1 | சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தன் அரமனையையும் கட்ட இருபது வருஷகாலம் சென்றபின்பு, |
2 | ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களைச் சாலொமோன் கட்டி, அவைகளில் இஸ்ரவேல் புத்திரரைக் குடியேற்றினான். |
3 | பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான். |
4 | அவன் வனாந்தரத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தேசத்திலே இரஸ்துக்களின் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான். |
5 | சாலொமோன் மேல்பெத்தொரோனையும், கீழ்ப்பெத்தொரோனையும், அலங்கங்களும் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள அரணான பட்டணங்களாகக் கட்டி, |
6 | பாலாத்தையும், தனக்கு இருக்கிற இரஸ்துக்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் சகல பட்டணங்களையும், குதிரை வீரர் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும் தான் ஆளும் தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டினான். |
7 | இஸ்ரவேல் புத்திரர் சங்காரம்பண்ணாதிருந்த இஸ்ரவேல் ஜாதியல்லாத ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியரில் மீதியான சகல ஜனத்திலும், |
8 | அவர்களுக்குப்பிறகு தேசத்திலிருந்த அவர்கள் பிள்ளைகளை சாலொமோன் இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பகுதி கட்டச்செய்தான். |
9 | இஸ்ரவேல் புத்திரரில் ஒருவரையும் சாலொமோன் தன் வேலையைச் செய்ய அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்த மனுஷரும், அவனுடைய சேர்வைக்காரரின் தலைவரும், அவனுடைய இரதங்களுக்கும் குதிரைவீரருக்கும் தலைவருமாயிருந்தார்கள். |
10 | ராஜாவாகிய சாலொமோனுடைய ஊழியக்காரரின் தலைவராகிய இவர்களில் இருநூற்று ஐம்பதுபேர் ஜனத்தை ஆண்டார்கள். |
11 | சாலொமோன்: கர்த்தருடைய பெட்டி வந்த ஸ்தலங்கள் பரிசுத்தமாயிருக்கிறது; ஆதலால், இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் அரமனையிலே என் மனைவி வாசம்பண்ணலாகாது என்று சொல்லி, பார்வோனின் குமாரத்தியைத் தாவீதின் நகரத்திலிருந்து தான் அவளுக்குக் கட்டின மாளிகைக்குக் குடிவரப்பண்ணினான். |
12 | அதுமுதற்கொண்டு சாலொமோன் தான் மண்டபத்திற்கு முன்பாகக் கட்டியிருந்த கர்த்தருடைய பலிபீடத்தின்மேல், |
13 | ஒவ்வொரு நாளின் கட்டளைக்குத்தக்கதாய் மோசேயுடைய கற்பனையின்படியே ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும், வருஷத்தில் மூன்றுதரம் ஆசரிக்கிற பண்டிகைகளாகிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான். |
14 | அவன் தன் தகப்பனாகிய தாவீதுடைய பிரமாணத்தின்படியே, ஆசாரியர்கள் தங்கள் தங்கள் ஊழியத்தைச் செய்யும் வகுப்புகளையும், லேவியர் ஒவ்வொரு நாளின் கட்டளைப்படியே துதித்து சேவித்து ஆசாரியருக்கு முன்பாகத் தங்கள் ஊழியத்தைச் செய்யும் முறைகளையும், வாசல் காப்பவர்கள் ஒவ்வொரு வாசலில் காவல்காக்கும் வகுப்புகளையும் நிற்கப்பண்ணினான்; தேவனுடைய மனுஷனாகிய தாவீது இப்படிக் கட்டளையிட்டிருந்தான். |
15 | சகல காரியத்தையும் பொக்கிஷங்களின் காரியத்தையும் குறித்து, ராஜா ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்த கட்டளையை விட்டு அவர்கள் விலகாதிருந்தார்கள். |
16 | இப்படியே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்ட நாள் முதல் அதை முடிக்குமட்டும் சாலொமோனின் வேலையெல்லாம் நடந்தேறிக் கர்த்தருடைய ஆலயம் கட்டித்தீர்ந்தது. |
17 | பின்பு சாலொமோன் ஏதோம் தேசத்துக் கடல் ஓரத்திலிருக்கும் எசியோன்கேபேருக்கும் ஏலோத்துக்கும் போனான். |
18 | அவனுக்கு ஈராம் தன் ஊழியக்காரர் முகாந்தரமாய்க் கப்பல்களையும், சமுத்திர யாத்திரையில் பழகின வேலையாட்களையும் அனுப்பினான்; அவர்கள் சாலொமோனின் வேலைக்காரரோடேகூட ஓப்பீருக்குப் போய், அங்கேயிருந்து நானூற்று ஐம்பது தாலந்து பொன்னை ஏற்றி ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள். |