இன்றைய கிறிஸ்தவ திருச்சபைகளில் நுழைந்துள்ள சில கள்ள போதகர்கள், அப்போஸ்தலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இந்து வேதங்களில் தேவனுடைய வார்த்தை எழுதப்பட்டுள்ளது என்றும், அவர்களுடைய தெய்வங்களுக்கும், நம்முடைய தேவனுக்கும் சில ஒற்றுமைகள் இருகிறது என்பதை நிருபிக்கும், முயற்சியை செய்து வருகின்றனர். இது வேதவாக்கியங்களின் படி ஒரு கேவலமான உபதேசம். ஆகையால், நான் இந்தக் கட்டுரையில் அவர்கள் போதிக்கும் போதனைகளை வேதாகமம் ஏற்றுக்கொள்கிறதா? என்பதை விளக்கி, அவர்களின் அவதூறான உபதேசங்களை நியாயப் படுத்துவதற்காக அவர்கள் வேத வசனங்களை திரித்து காண்பிக்கும் வசனங்கள் அதற்கு பொருந்தாது என்பதை நிரூபித்துள்ளேன்.
ரோமர் 3:1 “இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.” இந்த வசனத்தில், அப்போஸ்தலனாகிய பவுல் யூதர்களுக்கு மட்டுமே சொந்தமான மகத்துவத்தையும், நன்மைகளையும் விவரிக்கும் தருணத்தில் முதன் முதலாக "தேவனுடைய வார்த்தைகள்" யூதர்களுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார். ஆதியாகமம் முதல் மல்கியா வரையுள்ள, பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் அனைத்திலும், தேவனுடைய வார்த்தைகளை எழுதியவர்கள் இஸ்ரேலர்கள் அல்லது யூதர்கள். பிறமத வேதங்களில் தேவனுடைய வார்த்தை எழுதப்பட்டுள்ளது என்று போதிக்கும் கள்ள போதகர்கள் அப். பவுல் எழுதிய வார்த்தையின் படி அவைகளை எழுதியது யூதர்களா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கவேண்டும்.
சங்கீதம் 147:19,20 “யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா.” இந்த வசனத்தின் படி, (பழைய ஏற்பாட்டில்) தேவன் தம்முடைய வார்த்தையையும், நியாயங்களையும் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தினார்; மற்ற எந்த இன மக்களுக்கும் அவர் வெளிப்படுத்தவில்லை. "அவருடைய தீர்ப்புகள் அவர்களுக்குத் தெரியாது". வேத வசனம் இவிதமாய் சொல்லும்போது, இந்து வேதங்களில் கூட தேவனுடைய வார்த்தை எழுதப்பட்டது என்றும், அதன் மூலமாக இந்துக்களுக்கும் சுவிஷேசத்தை பிரசிங்கிக்கலாம், என்று இவர்கள் போதிக்கிறார்கள். எனவே இந்த போதனை நிச்சயமாக மிக மோசமான அவதூறாகும். புறமத வேதங்களில் தேவனுடைய வார்த்தை எழுதப்பட்டுள்ளது என்ற போதனையை வேதாகமம் ஏற்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை இதுவரை பார்த்தோம். இனிமேல் அந்த போதனையை செய்பவர்களின் வேதத்தை புரட்டுகளையும், வேதத்தின் விளக்கங்களையும் பார்ப்போம்.
