அறுபத்தாறு புத்தகங்கள் மட்டும் ஏன் 'தேவனின் வார்த்தை' என்று அழைக்கப்படுகின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா?
இந்த கேள்வி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் கிறிஸ்தவத்தில் ஒரு பிரிவாக கருதக்கூடிய ரோமன் கத்தோலிக்கர்கள் இந்த 66 புத்தகங்களோடு சில அபோக்ரிபல் (Apocrypha) புத்தகங்களும் தேவனால் எழுதப்பட்ட வேதமே என்று நம்புகிறார்கள். இந்த அபோக்ரிபல் புத்தகங்கள் பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் இடையில் எழுதப்பட்டவை. ரோமன் கத்தோலிக்கர்களின் வேதத்தின் புரிதல் இப்படி இருந்தால், மற்றொரு பிரிவாக கருதப்படும் “மார்மன்” என்பவர்கள், 'மார்மன் புத்தகம்' (The Book of Mormans), 'இறையியல் மற்றும் உடன்படிக்கைகள்' (The Doctrine and Covenants) மற்றும் 'விலையுயர்ந்த முத்து' (Pearl of Great Price) போன்ற புத்தகங்களும் வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவையும் தேவனுடைய வார்த்தையே என்றும் மார்மன் பிரிவினவர்கள் நம்புகிறார்கள். மற்ற சிலர் வேதத்தில் எந்த புத்தகங்கள் இருக்க வேண்டும், எந்த புத்தகங்கள் இருக்க கூடாது என்பதை பேரரசர் கான்ஸ்டன்டைன் முடிவு செய்தார் என்று சொல்லுகிறார்கள்.
இப்படியாக ஒவ்வொரு குழுவினரும் வெவ்வேறு கருத்துகள் உடையவர்களாக இருக்கும் போது இந்த 66 புத்தகங்கள் மட்டுமே தேவனின் முழுமையான வேதம் என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்? அபோக்ரிபல் என்ற புத்தகங்கள் ஏன் வேதம் அல்ல? எது வேதத்திற்கு உட்பட்ட புத்தகம், எது வேதத்திற்கு உட்படாத புத்தகம் என்பதை யார் தீர்மானிப்பது? சொல்லப்போனால் நாம் தினமும் வாசித்து சிந்தித்து தியானித்துக் கொண்டிருக்கும் இந்த வேதம் முழுவதுமாக தேவனுடைய வார்த்தையா? என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது? இவற்றை அறிய, சில வாரங்கள் அசையாமல் ஓரிடத்தில் அமர்ந்து, வேதத்தில் உள்ள ஆதாரங்களையும், வரலாற்று விவரங்களையும் ஆராய்ந்தால், இந்த வேதத்தின் நியதியையும் கோட்பாட்டையும் முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். இதை புரிந்துக் கொள்வதற்கு உதவும்படியான ஏராளமான புத்தகங்களும் ஆதாரங்களும் உள்ளன. ஆனால் இந்த கட்டுரையில் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு தொடக்கத்தில் மேலே உள்ள கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய முயற்சிப்போம்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபை வேதாகமத்தின் நெறிமுறைகளை அமைக்கவில்லை. பேரரசர் கான்ஸ்டன்டைன், ஜோசப் ஸ்மித், திருச்சபைத் தலைவர்கள், ஆட்சியாளர்கள், பெரிய பெரிய இறையியல் அறிஞர்கள் போன்றோர் யாரும் வேதாகம புத்தகங்களை முடிவு செய்யவில்லை. வேதாகம நியதி கோட்பாடு என்பது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின் அடிப்படையில் மட்டுமே நிறுவப்பட்டதாகும். திருச்சபையின் ஆண்டவராகிய கிறிஸ்துவுக்கு மட்டுமே எழுதப்பட்டதை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது. இந்த கோட்பாடு அவரது (கிறிஸ்து) அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது. நாம் அவரை விசுவாசித்தால், அவருடைய வார்த்தைகளிலும் நம்பிக்கை வைப்போம். அப்போது அவருடைய அதிகாரத்திற்கும் வார்த்தைக்கும் நாம் கீழ்ப்படிவோம்.
