ஆசிரியர்: G. பிபு
11-5-2018 அன்று, கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்ற
இந்தியவியல் மாநாட்டில் ஆற்றிய உரை...
1. வேதாகமத்தின் மிகப்பெரிய உரிமைகோரல்
“நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன். ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்குமுன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள். நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுக் கொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது?” (உபாகமம் 4:5-8).
பரிசுத்த வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட இவ்வுரையில் பல காரியங்கள் தெள்ளத் தெளிவாகத் சொல்லப்பட்டுள்ளன. அவையாவன:
அ) பரிசுத்த வேதாகமமானது மேற்கண்ட காரியங்களைக் கையாளுகிற ஓர் ஆவிக்குரிய நூல் மட்டுமின்றி. இந்தப் பூமியில் ஞானத்தோடும் விவேகத்தோடும் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ நினைக்கிறவர்களுக்கு உதவி செய்யக்கூடிய சட்டங்களையும் தீர்ப்புகளையும் அதன் பக்கங்களில் கொண்டுள்ளது.
ஆ) அது நமக்குக் கற்பிக்கிற சட்டங்களும், நியாயங்களும் இந்த உலகிலுள்ள எந்த அரசாங்கத்தின் சட்டங்களைக் காட்டிலும் தனித்துவம் வாய்ந்ததும், சிறந்தவையாயும் இருக்கின்றன. பரிசுத்த வேதாகமம் ஒரே தேவனிடமிருந்து மட்டுமே எழுதப்பட்ட ஒரே வெளிப்பாடாக இருக்கிறபடியால் இத்தகைய தனித்தன்மையைக் கொண்டதாக விளங்குகிறது.
இ) இதிலுள்ள சட்டங்களையும் தீர்ப்புகளையும் எவர்கள் கவனமாகப் பரிசீலிக்கிறார்களோ அவர்கள் அதிலுள்ள ஞானத்தையும் விவேகத்தையும் உரித்தாக்கிக் கொள்கிறார்கள்.
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த விளக்கவுரையாளர்கள் சிலர், மேற்கண்ட வசனங்கள் என்ன கூறுகின்றன என்பதை சரியான முறையில் சுட்டிக்காட்டி விளக்கியிருக்கிறார்கள்.
“இந்தப் பெரிய தேசத்தின் மக்கள் உண்மையாகவே ஞானமும் விவேகமும் கொண்ட மக்கள் தான். இந்தப் பூமியிலுள்ள ஏறத்தாழ அனைத்து நாடுகளும், யூதர்களின் இந்த கருத்தை, அவர்களிடமிருந்து கடனாகப் பெற்றே தங்களது உரிமையியல் அல்லது குடிமையியல் சட்டங்களின் முதன்மையான சரத்துகளை உருவாக்கியிருக்கின்றன என்பதை அச்சட்டங்களின் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடியும். பழங்காலமோ அல்லது நவீன காலமோ, ஆசியாவோ அல்லது ஐரோப்பாவோ எதை எடுத்துக் கொண்டாலும், மோசேயின் நியாயப்பிரமாணச் சட்டங்களைக் கடனாகப் பெற்றே தங்களது நாட்டின் சட்டங்களை உருவாக்கியுள்ளன. மேலும் நீங்கள் அதைச் சிறந்தது என்று அழைக்கப்படத் தகுந்தது என ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
- ஆடம் கிளார்க்
“கடந்த காலமாயினும், தற்காலமாயினும் யூதர்களுக்கு வழங்கப்பட்ட ஞானமும் விவேகமும் நிறைந்த முற்றிலும் நன்மை பயக்கிற சட்டங்களுக்காக அவர்களுடன் ஒப்பிடத்தகுந்த வேறு எந்த நாடுகளும் இந்தப் பூமியில் இல்லை. பண்பட்ட நாகரீக சமுதாயங்கள் என்று அறியப்பட்டதும், சோலோன், லைகர்கஸ், நுமா போன்ற திறமைவாய்ந்த சட்ட நிபுணர்களால் வழங்கப்பட்டது. கிரேக்கம் மற்றும் ரோமானிய நாடுகளின் சட்டங்கள்கூட யூதர்களின் சட்டங்களுக்கு இணையானவை அல்ல. இவற்றை உற்றுக் கவனிக்கும்போது, உண்மையிலேயே, இவர்களுடைய சிறந்த சட்டங்கள் கூட யூதச் சட்டங்களிலிருந்து கடன் வாங்கியதாகவே தெரியவருகிறது.
- டாக்டர். ஜான் கில்
வேதாகமம் தேவனின் வார்த்தையாக இருப்பதால், அது வழங்குகிற சட்ட அமைப்பும் தனித்தன்மை வாய்ந்ததாகவும், மனித சிந்தனைகளால் மட்டுமே வகுக்கப்பட்ட எந்தச் சட்டத் தொகுப்புகளைக் காட்டிலும் உயர்ந்ததாக இருக்கவேண்டும். யூத நாட்டைத் தவிர்த்த வேறு எல்லாத் தேசங்களும் ஒப்பிட இயலாத வகையில் அதனுடைய தனித்துவத்தை வெளிப்படையாகவே அறிந்திருக்க வேண்டும். பரிசுத்த வேதாகமத்தின் இந்த மகத்தான உரிமைபாராட்டலின் உண்மையை ஆய்வு செய்யும்படி, இந்தியர்களாகிய நாம் இந்திய நீதிச் சட்டங்களின் பின்னணியில் அந்த உரிமைகோரலை சோதித்தறியவும் இந்த கட்டுரை முற்ப்படுகிறது.
