1 | ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள். |
2 | அப்பொழுது யாக்கோபு ராகேலின் மேல் கோபங்கொண்டு: தேவனல்லோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா? என்றான். |
3 | அப்பொழுது அவள்: இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்லி, |
4 | அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள்; அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான். |
5 | பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். |
6 | அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள். |
7 | மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள். |
8 | அப்பொழுது ராகேல்: நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பேரிட்டாள். |
9 | லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள். |
10 | லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். |
11 | அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறதென்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள். |
12 | பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள். |
13 | அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள். |
14 | கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள். |
15 | அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள். |
16 | சாயங்காலத்தில் யாக்கோபு வெளியிலிருந்து வருகையில் லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும் என்றாள்; அவன் அன்று இரவு அவளோடே சயனித்தான். |
17 | தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள். |
18 | அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள். |
19 | அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள். |
20 | அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத் தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள். |
21 | பின்பு அவள் ஒரு குமாரத்தியையும் பெற்று, அவளுக்குத் தீனாள் என்று பேரிட்டாள். |
22 | தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். |
23 | அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும், |
24 | இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள். |
25 | ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும். |
26 | நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான். |
27 | அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன். |
28 | உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான். |
29 | அதற்கு அவன்: நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர். |
30 | நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான். |
31 | அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன். |
32 | நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும். |
33 | அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான். |
34 | அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொல்லி, |
35 | அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து, |
36 | தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாணதூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான். |
37 | பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து, |
38 | தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு. |
39 | ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது. |
40 | அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்பு நிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடே சேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான். |
41 | பலத்த ஆடுகள் பொலியும்போது, அந்தக் கொப்புகளுக்கு எதிரே பொலியும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான். |
42 | பலவீனமான ஆடுகள் பொலியும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன. |
43 | இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான். |