WCV

சங்கீதம் அத்தியாயம் 69
கடவுளே! என்னைக் காப்பாற்றும்: வெள்ளம் கழுத்தளவு வந்துவிட்டது.
ஆழமிகு நீர்த்திரளுள் அமிழ்ந்திருக்கின்றேன்: நிற்க இடமில்லை: நிலைக்கொள்ளாத நீருக்குள் ஆழ்ந்திருக்கின்றேன்: வெள்ளம் என்மீது புரண்டோடுகின்றது.
கத்திக் கத்திக் களைத்துப்போனேன்: தொண்டையும் வறண்டுபோயிற்று: என் கடவுளாம் உமக்காகக் காத்திருந்து என் கண்கள் பூத்துப்போயின:
காரணமில்லாமல் என்னை வெறுப்போர் என் தலைமுடியைவிட மிகுதியாய் இருக்கின்றனர்: பொய்க்குற்றம் சாட்டி என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர். நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்?
கடவுளே! என் மதிகேடு உமக்குத் தெரியும்: என் குற்றங்கள் உமக்கு மறைவானவை அல்ல.
ஆண்டவரே! படைகளின் தலைவரே! உமக்காகக் காத்திருப்போர் என்னால் வெட்கமுறாதபடி செய்யும்: இஸ்ரயேலின் கடவுளே! உம்மை நாடித் தேடுகிறவர்கள் என்பொருட்டு மானக்கேடு அடையாதபடி செய்யும்.
ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்: வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.
என் சகோதரருக்கு வேற்று மனிதனானேன்: என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன்.
உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது: உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன.
நோன்பிருந்து நான் நெக்குருகி அழுதேன்: அதுவே எனக்க இழிவாய் மாறிற்று.
சாக்குத் துணியை என் உடையாகக் கொண்டேன்: ஆயினும், அவர்களது பழிச்சொல்லுக்கு உள்ளானேன்.
நகர வாயிலில் அமர்வோர் என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர்: குடிகாரர் என்னைப்பற்றிப் பாட்டுக் கட்டுகின்றனர்.
ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்: துணை செய்வதில் நீர் மாறாதவர்.
சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து என்னைக் காத்தருளும்: என்னை வெறுப்போரிடமிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் என்னை விடுவித்தருளும்.
பெருவெள்ளம் என்னை அடித்துக் கொண்டு போகாதிருப்பதாக! ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக! படுகுழி தன்வாய் திறந்து என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக!
ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்: உம் பேரன்பு நன்மை மிக்கது: உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும்.
உமது முகத்தை அடியேனக்கு மறைக்காதேயும்: நான் நெருக்கடியான நிலையிலிருக்கிறேன்: என் மன்றாட்டுக்கு விரைவில் பதில்மொழி தாரும்.
என்னை நெருங்கி, என்னை விடுவித்தருளும்: என் எதிரிகளிடமிருந்து என்னை மீட்டருளும்.
என் இழிவும், வெட்கக்கேடும், மானக்கேடும் உமக்குத் தெரியும்: என் பகைவர் அனைவரும் உம் முன்னிலையில் இருக்கின்றனர்.
பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்து விட்டது: நான் மிகவும் வருந்துகிறேன்: ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்: யாரும் வரவில்லை: தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்: யாரையும் காணவில்லை.
அவர்கள் என் உணவில் நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்: என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்.
அவர்களுடைய விருந்துகளே அவர்களுக்குக் கண்ணியாகட்டும்! அவர்களுடைய படையல் விருந்துகளே அவர்களுக்குப் பொறியாகட்டும்!
அவர்களின் கண்கள் காணாதவாறு ஒளியிழக்கட்டும்! அவர்களின் இடைகள் இடையறாது தள்ளாடட்டும்!
உமது கடுஞ்சினத்தை அவர்கள்மேல் கொட்டியருளும்: உமது சினத்தீ அவர்களை மடக்கிப் பிடிப்பதாக!
அவர்களின் பாசறை பாழாவதாக! அவர்களின் கூடாரங்களில் ஒருவனும் குடிபுகாதிருப்பானாக!
நீர் அடித்தவர்களை அவர்கள் இன்னும் கொடுமைப்படுத்துகின்றார்கள்: நீர் காயப்படுத்தினவர்களின் நோவைப்பற்றித் தூற்றித் திரிகின்றார்கள்.
அவர்கள்மீது குற்றத்தின்மேல் குற்றம் சுமத்தும்! உமது நீதித் தீர்ப்பினின்று அவர்களைத் தப்ப விடாதேயும்!
மெய்வாழ்வுக்குரியோரின் அட்டவணையிலிருந்து அவர்களுடைய பெயர்களை நீக்கிவிடும்! அவற்றை நேர்மையாளரின் பெயர்களோடு சேர்க்காதேயும்!
எளியோன் சிறுமைப்பட்டவன்: காயமுற்றவன்: கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!
கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்: அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன்:
காளையைவிட இதுவே ஆண்டவருக்கு உகந்தது: கொம்பும் விரிகுளம்பும் உள்ள எருதைவிட இதுவே அவருக்கு உகந்தது.
எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்: கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்: சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை.
வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும்.
கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்: யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்: அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்: நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள்.
ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்: அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர்.