1. எண்ணாகமம் 22:5,6 “அவன் பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்துவரும்படி, தன் சந்ததியாருடைய தேசத்தில் நதியருகேயுள்ள பெத்தூருக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி, எகிப்திலிருந்து ஒரு ஜனக்கூட்டம் வந்திருக்கிறது; அவர்கள் பூமியின் விசாலத்தை மூடி, எனக்கு எதிரே இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் என்னிலும் பலவான்கள்; ஆகிலும், நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; ஆதலால், நீர் வந்து, எனக்காக அந்த ஜனத்தைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறிய அடித்து, அவர்களை இத்தேசத்திலிருந்து துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான். இந்த வசனங்களில், பிலேயாம் என்ற ஒரு மனிதன் நமக்கு அறிமுக செய்யப்படுகிறது. அவனைப் பற்றி விவரங்கள் இந்த அதிகரத்திலும், 23, மற்றும் 24-ம் அதிகாரங்களிலும் எழுதப்பட்டுள்ளன. இந்த பிலேயாம் ஒரு புறவினத்தானாக இருந்தாலும், தேவன் அவனோடு பேசினார் என்றும், மேலும் பிலேயாமும் தேவனுடைய தீர்க்கதரிசியைப் போலவே வாழ்ந்தார். என்பதாக இந்த இடத்தில் பார்க்கிறோம். எனவே, சில கள்ள போதகர்கள், புறவினத்தானான பிலேயாமிடம் தேவன் பேசியதைப்போல மற்ற புறவினத்தாரிடம் பேசியதாகவும், அவர்களுடைய வேதங்களில் கூட தேவன் அவருடைய வார்த்தைகளை எழுதினார் என்பதே அவர்களின் வாதம். அதுவே உண்மையாக இருந்தால், ரோமர் நிருபங்களிலும், சங்கீதங்களிலும் "தேவனுடைய வார்த்தைகள் யூதர்களுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. என்று ஏன் எழுதப்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். அதுபோலவே, தற்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் தலைப்பு தேவன் மற்ற இனத்தாரிடம் பேசினாரா? இல்லையா? என்பதைப் பற்றி அல்ல. மாறாக புற இனத்தவரைக் கொண்டு தேவனுடைய வார்த்தை அவர்களின் வேதத்தில் எழுதப்பட்டதா? இல்லையா? என்பதே! பழைய ஏற்பாட்டில் வேறு சில இடங்களில் பார்க்கிறோம், உதாரணமாக ஆபிரகாம் விசயத்தில் அபிமேலேக்கிடமும், யாக்கோபின் விசயத்தில் அவருடைய மாமனாகிய லாபானிடம் பேசியதைப் போல, மற்றும் தேவன் புறவின அரசர்களான பார்வோன் மற்றும் நேபுகாத்நேச்சார் ஆகியோருக்கு வந்த கனவுகளின் மூலம் பேசினார் என்பதை பார்க்கிறோம்.
இந்த நிகழ்வுகளை நாம் கவனமாகப் பார்த்தால், தேவன் தன்னுடைய பக்தர்களை, அந்தந்த இராஜ்யங்களில் தம்முடைய தீர்க்கதரிசிகளை உயர்த்துவதற்காக அவ்விதமாக செய்தரே தவிர, அந்த புற இனத்தாரைக் கொண்டு வேதங்களை எழுதவோ அல்லது அவர்களை மகிமைப்படுத்தவோ அவைகளைச் செய்யவில்லை, அதுப்போலவே தேவன் பிலேயாமை கூட பயன்படுத்தினார். புற இனத்தாருக்கு முன்பாக இஸ்ரவேலர்களை மகிமைப் படுத்துவதற்காகவே அவனை பயன்படுத்தினார். அவ்வாறே, தேவன் அவர்களிடம் பேசியபோது, யெகோவா என்ற பெயரில்தான் பேசினார். பிலேயாமிடம் கூட யெகோவா என்ற தேவனின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தார். வேதாகமத்தில், உள்ள அனைத்து தீர்க்கதரிசிகளும் திர்க்கதரிசனத்தை உரைத்தபோது யெகோவா என்ற நாமத்தைக் கொண்டே பேசினார்கள். ஒருவேளை அவர்கள் சொல்லுவதுப்போல, யெகோவா தேவன் பிறமத வேதங்களைக் கூட தேவனே எழுத வைத்தாரென்றால், அந்த வேதங்களில் யேகோவா என்ற அவருடைய நாமம் ஏன் எங்குமே காணப்படவில்லை?