முதலில் பழைய ஏற்பாட்டைக் குறித்து பார்ப்போம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பழைய ஏற்பாட்டு வேதாகம பிரமாணத்தை உறுதிப்படுத்தினார். இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் யூதர்களின் வேத புத்தகங்களில் எதெல்லாம் பயன்பாட்டில் இருந்ததோ அதை அவர் வேதாகமமாக உறுதிப்படுத்தினார். அவைகளையே நமது வேதத்தில் உள்ள பழைய ஏற்பாட்டு புத்தகங்ககள், அவை முப்பத்தொன்பது. ஒரு முறை இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டு வேத புத்தகங்கள் முழுவதையும் பற்றி பேசினார். “நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 5:17 - 18). இவ்விதமாக இயேசுவின் ஊழியக் காலம் முழுவதும், பழைய ஏற்பாட்டு வேத வசனங்கள் அனைத்தும் தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வேத புத்தகங்கள் தான் என்பதை பலமுறை சுவிசேஷ புத்தகங்களில் இயேசு உறுதிப்படுத்தினார்.
1. வரலாற்று ரீதியாக, பழைய ஏற்பாட்டு வேத புத்தகங்கள் நம்ப தகுந்தவை.
இயேசுகிறிஸ்து பல சந்தர்ப்பங்களில் இதை உறுதிப்படுத்தினார். மத்தேயு 10:15; 19:3 - 5; 12:40; 24:38 – 39 ஆகிய வசனங்களில் இதைக் காணலாம். மேலும், தீர்க்கதரிசன புத்தகங்களை பார்த்தால் பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் துல்லியமானவை என்பதை இயேசு கிறிஸ்து பலமுறை உறுதிப்படுத்தியுள்ளதை புரிந்துக்கொள்ளலாம். உதாரணமாக: மத்தேயு 26:49 – 56 வரை உள்ள வசனங்களை பார்ப்போம். “உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவின்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கை நீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறது போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக் கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.”
2. வேதம் நிறைவானது, போதுமானது
பழைய ஏற்பாட்டு வசனங்கள் நிறைவானது, மற்றும் போதுமானது என்பதை இயேசுவும் உறுதிப்படுத்தினார். உதாரணமாக, லூக்கா 16: 27 – 31 வரை உள்ள வசனங்களைக் காணலாம். “அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.”
3. வேத வசனங்களின் ஒற்றுமை
பழைய ஏற்பாட்டு வேதத்தில் எந்த முரண்பாடும் இல்லை, அவற்றில் உள்ள அனைத்து வசனங்களும் ஒன்றோடு ஒன்று நல்ல இணக்கமும் ஒற்றுமையும் கொண்டவை என்பதை இயேசு கிறிஸ்து தனது வார்த்தைகளில் வெளிப்படுத்தினார். உதாரணமாக, லூக்கா 24: 27 மற்றும் 44-ம் வசனங்களைக் காணலாம். “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.”
4. வேதம் குறையற்றது, தவறில்லாதது
இயேசு கிறிஸ்துவும் ஒருமுறை பழைய ஏற்பாட்டு வேத புத்தகங்கள் போதுமானவை மற்றும் தவறில்லாதவை மட்டுமல்ல, அது குறைவற்றது என்றும் கூறினார். உதாரணமாக: “போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான். அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.” (மத்தேயு 22:24-29). இதன் பொருள், மனிதர்கள் தவறு செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது, ஆனால் வேத வாக்கியங்கள் (அதாவது பழைய ஏற்பாட்டு வேத புத்தகங்கள்) தவறிழைக்க முடியாதது மற்றும் என்பதை இயேசு கிறிஸ்து இந்த சந்தர்ப்பத்தில் உறுதிப்படுத்தினார். "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” (யோவான் 17:17).