2. இந்தியச் சூழலிலும் வேதத்தின் மகத்தான உரிமைகோரல் நிரூபிக்கப்பட்ட உண்மையாயிருக்கிறது.
இந்தியச் சட்ட அமைப்பானது பரிசுத்த வேதாகமத்தால் இந்த நாட்டுக்குக் கிடைக்கப்பெற்ற அருட்கொடை என்றே சொல்ல வேண்டும். இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு கூற்றாகவோ அல்லது தீவிர சமயப்பற்றுள்ள ஒருவனின் கூற்றாகவே தோன்றலாம். ஆனால் இந்தக் கூற்றை ஒரு கருதுகோளாக அல்லது அனுமானமாக எடுத்துக்கொண்டு, இதன் உண்மைத் தன்மையை நேர்மையான மனதுடன் ஆராயவேண்டும் என்பதே அழைப்பு. இந்தக் கட்டுரையின் முதன்மை நோக்கம், இந்திய அரசியலமைப்பின் வரையறுக்கப்பட்ட வரம்பிற்குள் நின்று, இந்த கூற்றின் உண்மைத்தன்மையை விளக்குவதும், இந்த நாடு அதன் அரசியல் அமைப்புச் சட்டத்திற்காக கணக்கிட முடியாத அளவில் வேதாகமத்தின் தேவனுக்கு கடன்பட்டிருப்பது போல வேறு எந்தக் தேவனுக்கும் கடன்படவில்லை என்பதை நிருபிப்பதுமாகும்.
மேலும் வேதாகம கட்டளைகள் மற்றும் சட்டக் கோட்பாடுகளுக்கு இடையே தெளிவானதும் தவறில்லாததுமான தொடர்புப் பாலம் இருக்கிறது என்பதை நிரூபிப்பது மட்டுமின்றி, இந்த நாட்டின் குடிமை வாழ்க்கை முறையை வடிவமைப்பதில் மாற்று சமய ஆதாரங்களுக்கு இடமிருக்கிறது என்னும் கூற்றைக் கவனமாக ஆராய்ந்து நிராகரிக்கவும் இந்தக் கட்டுரையில் முயன்றிருக்கிறோம். ஒன்றுக்கொன்று முரண்பட்ட முறைமைகளையோ அல்லது ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமான முறைமைகளைக் கொண்டிருக்கிற மதங்கள் கூட்டுச் சேர்ந்து சட்ட முறைமைகளை உருவாக்குவதில் தங்களது பங்களிப்பைச் செலுத்தியிருக்க முடியாது என்று கூறுவது விவாதத்திற்குரியது ஆகும்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஆங்கிலேயர்கள் அவர்களின் ஆட்சியின்போது இயற்றிய பல சட்ட அம்சங்களை நாம் தொடர்ந்து பயன்படுத்தும்படி தெரிந்துகொண்டோம். இந்திய தண்டனைச் சட்டம் 1860, இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872, இந்திய சாட்சிச் சட்டம் 1872, குடிமைச் சட்டம் 1908 போன்றவை இத்தகைய சட்டங்களின் முக்கிய எடுத்துக்காட்டுகளாகும்.
ஆனால் மிக முக்கியமாக, நமது அரசியலமைப்பின் ஆதாரங்கள் எங்கிருந்து பெற்றன என்பதை விவரிக்கும் எந்தவொரு பாடப்புத்தகமும், நமது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை மேற்கத்திய நாடுகளிலிருந்து கடன் வாங்கினோம் என்பதை நமக்குத் தெரிவிக்கும். எடுத்துக்காட்டாக, பிரிட்டனிடமிருந்து “சட்ட ஆட்சி” முறையையும், அமெரிக்காவிடமிருந்து “அடிப்படை உரிமைகள்” முறையையும், பிரான்சிலிருந்து “குடியரசு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்” ஆகியவற்றுக்கான கொள்கைகளையும் கடன் வாங்கினோம் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இதுபோன்று கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலை நாம் இதிலே சொல்லமுடியாதபடி நீண்டு கொண்டே செல்கிறது. மேற்கத்திய நாடுகளில் உண்டான திருச்சபை மறுமலர்ச்சியால், சீர்திருத்தக் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளின் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் வாழ்வில் அது செல்வாக்கு செலுத்தத் தொடங்கியது. மேலும் மேற்கத்திய நாகரிக நாடுகளில் உள்ள சட்ட அமைப்பை வடிவமைப்பதற்கு, இத்தகைய சீர்திருத்த இயக்கங்கள் முக்கிய பங்களிப்பாளராக மாறின என்பது எல்லோராலும் அறியப்பட்ட உண்மையாகும்.