2. மத்தேயு 2:1,2 "ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லெகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.” இந்த வசனத்தில் இயேசுகிறிஸ்து பிறந்தபோது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் நட்சத்திரத்தைப் பார்த்து அவரை பணிந்துக்கொள்ள வந்ததாக எழுதப்பட்டுள்ளது. வேதத்தை புரட்டுகிறவர்கள், இந்த சந்தர்ப்பத்தைக் குறிப்பிட்டு, அந்த நட்சத்திரம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கின்றது என்பதை அவர்கள் எப்படி அறிந்தார்கள். தேவன் அந்த காரியத்தை அவர்களின் வேதத்தில் எழுதியுள்ளார், எனவே தான் அதை அவர்கள் வேதத்தில் கண்டறிந்து வந்தார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், நமது தமிழ் வேதாகமத்தில் கிழக்கு தேசத்திலிருந்து வந்தவர்களை சாஸ்திரிகள் அல்லது ஞானிகள் என்று மொழிபெயர்க்கப்படுகிற இடத்தை "மகோய்" என்ற கிரேக்க வார்த்தையை பயன்படுத்தப்பள்ளது. அராமிக் மொழியில் இந்த வார்த்தை "மகோஷி" என்று இருக்கிறது. "மகோய், அல்லது மகோஷி" என்பது பாரசீக வார்த்தையான "மகுஸ்" என்பதிலிருந்து பெறப்பட்டது. "மகுஸ்" என்ற வார்த்தையை தானியேலின் காலத்திலிருந்த தரியு என்ற மன்னன் "பெஹைட்டன்" என்ற கல்வெட்டில் இந்த “மகுஸ்” என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கான தொல்பொருள் சான்றுகள் கிடைத்துள்ளது. இந்த "மகுஸ்" என்ற வார்த்தையின் மூலம் பெர்சியர்கள் தங்களின் மத பெரியவர்களையும், ஜோராஸ்டிய மத பெரியவர்களையும், அவர்கள் தேசத்தில் நீதி வழங்கும் பெரியவர்களையும், அது மட்டுமல்லாமல், அவர்கள் ஜோதிடர்களையும் மற்றும் வானாவிலாளர்களையும் அந்த வார்த்தைகளினால் அழைப்பார்கள். "மேஜிக், மேஜிசியன், மேஜிஸ்டோ" போன்ற ஆங்கில வார்த்தைகள் அனைத்தும் இந்த பாரசீக வார்த்தையான "மகுஸ்" என்ற வார்த்தையிலிருந்து கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
புதிய ஏற்பாட்டை அராமிக் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, இந்த வசனத்திற்கு விளக்கம் எழுதிய வேத அறிஞரான "ஆண்ட்ரூ கேப்ரியல் ரோத்" என்பவர் இவிதமாக சொல்லுகிறார்: இந்த கிழக்கு தேசத்து சாஸ்திரிகளுக்கு அந்த நட்சத்திரத்தை குறித்து அவர்கள் எப்படி அறிந்தார்கள் என்ற கேள்வியை விளக்குகையில் யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட போது, அந்த யூதர்களில் தானியேலும் இருந்தார், அந்த தானியேல் பாரசீக அரசரான கோரேஸுடம் நல்ல உறவைக் கொண்டிருந்தாக நாம் தானியேல் புத்தகத்தில் படிக்கிறோம். இந்த தானியேல் அந்த நாட்டின் அரசியல்வாதிகள், ஜோதிடர்கள் மற்றும் பண்டிதர்களுடன் நல்லுறவைக் கொண்டிருந்தார், மேலும் அவர் தனது புத்தகத்தில் மனித குமாரனாகிய மேசியாவைப் பற்றிய வெளிப்பாடுகளை எழுதியபோதும், அந்த மேசியாவைப் பற்றி தானியேல் யூதர்களிடம் பேசியபோது, அவர்கள் அதைக் கேள்விப்பட்டு தானியேலிடம் விசாரித்தபோது, மனித குமாரன் பிறக்கும்போது, அதன் அடையாளமாக வானத்தில் ஒரு நட்சத்திரம் தோன்றும் என்று அவர்களுக்கு விளக்கினார். இந்த தகவல்களை பிறகு வரும் காலத்தில் பாரசீக நாட்டில் தங்கள் தலைமுறைகளுக்குப் பரவியது, பல வருடங்களுக்கு பிறகு வானத்தில் ஒரு நட்சத்திரம் தோன்றியத்தை கண்டு அவர்களின் மூதாதையர்கள் சொன்னதை அவர்கள் உணர்ந்து, இயேசு கிறிஸ்துவை பணிந்துக்கொள்ள எருசலேமுக்கு அவர்கள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