5. வேதம் அதிகாரமுடையது
“என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார். அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார். இயேசு அவர்களை நோக்கி: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?" (மத்தேயு 21:13,16,42).
'இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளது', 'நீங்கள் வேதத்தில் படித்ததில்லையா', 'உங்களில் யாருமே அந்த வார்த்தையை வாசிக்கவில்லையா' – போன்ற சொற்றொடர்கள் பழைய ஏற்பாட்டு வேதம் அதிகாரபூர்வமானது என்பதை குறிக்கிறது. முழு பழைய ஏற்பாடும் தேவனின் வார்த்தைகளே என்பதையும் அவை பரிசுத்த வேதம் என்று இயேசுகிறிஸ்து உறுதிப்படுத்திய சந்தர்ப்பங்களையும் பார்ப்போம். "உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.” (மாற்கு 7:13) “நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.” (மத்தேயு 15:6) இந்த வசனங்களில், பழைய ஏற்பாட்டு வேத வசனங்களைக் குறிப்பிட்டு, அவை தேவனின் வார்த்தை என்பதை இயேசு கிறிஸ்து உறுதிப்படுத்துகிறார்.
ரோமன் கத்தோலிக்கத்தின் “அபோக்ரிபல்” என்று சொல்லப்படுகிற புத்தகங்கள் முதல் நூற்றாண்டு கால யூதர்களால் வேதமாக அங்கீகரிக்க படவில்லை. இயேசு கூட அவற்றை தேவனின் பரிசுத்த வேதமாக கருதவில்லை. யூதர்களின் வேதம் மட்டுமே இயேசு கிறிஸ்துவால் முழுமையான பழைய ஏற்பாடாக உறுதிப்படுத்தப்பட்டது. இயேசு “அபோக்ரிபா” என்ற புத்தகங்களை உறுதிப்படுத்தவில்லை, எனவே அவற்றினுள் உள்ளவற்றை எப்போதும் அவர் மேற்கோள் காட்டவோ அல்லது குறிப்பிடவோ இல்லை. இயேசு மட்டுமல்ல புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் யாருமே தங்கள் எழுத்துக்களில் இந்த “அபோக்ரிபா” புத்தகங்களை குறிப்பிடவில்லை.
சிலர் எழுப்பும் ஆட்சேபனையும் சந்தேகங்களும் என்னவென்றால், யூதா புத்தகத்தில் ஏனோக்கின் புத்தகத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது என்பார்கள். முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இது “அபோக்ரிபா” புத்தகங்களை சேர்ந்தது அல்ல. யூதர்களின் எழுத்துக்களின் மிகவும் பிரபலமான புத்தகம். யூதா அந்த புத்தகத்தை ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டார். நான்கு அல்லது ஐந்து வாக்கியங்களை மேற்கோள் காட்டுவது அல்லது ஒரு புத்தகத்தின் தலைப்பை எடுத்துக்கொள்வது, முழு புத்தகமும் தேவனால் எழுதப்பட்ட வேதமாக மாறிவிடுமா? இல்லை அப்படிப் பார்த்தால் அப். பவுலும் அப்போஸ்தலர் 17 – ம் அதிகாரத்தில் புறஜாதிக் கவிஞர்கள் & புலவர்களின் வார்த்தைகளைக் குறிப்பிடுகிறார், எனவே அவை தேவனுடைய வார்த்தை என்று நினைக்கலாமா? இல்லவே இல்லை. எதுவரை மேற்கோள் காட்டப்பட்டதோ, அது தேவனின் வார்த்தை.