மேற்கத்திய நாடுகளின் சட்ட அமைப்பின் அடிப்படையான கொள்கைகள் வேறு எந்த உள்ளூர் இலக்கியங்களைக் காட்டிலும், வேதாகமம் போதிக்கும் காரியங்களை அதிகமாகப் பிதிபலிக்கின்றன. எனவே மேற்கத்திய நாடுகளின் சட்டங்களின் அம்சங்களை கடன் வாங்கியதன் மூலமாக, வேதாகம மரபுக்கு இந்தியா பயனாளியாக இருப்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. ஒரு பக்கச் சார்பில்லா எந்தவொரு நடுநிலையான மனமும் வேதங்கள் அல்லது மனுஸ்மிருதி அல்லது வேறு எந்த இதிகாசங்களைக் காட்டிலும் பரிசுத்த வேதாகமமே இந்திய நீதித்துறையை நிர்வகிக்கிறது என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளும். இந்திய அரசியல் அமைப்பில் பரிசுத்த வேதாகமத்தின் உரிமைகோரலை நிரூபிக்கிற பல ஆதாரங்களில் இந்த ஆதாரமும் ஒன்றாகும். ஏனெனில், வேதாகமத்தின் தெய்வீக வெளிப்பாட்டைப் போன்று, எங்களுடைய சட்டங்களும் தெய்வீக வெளிப்பாட்டிலிருந்தே பெற்றப்பட்ட என்று ஒப்பிட்டுப் பேசக்கூடிய எந்த நாடும் இல்லை. இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கியதில் வேதாகமத்தின் மாபெரும் பங்களிப்பை, அதனுடைய சட்டத்தின் எந்தப் பிரிவிலிருந்தும் போதுமான அளவு நிரூபித்துக் காட்ட முடியும். ஆயினும் இந்த மாபெரும் கூற்றை உறுதிப்படுத்துவதற்காக, நமது அரசியலமைப்பின் சில அடிப்படை அம்சங்களில் மட்டுமே நாம் இப்போது கவனம் செலுத்துவோம்.
1) இறையாண்மையுள்ள அரசியலமைப்பு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில், நமது அரசியலமைப்பு “இறையாண்மை” என்று கூறுகிறது. இது “சட்டத்தின் விதி” என்று அழைக்கப்படுவதற்கு அடிப்படையாக அமைகிறது. தேசம் ஒரு மனிதனின் அல்லது ஒரு குழுவின் தன்னிச்சையான அதிகாரத்தால் அல்ல, அது நிறுவப்பட்ட சட்டத்தாலேயே ஆளுகை செய்யப்பட வேண்டும் என்பதையே சட்டத்தின் ஆட்சி குறிக்கிறது. எந்தவொரு ஆட்சி அமைந்தாலும், அது அரசியலமைப்புச் சட்டம் விதித்துள்ள வரம்புகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். அரசியலமைப்பு வரம்புகளை மீறுகிற வகையில் எந்தவொரு அரசாங்கமும் தன்னிச்சையான அதிகாரத்தையும் வலுக்கட்டாயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ராஜாவும் குடிமக்களும் சட்டத்திற்குச் சமமாக கீழ்ப்படிந்திருக்க வேண்டும், குடிமக்களைப் போலவே ராஜாவும் சட்டத்திற்குப் பதிலளிக்க வேண்டும். அரசாங்கம் அரசியலமைப்பு என்னும் இயந்திரத்தை இயக்குகிறது, ஆனால் அரசாங்கமே அரசியலமைப்பு அல்ல. எனவே, அரசியலமைப்பே உண்மையான இறையாண்மை கொண்டது, அரசாங்கம் அந்த அரசியலமைப்பின் பணியாளர் மட்டுமே.
இப்போது அரசியலமைப்பின் இறையாண்மை அல்லது சட்டத்தின் ஆட்சி பற்றி பரிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்:
“அவன் (ராஜா) தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும், இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு, அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப் பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள்” (உபாகமம் 17:18-20).
எனவே, பரிசுத்த வேதாகமத்தின்படி மன்னரும் மக்களைப் போலவே சட்டத்திற்கு உட்பட்டவர். இந்த ராஜாவனார் தன்னிச்சையாக செயல்படாமல் ஏற்கனவே சட்டம் தீர்மானித்ததைச் செயல்படுத்தவும் பின்பற்றவும் மட்டுமே வேண்டும். மேலும், வேதாகமம் “சகோதரர்கள்” என்று அழைக்கிற தனது குடிமக்களுக்கு மேலாக ராஜா தன்னைப் பெரியவராக உயர்த்திக் கொள்ளக்கூடாது.
ஆனால் பண்டைய இந்திய நீதித்துறையின் முதன்மை ஆதாரமாகக் கருதப்படுகிற மனுஸ்மிருதியுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள்.
“மனுஸ்மிருதி அதியாயம் 1: 93, பிராமணன் (பிரம்மனின்) வாயிலிருந்து தோன்றியதாலும், அவன் முதன் முதலில் பிறந்தவனாக இருப்பதாலும், அவனிடமே வேதம் இருப்பதாலும் அவனே இந்த முழுப் படைப்பின் மேலும் அதிபதியாக இருப்பதற்கு உரிமை பெற்றிருக்கிறான் (ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு).
மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டமையினாலும், வேதங்களைப் பெற்றிருப்பதனாலும், முதலில் தோன்றினமையினாலும், படைக்கப்ட்ட யாவற்றினும் அந்தனன் சிறந்து விளங்குகின்றான் (திருலோக சீதாராம் மொழிபெயர்ப்பு)
மனுஸ்மிருதி அத்தியாம் 1: 107,108 இதில் புனிதச்சட்டம் முழுமையாக விளக்கப்பட்டுள்ளதோடு, மனிதனின் நல்ல மற்றும் கெட்ட குணங்களை அடிப்படையாகக் கொண்ட செயல்களும், நினைவுக்கு எட்டாத காலத்திய நடத்தை விதிகளும், கடைப்பிடிக்க வேண்டிய நான்கு சாதிகளும் (நான்கு வர்ணங்களின் அடிப்படையாகக் கொண்ட சாதி) கூறப்பட்டுள்ளன. வெளிப்படுத்தப்பட்ட புராணங்களிலோ அல்லது புனித மரபிலோ கற்பிக்கப்பட்டாலும் ‘நடத்தை விதியானது’ இயற்கை சுபாவத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டமாகும்; எனவே, தன்னைப் பற்றி அக்கறை கொண்ட இருமுறை பிறந்த மனிதன், அதைப் பின்பற்றுவதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் (ஆங்கிலித்திலிருந்து மொழிபெயர்ப்பு).
இதில் எல்லாத் தர்மங்களும், செயல்களின் குணா குணப்பான்மைகளும், நால் வருணத்திற்கும் பண்டுதொட்டு இருந்து வந்திருக்கிற ஒழுகுகளும் கூறப்பட்டிருக்கிறது. வேதத்திலும் ஸ்மிருதிகளிலும் விவரிக்கப்பெற்ற ஒழுகுகளே, இதில் கூறப்பெறுவதால், தனது நல்லாற்றை விரும்புவோன் இதில் ஈடுபட வேண்டியதாகும் (திருலோக சீதாராம் மொழிபெயர்ப்பு).
மேலே சொல்லப்பட்ட இரண்டாவது மேற்கோளாது, மனுஸ்மிருதியும் அதன் சொந்த விதியைக் கடைப்பிடிக்கக் கட்டளையிடுகிறது என்று தோன்றலாம். ஆயினும் இது ஏன் அரசியலமைப்பு உரிமையையோ அல்லது சட்ட ஆட்சி முறையோ அல்ல என்று சொல்லுகிறோம்.? ஏனெனில் முதலாவது மேற்கோளானது பிராமணனே படைப்பின் அதிபதி என்பதை தெளிவாக்குகிறது. மேலும் மனுஸ்மிருதிகளின் பிற பகுதிகளையும் கவனமாக ஆய்வு செய்வதன் மூலமாக, அது அனைத்து மக்களையும் (சாதியினரையும்) பிராமணிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கான ஓர் இயங்கமைப்பு முறையாக அல்லது பொறி நுட்பமாக இருக்கிறது என்பதே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. எனவே மனு இயற்றிய அரசியலமைப்புக்கு பிராமணர்களே பொறுப்பாளிகளாக இருப்பது, பிற சமூகத்தினரின் மீதான அவர்களது ஆட்சியை உறுதி செய்வதால், அது இறையாமையுள்ள அரசியல் அமைப்பு என்னும் தரத்திலிருந்து குறைக்கப்படுகிறது. மேலும் இது, சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் தனக்குக் கிழாக இருக்கிற சக குடிமக்களைக் காட்டிலும் எந்த வகையிலும் சிறந்தவர் அல்லர் என்றும், தனக்குக் கீழாக இருக்கிற சகோதரர்களைப் போலவே தானும் சட்டத்தின்முன் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவராயிருக்கிறார் என்றும் சொல்லுகிற தூய வேதாகமத்தின் சட்ட விதிகளைப் போன்றதும் அல்ல. ஆகவே இந்திய அரசியலமைப்பானது வேதாகமத்திலுள்ள சட்டத்தின் கொள்கைக்கு பொருத்தமான இணையாக இருப்பதைக் காண்கிறோம். இதற்கு மாறாக இந்தியாவின் பூர்வீகச் சமய நூல்களில், ஒரு குறிப்பட்ட சாதியின் ஆட்சியே சட்டத்தின் ஆட்சியாக புனையப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
2) சோசலிச (சமத்துவ) அரசியலமைப்பு
நமது அரசியலமைப்பானது அதன் இயல்பிலேயே சோசலிச (சமத்துவ) தன்மையைக் கொண்டுள்ளது என்று அதன் முன்னுரை குறிப்பிடுகிறது. இது சமூகத்தில் நிலவியிருக்கிற அனைத்து வகையான தன்னிச்சையான பாகுபாடுகளையும் ஒட்டுமொத்தமாக ஒழித்து, அனைத்து குடிமக்களும் சமம் என்பதை உணர்த்துகிறது. இந்திய அரசியலமைப்பின் பிரிவுகள் 14/18, சட்டத்தின்முன் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமையைப் பாதுகாக்கிறது. மேலும் மக்கள் அனைவருக்கும் சட்டங்களின் வாயிலாக சமமான பாதுகாப்புக்கும் உரிமை அளிக்கிறது. இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட சமய நூல்களின்படி, சமத்துவம் என்ற கருத்தாக்கமானது இந்த நாட்டிற்கு அந்நியமான ஒன்றாகும். வர்ணங்களின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளைத் தூக்கிப்பிடிக்கும் இந்திய சமய நூல்கள் சமத்துவக் கொள்கைக்கு எவ்வாறு பங்களிக்க முடியும்? மனிதன் தேவனின் சாயலிலும் ரூபத்திலும் படைக்கப்பட்டான் என்று போதிக்கும் வேதாகமத்தின் கருத்தைக் காட்டிலும் இது முற்றிலும் மாறானது அல்லவா? மனிதன் எவ்வாறு உருவானான் என்பது பற்றிய வேதாகம கண்ணோட்டத்தையும் மற்றும் இந்து வேதங்களின் கண்ணோட்டத்தையும் கவனத்தில் கொண்டால் இது நமக்குப் புதிராகத் தோன்றாது.
