1 | யோசேப்பு எகிப்துக்குக் கொண்டு போகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான். |
2 | கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். |
3 | கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு; |
4 | யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். |
5 | அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினது முதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது. |
6 | ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம் தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான். |
7 | சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். |
8 | அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என்கையில் ஒப்பித்திருக்கிறார். |
9 | இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறோன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். |
10 | அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை. |
11 | இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டுக்குள் போனான்; வீட்டு மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை. |
12 | அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான். |
13 | அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது, |
14 | அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரெய மனுஷன் நம்மிடத்தில் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படிக்கு என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டேன். |
15 | நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள். |
16 | அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்திருந்து, |
17 | அவனை நோக்கி: நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் சரசம்பண்ணும்படிக்கு என்னிடத்தில் வந்தான். |
18 | அப்பொழுது நான் சத்தமிட்டுக்கூப்பிட்டேன், அவன் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள். |
19 | உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னோடே சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவனுக்குக் கோபம் மூண்டது. |
20 | யோசேப்பின் எஜமான் அவனைப்பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். |
21 | கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார். |
22 | சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான். |
23 | கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை. |