புராட்டஸ்டன்ட் & சீர்திருத்த திருச்சபை ஏன் “அபோக்ரிபா” புத்தகங்களை ஏற்றுக் கொள்ளவில்லை? அவைகளை ஏன் வேதமாக கருதவில்லை? ஏனெனில் இயேசு அவற்றை வேதவாக்கியங்களாக உறுதிப்படுத்தவில்லை. ஆதாலால் தான் அவைகளை வேதமாக ஏற்றுக்கொள்ளவில்லை, குறைந்தபட்சம் அப்போஸ்தலர்கள் கூட அவைகளைப் பற்றி பேசவில்லை. அந்த புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு புத்தகமும் முக்கியமான புத்தகமாக கருத முடியாது. திருச்சபையின் தொடக்க கால பிதாக்களில் பலர் “அபோக்ரிபா” என்ற புத்தகங்களை முக்கியமாக கருதவில்லை. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த “ஜெரோம்” என்பவர் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
புதிய ஏற்ப்பாட்டை பொறுத்தவரையில் பழைய ஏற்பாட்டிற்கு நாம் பயன்படுத்திய அதே விதிமுறைகள் புதிய ஏற்பாட்டிற்கும் பொருந்தும். இயேசு கிறிஸ்து யூதர்களின் வேதாகமத்தை (அதாவது பழைய ஏற்பாட்டை) தேவனின் வார்த்தையாக உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், அவருடைய அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளான அப்போஸ்தலர்களுக்கு, அவர் கட்டும் திருச்சபைக்கு தேவையான கூடுதல் வெளிப்பாட்டையும் வழங்குவதாக உறுதியளித்தார். இயேசுகிறிஸ்து தாம் மரிப்பதற்கு முந்தைய நாள் தம்முடைய சீஷர்களிடம் இப்படியாக சொன்னார். யோவான் 14:25-26: “நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன். என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.” வேதாகம பிரமாணக் கோட்பாட்டிற்கான மிக முக்கியமான வார்த்தைகள் இந்த வசனத்தின் கடைசிப் பகுதி வார்த்தைகள் "நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.” யார் நினைப்புட்டுவார் என்றால் பரிசுத்த ஆவியானவர். இது மிகவும் அற்புதமான ஒரு வாக்குறுதியாகும், மேலும் புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களும் இந்த வாக்குறுதியின் நிறைவேறுதலாகும். இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்கள், குணப்படுத்துதல்கள், அவரது போதனைகள், உரைகள் போன்றவை இந்த புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. இதே சந்தர்ப்பத்தில், ஓரிரு அதிகாரங்களுக்குப் பிறகு, இயேசு அப்போஸ்தலர்களிடம் பேசும்போது, மேலும் பரிசுத்த ஆவியின் மூலம் அவர்களுக்கு இன்னும் கூடுதல் வெளிப்பாட்டைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். "இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.” யோவான் 16:12-15. புதிய ஏற்பாட்டின் மீதமுள்ள புத்தகங்கள் அல்லது நிருபங்கள் அந்த கூடுதல் வெளிப்பாடாகும். கிறிஸ்துவின் ஆவி அப்போஸ்தலரைத் ஏவியப்போது எழுதியவைகளின் மூலம் தேவன் திருச்சபைக்கு கொடுத்த சத்திய வேதமே புதிய ஏற்பாட்டின் மீதமுள்ள புத்தகங்கள் அனைத்தும். புதிய ஏற்பாட்டின் எஞ்சிய அனைத்து வேதங்களும் கிறிஸ்துவின் ஆவி அப்போஸ்தலரைத் தூண்டியபோது தேவன் சபைக்குக் கொடுத்த உண்மையான வேதங்கள்.
இவ்வுலகில் தம்முடைய சாட்சிகளாக இருக்கும்படி இயேசுகிறிஸ்து அப்போஸ்தலர்களுக்குக் கட்டளையிடுகிறார். இவ்வாறு கிறிஸ்து புதிய ஏற்பாட்டை முன்கூட்டியே அங்கீகரிக்கிறார். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் பரிசுத்த ஆவியின் தூண்டுதலின் கீழ் எழுதியது போல, கிறிஸ்துவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் பரிசுத்த ஆவியின் தூண்டுதலின் கீழ் எழுதினார்கள். எனவே நாம் புதிய ஏற்பாட்டு வேதத்தை மட்டுமே வேதமாக, தேவனின் வார்த்தையாக ஏற்றுக்கொண்டு, அதை புரிந்துகொண்டு, அவைகளுக்கு கீழ்ப்படிகிறோம். இவை அனைத்தையும் மனதில் கொண்டு புதிய ஏற்பாட்டின் அனைத்து புத்தகங்களுக்கும் இந்த அளவுகோள்களை பயன்படுத்த முயற்சிப்போம்.
