |
20 | துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும் என்றான். |