பரிசுத்த வேதாகமத்தின் கண்ணோட்டம், மற்றும் இந்திய வேதங்களின் கண்ணோட்டம், ஆகிய இரண்டில் எது உண்மையான சமத்துவ சமுதாயத்திற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. என்பதை நிரூபிக்க கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளைத் தருகிறோம்.
மனிதனின் படைப்பைப் பற்றி வேதாகம் கூறுகிறதாவது:
“பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்” (ஆதியாகமம் 1:26, 27).
இப்போது நாம் விஷ்ணு புராணம் கூறுவதை பார்த்தால் அத்தியாயம் 4 பத்தி 3 வது வசனத்தில் சொல்லப்பட்ட முரண்பாட்டை ஒப்பிட்டுக் காண்போம். (இதை ரிக் வேதமும் அத்தியாயம் 10:90:12, பகவத் கீதையும் அத்தியாயம் 4:13 உறுதிப்படுத்துகிறது).
“முன்னதாக, ஓ, பிராமணர்களில் சிறந்தவரே, பிரம்மன் சத்தியத்தைத் தியானித்துக் கொண்டிந்தபோது, உலகைப் படைக்க விரும்பினான். அவனுடைய வாயிலிருந்து குறிப்பாக நற்குணத்தைப் பெற்ற உயிரினங்கள் தோன்றின; அவனுடைய மார்பிலிருந்து சில தோன்றின, அவை அசுத்தத்தின் குணத்தால் வியாபித்திருந்தன; இன்னும் சில அவனினுடைய தொடையிலிருந்து தோன்றி, அவற்றில் அசுத்தமும் இருளும் மேலோங்கியிருந்தன; இன்னும் சில அவனுடைய பாதத்தில் இருந்து தோன்றின, அவர்களின் மீது இருளின் குணம் ஆதிக்கம் செலுத்தியது, வாயிலிருந்தும், மார்பிலிருந்தும், தொடையிலிருந்தும், பாதத்திலிருந்தும் தோன்றியவர்கள் முறையே பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்னும் சாதிகளாகத் தோன்றினர்.”
பகவத் கீதை 4:13, குணங்கள் மற்றும் கடமைகளில் உள்ள வேறுபாடுகளின்படி, நான்கு முறைகளிலான சாதிகளின் (வர்ணங்களின்) பிரிவுகள் என்னாலேயே உருவாக்கப்பட்டன. நானே அவற்றைப் படைத்தவனாக இருப்பினும், அவற்றைப் படைக்காதவனாகவும் (செயலற்றனாகவும்), அழிவற்றவனாகவும் என்னை நீ அறிவாயாக (திரு. கிசாரி மோஹன் கங்குலி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த “The Mahabarata” நூலின் தமிழாக்கம்).
இந்து சமயப் புத்தகங்கள் ஆணின் தோற்றம் பற்றிய அடிப்படையற்ற அனுமானத்தின் அடிப்படையில் ஆணுக்கும் ஆணுக்கும் இடையேயான பாகுபாட்டைக் காட்டுவது மட்டுமல்லாமல், அதே அடிப்படையற்ற அனுமானத்தின் அடிப்படையில் பெண்ணுக்கு எதிரான பாகுபாடு கடைப்பிடிக்கப் படுவதற்கும், அவர்களை அவமரியாதை செய்வதற்கும் சுரண்டுவதற்கும் வழி வகுத்துக்கொடுத்துள்ளன. நாம் மேலே குறிப்பிட்ட வேதாகமத்தின் வசனங்களைப் பார்க்கும்போது, ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தேவனுடைய சாயலிலும் ரூபத்திலும் படைக்கப்பட்டாள் என்று கூறுகிறது. ஆனால் இந்து மத நூல்களின்படி பெண்கள் எவ்வாறு படைக்கப்பட்டார்கள்??
பகவத் கீதை 9:32-34, ஏனெனில், ஓ! பிருதையின் மகனே (குந்தியின் மகனே அர்ஜுனன்) பாவப்பிறவிகள், பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோர் கூட என்னைப் பணிந்தால், உயர்ந்த இலக்கை (பரகதி) அடைகிறார்கள். அப்படி இருக்கையில், எனது அர்ப்பணிப்பாளர்களாக (பக்தர்களாக) இருக்கும் புனிதமான அந்தணர்கள் மற்றும் துறவிகளைக் குறித்து நான் என்ன சொல்வேன்? நிலையற்றதும், துன்பம் நிறைந்ததுமான இந்த உலகிற்கு வந்ததால், என்னை வழிபடுவதில் ஈடுபடுவாயாக. என்னில் உனது மனத்தை நிலைக்கச் செய்வாயாக; என்னிடம் அர்ப்பணிப்பு (பக்தி) கொண்டவனாகவும், என்னை வழிபடுபவனும் (தொழுபவனும்) ஆவாயாக; இப்படியே என்னைப் புகலிடமாகக் (பரமாகக்) கொண்டு நுண்மத்தில் (தற்கலப்பு யோகத்தில்) ஈடுபடும் நீ நிச்சயம் என்னையே அடைவாய்” என்றான் (திரு.கிசாரி மோஹன் கங்குலி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த “The Mahabarata”நூலின் தமிழாக்கம்).