மத்தேயு மற்றும் யோவான்: இந்த இரண்டு சுவிசேஷங்களும் அப்போஸ்தலர்களால் எழுதப்பட்டவை.
மாற்கு: இந்த புத்தகத்தில் அப். பேதுருவின் நினைவுகள் அதிகமாக உள்ளதால். பேதுருவின் அப்போஸ்தல அதிகாரத்தின் கீழ் மாற்கு இந்த புத்தகத்தை எழுதினார்.
லூக்காவின் சுவிசேஷம், மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் ஆகிய இரண்டு புத்தகங்களும் எவ்வாறு யார் எழுதியது என்பதை லூக்கா சுவிசேஷத்தின் ஆரம்ப வசனங்களை வாசித்தால் மிக தெளிவாக தெரியும்.
“ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.” (லூக்கா 1:2,3,4). மேற்குறிப்பிட்ட வசனத்தில் இந்த 'அறிதல்' என்ற வார்த்தையின் ஊழியர்களாக இருந்தவர்களிடமிருந்து (அப்போஸ்தலர்கள்) ஆரம்பத்திலிருந்தே இவற்றைக் கண்களால் பார்த்தவர்களிடமிருந்து வந்தது. அதுமட்டுமின்றி, லூக்கா அப்போஸ்தலனாகிய பவுலின் சுவிசேஷ பயணங்களில் துணையாக இருந்தார். எனவே அப். பவுலின் மேற்பார்வையில் லூக்கா இந்த புத்தகங்களை எழுதினார். மேலும் (1 தீமோத்தேயு 5:18) - வசனத்தில் “வேதவாக்கியம் சொல்லுகிறதே.” அப். பவுல் லூக்கா சுவிசேஷத்தை ‘வேதம்' என்று குறிப்பிட்டதாக வாசிக்கிறோம். "உதாரணமாக, “போரடிக்கிற மாட்டை வாய்கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே.” “வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்.” வேதம் கூறுகிறது: இங்கே மேற்கோள் காட்டப்பட்ட வசனங்கள் லூக்காவைத் தவிர வேறு எங்கும் குறிப்பிடவில்லை (லூக்கா 10:7) “வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்” எனவே அப். பவுல் லூக்காவின் எழுத்துக்களைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகிறது. இது லூக்கா எழுதின சுவிசேஷத்திலும் மற்றும் லூக்காவின் அப்போஸ்தலர் புத்தகத்தையும் வேதமாக உறுதிப்படுத்துகிறது.
அப். பவுல் எழுதிய நிருபங்கள்: ரோமர் முதல் பிலேமோன் வரை. அப். பவுலின் நிருபங்கள் 'பரிசுத்த வேதம் தான்’ என்று பேதுருவும் உறுதிப்படுத்துகிறார். உதாரணமாக, 2 பேதுரு 3:15-16: மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.
