1 | பூமியிலே போராட மனுஷனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? அவன் நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ? |
2 | ஒரு வேலையாள் நிழலை வாஞ்சித்து, ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பார்த்திருக்கிறதுபோல, |
3 | மாயையான மாதங்கள் என்னுடைய சுதந்தரமாகி, சஞ்சலமான இராத்திரிகள் எனக்குக் குறிக்கப்பட்டது. |
4 | நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? இராக்காலம் எப்பொழுது முடியும் என்று சொல்லி, கிழக்கு வெளுக்குமட்டும் அரண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்றுபோகிறது. |
5 | என் மாம்சம் பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று. |
6 | என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும். |
7 | என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும். |
8 | இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன். |
9 | மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான். |
10 | இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது. |
11 | ஆகையால் நான் என் வாயை அடக்காமல், என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன். |
12 | தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? நான் ஒரு திமிங்கிலமோ? |
13 | என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேனாகில், |
14 | நீர் சொப்பனங்களால் என்னைக் கலங்கப்பண்ணி, தரிசனங்களால் எனக்குத் திகிலுண்டாக்குகிறீர். |
15 | அதினால் என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும், என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும், மரணத்தையும் விரும்புகிறது. |
16 | இப்படியிருக்கிறதை அரோசிக்கிறேன்; எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே. |
17 | மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், |
18 | காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்? |
19 | நான் என் உமிழ்நீரை விழுங்காதபடி எத்தனைகாலம் என்னை நெகிழாமலும், என்னை விடாமலும் இருப்பீர். |
20 | மன்னுயிரைக்காப்பவரே, பாவஞ்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? நான் எனக்குத்தானே பாரமாயிருக்கும்படிக்கு, நீர் என்னை உமக்கு இலக்காக வைத்தது என்ன? |
21 | என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன் என்றான். |