"ஜான் கில்" என்ற வேத அறிஞர் தனது வேத விளக்க உறையில் இவ்வாறு கூறியுள்ளார். இந்த சாஸ்திரிகள் பெர்சியாவிலிருந்து வந்தவர்கள் என்று அவரும் சொல்லுகிறார். இதை நம்புவதில் நமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதேபோல், வேத அறிஞரான "மத்தேயு ஹென்றி" என்பவரும் கிழக்கு தேசத்து சாஸ்திரிகளுக்கு இந்த நட்சத்திரத்தைப் பற்றி எப்படித் தெரியும் என்பதை விளக்குகையில் பிலேயாமின் தீர்க்கதரிசனத்தையும் குறிப்பிட்டார். எண்ணாகமம் 24:17 “அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்;” இந்த பிலேயாம் கிழக்கு தேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், பிலேயாமின் தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில், அந்த நட்சத்திரம் இஸ்ரேல் நாட்டில் தோன்றியபோது, அந்த நட்சத்திரத்தின் காரணமாக அத்தேசத்தின் சாஸ்திரிகள் இயேசு கிறிஸ்துவைக் காண வந்ததாக "மத்தேயு ஹென்றி" அவருடைய விளக்க உரையில் தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொள்ளாத சிலர், பிலேயாம் சொன்ன தீர்க்கதரிசனத்தில் உள்ள நட்சத்திரம் அது இஸ்ரவேல் தேசத்தில் தான் உதிக்கவேண்டும், ஆனால் அது ஏன் கிழக்கில் உதித்தது என்று கேள்வியை எழுப்புக்கிறார்கள். ஆனால், அந்த சூழ்நிலையை நாம் சரியாகப் வாசித்தால், நமக்கு தெரியவருவது அந்த நட்சத்திரம் உதயமானது இஸ்ரேல் தேசத்தில் தான். ஏனென்றால், அந்த நட்சத்திரம் சாஸ்திரிகளிருந்த கிழக்கு தேசத்திலே உதயமாகியிருந்தால், அவர்கள் அதைப் பார்த்து பின்பற்றினார்கள் என்று எழுதப்படவில்லை, கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைப் பார்த்து வந்தோம் என்று அவர்கள் ஏரோதிடம் சொன்னாதாக வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. அந்த ஞானிகள் நட்சத்திரத்தை பார்த்த திசையை பற்றி மட்டுமே அங்கு சொல்லப்பட்டுள்ளது. ஒருவேளை அந்த நட்சத்திரம் கிழக்கில் உதித்து அவர்களை வழி நடத்தினால் அவர்கள் ஏன் ஏரோதிடத்திற்குச் செல்ல வேண்டும்? எனவே அவர்கள் எருசலேம் நகரத்திற்கு வந்து ஏரோதிடத்தில் போனபோது, நட்சத்திரம் அவர்களுக்கு முன்பாகச் சென்று அவர்களுக்கு வழியைக் காட்டியது. இதன்படி, கிழக்கின் சாஸ்திரிகள் நட்சத்திரத்தைப் பார்ப்பதற்கு பிலேயாம் சொன்ன தீர்க்கதரிசனமும் மற்றொரு காரணமாக இருக்கலாம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