எபிரேயர் நிருபம்: இந்த புத்தகத்தின் ஆசிரியர் உறுதியாக யாரென்று சொல்ல முடியவில்லை என்றாலும், திருச்சபை வரலாற்றில் பலர் இந்த புத்தகத்தை அப். பவுல் தான் எழுதியிருக்கலாம் என்று நம்புகிறார்கள். ஒருவேளை அப். பவுல் இந்தப் நிருபத்தை எழுதாவிட்டாலும், பவுலின் ஊழியத்தை அருகில் இருந்து கண்ட ஒருவர் தான் எழுதியிருக்க வேண்டும் என்பதற்கு அந்த நிருபத்திலேயே ஆதாரம் உள்ளது. எபிரேயர் 13:23-25-ன் படி, “சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப் பட்டானென்று அறிவீர்களாக; அவன் சீக்கிரமாய் வந்தால், அவனோடே கூட நான் வந்து, உங்களைக் காண்பேன். உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் யாவரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். கிருபையானது உங்களனைவரோடும் கூட இருப்பதாக. ஆமென்.” எபிரேய எழுத்தாளர் தீமோத்தேயுவுடன் இணைந்திருந்தார் என்று தெரிகிறது. இந்த எழுத்தாளர், லூக்காவைப் போலவே, எபிரெயர் 2:3-ல் கூறுகிறார், "முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,” எபிரேயர் புத்தகத்தை எழுதிய லூக்காவைப் போலவே, கர்த்தர் போதித்ததைக் கேட்டவர்களிடமிருந்து, அதாவது அப்போஸ்தலர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட செய்திகளை இந்த எபிரெயர் நிருபத்தில் நமக்குச் சொல்கிறார். எனவே இந்த நிருபம் அப்போஸ்தலர்களின் அதிகாரத்தின் கீழ் அவர்களின் மேற்பார்வையில் எழுதப்பட்டது.
பொதுவான நிருபங்கள்: யாக்கோபு நிருபம்: அப். யாக்கோபு இந்த நிருபத்தை எழுதியிருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அவர் சபையின் ஆரம்ப நாட்களிலே இரத்தசாட்சியாக மரித்து விட்டார். “யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்” (அப் 12:2). இயேசு கிறிஸ்துவின் சகோதரரான யாக்கோபு இந்தப் நிருபத்தை எழுதியிருக்க வேண்டும். அவன் முதலில் இயேசுவை மேசியா என்று விசுவாசிக்கவில்லை என்றாலும், பின்னர் அவர் இயேசு கிறிஸ்துவை மேசியாவாக விசுவாசித்து ஏற்றுக்கொண்டார். அதுமட்டுமின்றி எருசலேம் சபையில் முக்கிய தலைவராகவும் பொறுப்பேற்கிறார். (அப் 12:17; 15:13; 21:18 ) – இந்த வசனங்களில் அவர் அப்போஸ்தலர்களின் ஐக்கியத்தில் இருக்கிறார் என்பதை பார்க்கிறோம். (அப். 15:29) “அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது;” இந்த வசனத்தில், யாக்கோபு “எங்களுக்கும் நலமாகக் கண்டது” என்று சொல்லும் போது அப்போஸ்தலர்களின் ஐக்கியத்தில் இருந்ததாகவும், அவர்கள் சார்பாக அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிட்டதாகவும், நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது. “எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, (சபைக்கு) தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும்,” (கலாத்தியர் 2:9). திருச்சபையின் தூணாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்முடைய ஆண்டவரின் சகோதரரும், திருச்சபையின் தலைவருமான யாக்கோபு, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைத் தம் கண்களால் கண்டவர். “பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்” (1 கொரி 15:7). அப்போஸ்தலர்களுடன் ஐக்கியம் கொண்டிருந்த யாக்கோபு அப்போஸ்தலர்களின் அங்கீகாரத்தின் கீழ் மற்றும் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த நிருபத்தை எழுதினார்.
பேதுரு மற்றும் யோவானின் நிருபங்கள்: இந்த நிருபங்களும் அப்போஸ்தலர்களால் எழுதப்பட்டவை. (1பேதுரு 1:1,2 மற்றும் 1யோவான் 1:1-3) ஆகிய வசனங்களில் பார்க்கிறோம். மற்றும் இந்த நிருபங்களின் பெயர்களை வாசிக்கும் போதே இவைகளை யார் எழுதினார்கள் என்று நமக்கு தெரிந்து விடுகிறது.
