1 | யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோராம் ராஜாவானான். |
2 | அவனுக்கு யோசபாத்தின் குமாரராகிய அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா என்னும் சகோதரர் இருந்தார்கள்; இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோசபாத்தின் குமாரர். |
3 | அவர்களுடைய தகப்பன் வெள்ளியும் பொன்னும் உச்சிதங்களுமான அநேகம் நன்கொடைகளையும், யூதாவிலே அரணான பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான்; யோராம் சேஷ்டபுத்திரனானபடியினால், அவனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான். |
4 | யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான். |
5 | யோராம் ராஜாவாகிறபோது, முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான். |
6 | அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். |
7 | கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடே பண்ணின உடன்படிக்கையினிமித்தம் தாவீதின் வம்சத்தை அழிக்கச் சித்தமில்லாதிருந்தார். |
8 | அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள். |
9 | அதினால் யோராம் தன் பிரபுக்களோடும் தன் சகல இரதங்களோடும் புறப்பட்டுப்போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தான். |
10 | ஆகிலும் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம் பண்ணிப் பிரிந்தார்கள்; அவன் தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், அக்காலத்திலே லீப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள். |
11 | அவன் யூதாவுடைய மலைகளின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிகளைச் சோரம்போகப்பண்ணி, யூதாவையும் அதற்கு ஏவிவிட்டான். |
12 | அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு நிருபம் அவனிடத்திற்கு வந்தது; அதில்: உம்முடைய தகப்பனான தாவீதின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடவாமல், |
13 | இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபுடைய குடும்பத்தின் சோரமார்க்கத்திற்கு ஒத்தபடியே யூதாவையும் எருசலேமின் குடிகளையும் சோரம்போகப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் நல்லவர்களாயிருந்த உன் தகப்பன் வீட்டாரான உன் சகோதரரையும் கொன்றுபோட்டபடியினால், |
14 | இதோ, கர்த்தர் உன் ஜனத்தையும், உன் பிள்ளைகளையும், உன் மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையாக வாதிப்பார். |
15 | நீயோ உனக்கு உண்டாகும் குடல் நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் இற்று விழுமட்டும் கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது. |
16 | அப்படியே கர்த்தர் பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார். |
17 | அவர்கள் யூதாவில் வந்து, பலாத்காரமாய்ப் புகுந்து, ராஜாவின் அரமனையில் அகப்பட்ட எல்லாப் பொருள்களையும், அவன் பிள்ளைகளையும், அவன் மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவன் குமாரரில் இளையவனை அல்லாமல் ஒரு குமாரனும் அவனுக்கு மீதியாக வைக்கப்படவில்லை. |
18 | இவைகள் எல்லாவற்றிற்கும் பிற்பாடு கர்த்தர் அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார். |
19 | அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருஷம் முடிகிற காலத்தில் அவனுக்கு உண்டான நோயினால் அவன் குடல்கள் சரிந்து கொடிய வியாதியினால் செத்துப்போனான்; அவனுடைய பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய ஜனங்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை. |
20 | அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை. |