உன்னதப் பிறவிகள் என்று அழைக்கப்படுகிற அரச துறவிகள் மற்றும் பிராமணர்கள் ஆகியோரைப் போலில்லாமல் பெண்கள் பாவப் பிறவிகளின் பட்டியலில் அடங்குவர் என்று கூறப்பட்டுள்ளதைக் கவனியுங்கள்.
மனுஸ்மிருதி அத்தியாம் 9:16-18, இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால், மாதர் ஓழுக்கம் கேடுருமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமரக இருக்க வேண்டியது. படுக்கை, ஆதனம், அழகு செய்தல், காமம், சினம், பொம், ஈரோச எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மநு(னு) படைத்தார். மாதர்க்குப் பிறவியைத் தூய்தாக்கும் சம்ஸ்காரங்கள் மந்திர பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவார்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனார் (திருலோக சீதாராம் மொழிபெயர்ப்பு).
வேத இலக்கியங்களில் தாழ்த்தப்பட்ட ஆண்களையும், அனைத்து சாதியைச் சேர்ந்த பெண்களையும் இவ்வாறு இழிவாகக் காட்டப்பட்டிருக்கும்போது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆண், பெண் சமத்துவம் அங்கீகரிக்கப் பட்டிருப்பதற்கான தேவையும் அதைப் பாதுகாக்கும்படியான அவசியமும் எவ்வாறு வந்தது? இந்திய அரசியலைமைப்புச் சட்டம் பரிசுத்த வேதாகமத்தைக் காட்டிலும், மனுஸ்மிருதி அல்லது பகவத்கீதையுடன் எவ்வாறு அதிகமாக ஒத்துப்போகமுடியும்? இதற்கான விடையைக் கண்டுபிடிப்பது கடினமான ஒன்றல்ல. வேதாகம அடிப்படையிலான சமத்துவத்தின் தாக்கமும், சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் சமூகத்தீமைகளாக எண்ணப்பட்டு, அவை இந்த நாட்டின் சட்டத்தால் தடைசெய்யப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு மட்டுமே பொருத்தமானவை என்று அங்கீகரிக்கப் பட்டிருப்பதன் தாக்கமுமே இந்திய அரசியலமைப்பில் தனக்கான இடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவ்வாறெனில், இந்துத்துவாவைத் தாங்கிப் பிடிப்பவர்கள், பிற இந்திய மக்களைத் தங்கள் காலடியில் ஆக்கியிருக்கும் சனாதன காட்டுமிராண்டித் தனத்தின் அடிப்படை அமைப்பை அரசியல் அமைப்பில் இல்லாமல் செய்த பரிசுத்த வேதாகமத்தை ஏன் வெறுக்கமாட்டார்கள்?
3) சமயச்சார்ப்பற்ற அரசியலமைப்பு
இந்திய அரசியலமைப்பின் முகவுரை மதச்சார்பற்ற அரசியலமைப்பை வழங்குவது மட்டுமல்லாமல், அரசியலமைப்பின் 25/28 வரையுள்ள பிரிவுகள், அனைத்து குடிமக்களுக்கும் விருப்பமான எந்த மதத்தையும் பின்பற்றவும், அதன்படி வாழவும், அதைப் பிரச்சாரம் செய்யவும் சுதந்திரத்தை வழங்கி அதைப் பாதுகாக்கவும் செய்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால், தனது கட்டளைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும், வேறு எந்த நம்பிக்கையையும் பின்பற்ற வேண்டாம் என்று போதிக்கிற வேதாகமத்துடன் இது முரண்படுவது போன்று தோன்றலாம். இருப்பினும், நமது அரசியலமைப்பு மத சுதந்திரத்திற்கு சில நியாயமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளும்போது, வேதாகமத்திற்கும் நமது அரசியலமைப்பிற்கும் இடையே உள்ள வெளிப்படையான முரண்பாடு உடனடியாக மறைந்துவிடும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25 ஆவது பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சமயச் சுதந்திரமானது, பொது ஒழுங்கு, பொது ஒழுக்கம் மற்றும் பொது ஆரோக்கியம் ஆகிய மூன்று நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. இந்த மூன்று கட்டுப்பாடுகளில் ஏதேனும் ஒன்றை மீறும் எந்தவொரு சமயத்தின் நடைமுறையும் அரசியலமைப்பிற்கு முரணானது மட்டுமின்றி, அது தடை செய்யப்படவும் வேண்டும்.
வேதாகமத்தின் தனித்துவமான மற்றும் உயர்ந்த சட்டங்கள் மற்றும் நியாயங்களின் கீழ் வடிவமைக்கப்பட்ட சிறந்த தார்மீக கட்டமைப்பானது, தரமற்ற நெறிமுறைகளைப் பின்பற்றும் பிற சமய நம்பிக்கை அமைப்புகளால் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்னும் முன்கணிப்பின் அடிப்படையில், வேறு எந்தவொரு மாற்று நம்பிக்கையையும் அதன் அமைப்பையும் பின்பற்றுவதை அது தடைசெய்கிறது காண்க: (லேவியராகமம் 18:1-5, 18:24-30) உபாகமம் 12:30-32).