யூதாவின் நிருபம்: இந்த யூதா, ஓரிடத்தில் மறைமுகமாக அவர் அப்போஸ்தலர்களில் ஒருவரல்ல என்று கூறுகிறார் (யூதா 17) “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள்.” மற்றும் இந்த நிருபம் இயேசு கிறிஸ்துவின் சகோதரரான யூதாவால் எழுதப்பட்டது (யூதா 1). “இயேசு கிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசு கிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:” அவர் தனது சகோதரர் யாக்கோப்பு மற்றும் மற்ற அப்போஸ்தலர்கள் ஐக்கியத்தில் (அப் 1:12-14) “அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.” (1 கொரிந்தியர் 9:5) “மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும்,” அப்போஸ்தலர்களின் அதிகாரத்தின் கீழும், மேற்பார்வையிலும் இந்த நிருபத்தை எழுதினார்.
கடைசி புத்தகம் வெளிப்படுத்துதல்: அப்போஸ்தலனாகிய யோவான் இந்த புத்தகத்தை எழுதினார். எனவே புதிய ஏற்பாட்டில் உள்ள ஒவ்வொரு புத்தகமும் அப்போஸ்தலர்களின் அதிகாரத்தின் கீழ் எழுதப்பட்டது. பெரும்பாலானவை அப்போஸ்தலர்களால் நேரடியாக எழுதப்பட்டன, மீதமுள்ள நிருபங்கள் அப்போஸ்தலர்களின் ஊழியத்தில் பங்கு பெற்றவர்களால் அதாவது ஐக்கியம் உள்ளவர்களால் அப்போஸ்தலர்களின் அங்கீகாரத்துடன் எழுதப்பட்டன. இந்தப் புத்தகங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளிடமிருந்து வந்த படியால் நாங்கள் கீழ்ப்படிகிறோம். இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் நமது தேவனுக்கே கீழ்ப்படிகிறோம்.
வேதப் பிரமாணம் முழுமை பெற்றுவிட்டது என்று நாம் கூறக் காரணம், இயேசு கிறிஸ்து தம்முடைய பிரதிநிதிகளாக யாரை நியமித்தாரோ, அவர்கள் வாழும் காலத்தில் வரையில் மட்டுமே அந்த வெளிப்படுத்தல் சாத்தியமாகும். அதற்குப் பிறகு அவர்களின் வாரிசுகளாக யாரேனும் நியமிக்கப்படுவார்கள் என்றோ, அந்த வாரிசுகள் மூலம் புதிய வெளிப்பாடு வழங்கப்படும் என்றோ எண்ணுவதற்கு எந்த ஆதாரமும் வேதத்தில் எங்கும் இல்லை. எனவே, கடைசி அப்போஸ்தலரின் வாழ்நாள் முடிவதற்கு முன்பு எந்த வெளிப்பாடு வழங்கப்பட்டதோ அவை மட்டுமே வேதம். அதன் பிறகு, தேவனால் புதிய வெளிப்பாடுகளோ, அவைகளின் மூலம் புதிய புத்தகங்கள் எழுதப்படவோ வாய்ப்பில்லை. எனவே புதிய வெளிப்பாடுகள் வருகின்றன என்ற அவர்களின் கூற்றை வேதத்தின் வெளிச்சத்தில் எளிதாக நிராகரிக்க முடியும்.
ஏன் அறுபத்தாறு புத்தகங்கள் மட்டும்? இயேசு கிறிஸ்துவின் அதிகாரமாக வேதாகமம் முழுமையான தேவனுடைய வார்த்தை என்பது நமது விசுவாசத்தின் அடிப்படையாக இருக்கிறது. எனவே, இயேசு உறுதிப் படுத்தியவற்றை மட்டுமே வேதம் என்று அழைக்கிறோம், அவர் அங்கீகரித்த பிரதிநிதிகள், அப்போஸ்தலர்களால் சுயமாக எழுதப்பட்டவை மற்றும் பிற தேவ மனிதர்களால் அப்போஸ்தலர்களின் ஒப்புதலுடனும் அவர்களின் மேற்பார்வையிலும் எழுதப்பட்டவை. அதனால்தான் 66 புத்தகங்கள் மட்டுமே தேவன் அருளிய பரிசுத்த வேதம்.