1 | அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக: |
2 | நீங்கள் எந்தமட்டும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும். |
3 | நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்? |
4 | கோபத்தினால் உம்மைத்தானே பீறுகிற உமதுநிமித்தம் பூமி பாழாய்ப்போகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பேருமோ? |
5 | துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும். |
6 | அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோகும். |
7 | அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும். |
8 | அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான். |
9 | கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள். |
10 | அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது. |
11 | சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும். |
12 | அவன் பெலனைப் பட்டினி தின்றுபோடும்; அவன் பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும். |
13 | அது அவன் அங்கத்தின் பலத்தைப் பட்சிக்கும்; பயங்கரமான மரணமே அவன் அவயவங்களைப் பட்சிக்கும். |
14 | அவன் நம்பிக்கை அவன் கூடாரத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும். |
15 | அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், பயங்கரம் அவன் கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவன் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படும். |
16 | கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும். |
17 | அவனை நினைக்கும் நினைப்புப் பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும். |
18 | அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான். |
19 | அவன் ஜனத்துக்குள்ளே அவனுக்குப் புத்திரனும் இல்லை பெளத்திரனும் இல்லை; அவன் வீட்டில் மீதியாயிருக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை. |
20 | அவன் காலத்தோர் அவன் நாளுக்காகத் திடுக்கிட்டதுபோல, பின்னடியாரும் பிரமிப்பார்கள். |
21 | அக்கிரமக்காரன் குடியிருந்த ஸ்தானங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய ஸ்தலம் இதுவே என்பார்கள் என்றான். |