வேதாகமத்தை வாசி

2இராஜாக்கள் 1

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆகாப் மரணமடைந்தபின், மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து போனார்கள்.
2அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டிலிருந்து கிராதியின் வழியாய் விழுந்து, வியாதிப்பட்டு: இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூ இடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்.
3கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களுக்கு எதிர்ப்படப்போய்: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூ இடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்?
4இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான்.
5அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் திரும்பி வந்தது என்ன என்று அவன் அவர்களிடத்தில் கேட்டான்.
6அதற்கு அவர்கள்: ஒரு மனுஷன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவினிடத்தில் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூ இடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனோடே சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள்.
7அப்பொழுது அவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு எதிர்ப்பட்டு வந்து, இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொன்ன மனுஷன் எப்படிப்பட்டவன் என்று கேட்டான்.
8அதற்கு அவர்கள்: அவன் மயிர் உடையைத் தரித்து, வார்க்கச்சையைத் தன் அரையிலே கட்டிக்கொண்டிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி;
9அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான்.
10அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது.
11மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னைச் சீக்கிரமாய் வரச்சொல்லுகிறார் என்றான்.
12எலியா அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே தேவனுடைய அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பதுபேரையும் பட்சித்தது.
13திரும்பவும் மூன்றாந்தரம் ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; இந்த மூன்றாந்தலைவன் ஏறிவந்தபோது, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனுஷனே, என்னுடைய பிராணனும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் பிராணனும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக.
14இதோ, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, முந்தின இரண்டு தலைவரையும், அவரவருடைய ஐம்பது சேவகரையும் பட்சித்தது; இப்போதும் என்னுடைய பிராணன் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான்.
15அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப்போய்,
16அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூ இடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
17எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்து போனான்; அவனுக்குக் குமாரன் இல்லாதபடியினால், அவன் ஸ்தானத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய குமாரனான யோராமின் இரண்டாம் வருஷத்தில் யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
18அகசியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.