இன்றைய இந்தியச் சூழலில் இதுவும் சரியாக இருப்பதை சோதித்து அறிந்துகொள்ளலாம். இப்படியிருக்கிற படியால், இந்திய சமய நூல்களில் சொல்லப்படும் ஒவ்வொரு தெய்வமும் இந்திய தண்டனைச் சட்டத்தால் கண்டிக்கப்பட வேண்டிய நிலையிலேயே இருக்கின்றன. இந்தியக் கடவுள்களின் செயல்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள முயன்றால் அவை அனைத்தும் மனிதகுலத்துக்கு மோசமான தார்மீக முன்னுரிமையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும்.
இந்திய மத நூல்களின் போதனைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிற பல அடிப்படை உரிமைகளை மீறுகின்றன. தங்களின் மத போதனைகளை எல்லா விஷயங்களிலும் தீவிரமாகக் கடைப்பிடிக்காததால் இன்று நம்மிடையே நல்ல இந்துக்கள் பலர் உள்ளனர். நமது அரசியலமைப்புச் சட்டமானது பல இந்து நூல்கள் கூறுவதைத் தடைசெய்வதிலும் அபராதம் விதிப்பதிலும் மிகச் சிறந்த பணியைச் செய்திருப்பதால் அவர்களது மத நூல்களின் பல கட்டளைகளை அவர்களால் பின்பற்ற முடியாமல் உள்ளனர். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீதான வன்கொடுமைகள், பெண்களின் கௌரவத்தை இழிவுபடுத்தும் நடைமுறைகள், பலதார மணம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சக மனிதர்களின் உயிருக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் போன்றவை பல தடைகளில் சில எடுத்துக் காட்டுளாகும்.
தார்மீக ரீதியான ஒழுக்கத்தைப் பற்றிய போதனைகள், ஆரோக்கியமான உபதேசங்கள் ஆகிய எதுவாக இருந்தாலும் அது இந்தியப் மதப்புத்தகங்களில் இல்லை என்பதே உண்மை. பெரும்பாலும் அவை அபாயகரமான போதனைகளாகவோ அல்லது தீங்கு விளைவிக்கும் ஆபத்தானதும் காரியங்களை முன்னுரிமையாகக் கொண்டதாகவுமே இருக்கின்றன. ஒருவேளை இந்தப் புத்தகங்களில் நல்லொழுக்கப் பண்புகள் காணப்படுமேயாயின், அவை அனைத்தும் உண்மையில் அவற்றிற்கு முந்திய காலத்தைச் சேர்ந்தவையாகவும், குறிப்பாக அவற்றின் மூலம் பரிசுத்த வேதாகமத்தில் காணப்படக் கூடியதாகவுமே உள்ளன. எனவே நமது அரசியலமைப்பின் 25 ஆவது பிரிவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மதச் சுதந்திரத்தை அதனுடைய முழுமையான உணர்வோடும் கருத்தோடும் செயல்படுத்தினால், இது மற்ற மத போதனைகளில் சொல்லப்பட்டுள்ளதுப் போல இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம், ஆயினும் உண்மையில் வேதாகத்தின் மதிப்புகளை மட்டுமே செயல்படுத்துகிறோம். ஒரு குறிப்பிட்ட மக்கள் கைக்கொள்ளும்படி சிறப்பான வகையில் கொடுக்கப்பட்ட வேதாகம அறிவுரைக்கும், நமது அரசியலமைப்பின் 25 ஆவது பிரிவில் உள்ள வரையறுக்கப்பட்ட மத சுதந்திரத்திற்கும் இடையிலான வேறுபாடானது ஒரு கொள்கையாக இராமல் அதை நடைமுறையில் செயல்படுத்தப்படுவதைச் சார்ந்ததாக உள்ளது. இவை இரண்டுக்கும் கொள்கையளவில், எந்த வேறுபாடும் கிடையாது, இரண்டும் ஒன்றுதான், ஆனால் அதைக் கடைப்பிடிப்பதிலேயே வேறுபாட்டை உருவாக்க முடியும்.
4) ஜனநாயக குடியரசு
“உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ: என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்; உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக்கூடாது” (உபாகமம் 17:14-15).
வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ள இந்த வசனங்கள், ஓர் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களின் கைகளில் வழங்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிக்கிறது. இஸ்ரேல் நாடாது நடைமுறையில் அதை முழுமையாகப் செயல்படுத்தத் தவறியபோதிலும், இந்தக் கொள்கையானது திருமறையில் தெளிவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களால் ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் தேவனாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் இந்த வசனங்கள் அறிவுறுத்துகின்றன. அந்த அரசர் ஓர் இஸ்ரவேலராக இருக்க வேண்டும், அவர் அந்நியராக இருக்கக்கூடாது. இது கொள்கையளவில் குடியரசின் உண்மையான அர்த்தம், அங்கு ஒரு மக்களின் பிரதிநிதி அவர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசு என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கிறபடியால், எந்தவொரு பூர்வீக மத ஆதாரங்களின் தாக்கமும் இருந்தால், அது நமது அரசியலமைப்பில் நிச்சயமாக இடம் பெற்றிருக்க முடியாது. ஆயினும், அனைத்து இந்திய மத எழுத்துகளும் ஒருமனதாக உண்டாக்குகிற சாதீயப் படிநிலையை அடிப்படையாகக் கொண்டு, ஆளுகிறவர்களும், ஆளப்படுகிறவர்களும் வெவ்வேறானவர்கள் என்னும் வித்தியாசத்தை உண்டாக்குகின்றன என்பதை நாம் நன்றாக அறிந்திருக்கிறோம்.
