WCV

சங்கீதம் அத்தியாயம் 102
ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்! என் அபயக்குரல் உம்மிடம் வருவதாக!
நான் இடுக்கண் உற்ற நாளிலே உமது முகத்தை மறைக்காதீர்! உமது செவியை என் பக்கமாகத் திருப்பியருளும்! நான் மன்றாடும் நாளில் விரைவாய் எனக்குப் பதிலளியும்!
என் வாழ்நாள்கள் புகையென மறைகின்றன: என் எலும்புகள் தீச்சூழையென எரிகின்றன.
என் இதயம் புல்லைப்போலத் தீய்ந்து கருகுகின்றது: என் உணவையும் நான் உண்ண மறந்தேன்.
என் பெருமூச்சின் பேரொலியால், என் எலும்புகள் சதையோடு ஒட்டிக் கொண்டன.
நான் பாலைநிலப் பறவைபோல் ஆனேன்: பாழ் நிலத்தின் ஆந்தைபோல் ஆனேன்.
நான் தூக்கமின்றித் தவிக்கின்றேன்: கூரைமேல் தனிமையாய் இருக்கும் பறவைபோல் ஆனேன்.
என் எதிரிகள் நாள்முழுதும் என்னை இழித்துரைக்கின்றனர்: என்னை எள்ளி நகையாடுவோர் என் பெயரைச் சொல்லிப் பிறரைச் சபிக்கின்றனர்.
சாம்பலை நான் உணவாகக் கொள்கின்றேன்: என் மதுக்கலவையோடு கண்ணீரைக் கலக்கின்றேன்.
ஏனெனில், உமது சினத்திற்கும் சீற்றத்திற்கும் உள்ளானேன்: நீர் என்னைத் தூக்கி எறிந்துவிட்டீர்.
மாலை நிழலைப்போன்றது எனது வாழ்நாள்: புல்லென நான் உலர்ந்து போகின்றேன்.
ஆண்டவரே! நீர் என்றென்றும் கொலுவீற்றிருக்கின்றீர்: உமது புகழ் தலைமுறைதோறும் நிலைத்திருக்கும்.
நீர் எழுந்தருளி, சீயோனுக்கு இரக்கம் காட்டும்: இதோ! குறித்த காலம் வந்துவிட்டது.
அதன் கற்கள்மீது உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்: அதன் அழிவை நினைத்துப் பரிதவிக்கின்றனர்.
வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்: பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.
ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்: அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.
திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்: அவர்களின் மன்றாட்டை அவமதியார்.
இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்: படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும்.
ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்: அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார்.
அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்: சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார்.
சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும்: எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும்.
அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர்.
என் வாழ்க்கைப் பாதையின் நடுவில் ஆண்டவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்: அவர் என் ஆயுளைக் குறுக்கிவிட்டார்.
நான் உரைத்தது: “என் இறiவா! என் வாழ்நாளின் இடையில் என்னை எடுத்துக் கொள்ளாதேயும்: உமது காலம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதன்றோ?
முற்காலத்தில் நீர் பூவுலகுக்கு அடித்தளமிட்டீர்: விண்ணுலகம் உமது கைவினைப் பொருள் அன்றோ!
அவையோ அழிந்துவிடும்: நீரோ நிலைத்திருப்பீர்: அவையெல்லாம் ஆடைபோல் பழமையாகும்: அவற்றை நீர் உடையென மாற்றுகின்றீர்: அவையும் மறைந்துபோம்.
நீரோ மாறாதவர்! உமது காலமும் முடிவற்றது.
உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்: அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்!