மனுஸ்மிருதி 8:20-21, அனுஷ்டானங்களில்லாத அந்தணன் மன்னன் சார்பாகத் தர்மானங்களைச் செய்யவும் கூடும், நாலா வருணத்தவன் செய்யக் கூடாது. மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தானால் தடைபெபறு கின்றதோ, அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப்போல், கண்முன்னே துன்பமுறுகின்றது.
மனுஸ்மிருதி 4:61, ஆட்சியாளர்கள் சூத்திரர்களாக இருக்கும் நாட்டிலும், அநியாயக்காரர்களால் சூழப்பட்ட நாட்டிலும், மதவெறியர்களுக்கு அடிபணிந்த நாடுகளிலும், தாழ்த்தப்பட்ட சாதியினருடன் திரளும் ஒரு நாட்டிலும் அவர் வசிக்க வேண்டாம் (ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு).
நாலாம் வருணத்தோன் அரசனாயிருக்கும் தாட்டிலும், அறம் அறியாதோரும், தீயொழுக்கமு டையோரும் வசிக்கும் கிராமத்திலும், பாவிகள் அருகுறையும் ஊரிலும் வசிக்கக்கூடாது (திருலோக சீதாராம் மொழி பெயர்ப்பு).
இந்திய வேத இலக்கியங்களின் பொதுவான கோட்பாட்டைப் பிரதிபலிக்கும் இந்தப் பத்திகள், இந்திய ஜனநாயகக் குடியரசின் கட்டமைப்பிற்கு அதிகமான அச்சுறுத்தல்களாக இருக்கின்றன என்பதை நிரூபிக்கின்றன.
முடிவுரை
சரியானதையும், நேர்மையானதையும் பேசுகிற இந்திய அரசியலமைப்பானது, இந்தியா நாட்டிற்கு ஓர் அந்நியமான ஆவணமாகும். இந்தியாவின் பூர்வீக மத நூல்களை அடிப்படையாகக் கொண்டு நமது அரசியலமைப்பை உருவாக்கியிருந்தால், நாம் சட்டத்தின் ஆட்சியைப் பற்றி பேசாமல், ஒரு சாதியின் ஆட்சியைப் பற்றியே பேசிக் கொண்டிருப்போம். சமத்துவத்தைப் பற்றி பேசுவது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டிருக்கும். அவ்வாறு மீறிப் பேசுவது ஒரு மதவெறியாகப் பாவிக்கப்பட்டு, அவர்களுக்கு கசையடிகள் கொடுக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டும், மரணத்தையும் சந்தித்திருப்பர். மதவெறி மதச் சார்பின்மையை ஒதுக்கித் தள்ளியிருக்கும். ஜனநாயகக் குடியரசு என்பது காட்டுமிராண்டிகளின் கருத்தாக இருந்திருக்கும்.
இந்துத்துவாவின் கிளை அமைப்புகள் இந்து ராஜ்யம் பற்றிப் பேசும்போதோ, அவர்கள் அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றி பேசும்போதோ, இதைக் காட்டிலும் சிறந்த அரசியலமைப்பை தங்களிடம் வைத்துக்கொண்டு பேசுகிறார்கள் என்று நாம் நினைத்துவிட வேண்டாம். இந்து மதத்தின் அடிப்படை கட்டமைப்பையே பாழ்படுத்திய இந்த அரசியலமைப்பை அவர்கள் வெறுக்கிறார்கள். தாங்கள் இழந்ததை மீண்டும் பெறுவதற்கான ஒரே வழி சீர்திருத்தங்கள் என்ற சாக்குப்போக்கில் அதை அவர்கள் திருத்த முற்படுவதுதான். சனாதன தர்மம் என்று அவர்கள் அழைக்கிற மனிதாபிமானமற்ற மற்றும் காட்டுமிராண்டித் தனமான முறைமைக்கு பரிசுத்த வேதாகமமே பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று அவர்கள் உணர்ந்தபடியால் அவர்கள் தொடர்ந்து வேதாகமத்தையும் அதைப் பிரசித்சிப் படுத்துகிறவர்களையும் எதிர்க்கிறார்கள்.
இத்தகைய தனித்துவமான மற்றும் உயர்ந்த சட்டங்களை வேதாகமத்தின் ஊடாக வெளிப்படுத்திய தேவனின் மகிமைக்காகவும், நாம் இதில் ஈடுபடாவிட்டால் உலக நாடுகளுக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போகக்கூடிய, நமது முன்மாதிரியான சட்ட அமைப்பில் மறைந்திருக்கும் வேதாகமத்தின் பங்களிப்பை வெளிக்கொணரவும், இதைப் பற்றிய மிக ஆழமான ஆராய்ச்சிக்கு கூடுதலாக வித்திடவும் இக்கட்டுரை உந்துதலாக அமைவதாக.