3. 1 கொரிந்தியர் 9:22 “பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.” சிலரை இரட்சிப்பதற்காக எல்லா மக்களுக்கும் எல்லாவிதமாக ஆனேன். என்ற இந்த வசனத்தை மேற்கோள் காட்டிய அப். பவுலைப்போல, நாங்களும் இந்துக்களை இரட்சிப்பதற்கு, அவர்களின் வேதத்திலிருந்தே இயேசு கிறிஸ்துவை அவர்களுக்கு காண்பிக்கிறோம் என்று நியாயப்படுத்துகிறார்கள். மேலும் இவர்கள் அப்போஸ்தலனாகிய பவுலின் இந்த வார்த்தைகளை மட்டுமல்ல, அத்தேனே பட்டணத்தில் அவர் குறிப்பிட்டுள்ள புலவர்கள், பலிபீடம் போன்ற இந்த சந்தர்ப்பத்தை திரித்து எங்களுடைய பாதை பவுலின் பாதை என்று அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் ஏன் அங்கே அப்படி போதித்தார், பவுல் சொன்ன புலவர்கள் யார் என்பதை விளக்கி நான் மற்றொரு கட்டுரை எழுதினேன். இந்தக் கட்டுரையின் இறுதியில் அந்த கட்டுரைக்கான இணைப்பை தருகிறேன், மேலும் அதை வாசியுங்கள். மேலும், அவர் கொரிந்தியரின் சபைக்கு எழுதிய நிருபத்தில் அப். பவுலின் வார்த்தைகளின் அர்த்தத்தைப் பார்க்கும் முன், அவர் எழுதிய மற்றொரு வார்த்தையைப் பார்ப்போம்.
தீத்து 2:8 “எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.” “எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.” என்று கொரிந்தியர்களிடம் சொன்ன அப். பவுல், இந்த வசனத்தில் என்ன வகையான போதனையை பிரசங்கிக்க வேண்டும், என்பதையும் அவரே விளக்குகிறார். அப். பவுல் எந்த இடத்திலும் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி யாரையும் தேவனிடமாக கொண்டுவரவில்லை, அவர் என்ன நோக்கத்ததோடு கொரிந்தியர்களிடன் பேசினாரோ அந்த முழு சூழலையும் படித்தால், அது நமக்கே புரியும்.
1 கொரிந்தியர் 9:19-22 “நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். இந்த வசனங்களைப் பார்த்தால், அப். பவுல் இந்தப் கள்ள போதகர்கள் சொல்வது போல் புறவினத்தார்களிடம் சென்று, அவர்களுடன் கலந்து உங்களுடைய வேதத்தையும் எங்கள் தேவனே எழுதவைத்தார் என்றும், உங்கள் தேவனும், எங்கள் தேவனும் ஒருவரே என்று அப். பவுல் சொல்லவில்லை, மாறாக யூதர்களுக்கும், புறவினத்தாருக்கும் பகையாக இருந்த நியாயப்பிரமாணத்தை குறித்தே அப்படி பேசுகிறார். யூதர்களை ஆதாயப்படுத்துவதற்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனாகவும், ஏனெனில் நியாயப்பிரமாணத்தின் சாராம்சம் கிறிஸ்து தான். புறவினத்தவர்களை ஆதாயப்படுத்துவதற்கு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் படி நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படியாதவனாகவும், மற்றும் பலவீனமானவர்களுக்கு கிறிஸ்துவை பிரசிங்கித்து அவர்களின் இரட்சிப்புக்காக பிரயாசபடுகிறேன். என்பதே அந்த வசனத்தின் பொருள். ஆனால், அவர்கள் அப். பவுலின் வார்த்தைகளைத் திரித்து, கள்ள போதனைகளை போதிக்கின்றனர். அவர் அவ்வாறு செய்யவில்லை, அப். பவுல் மட்டும் அல்ல மற்ற தேவ மனிதர்கள் யாரும் அவ்விதமான போதனையை செய்யவில்லை, பிறமத வேதங்களும் நம்முடைய தேவனால் எழுதப்பட்டவை என்று கள்ள போதகர்கள் வேதத்தை திரிக்கும் சந்தர்ப்பங்களை நாம் இதுவரை பார்த்தோம். ஆனால் இப்போது பார்க்கும் சந்தர்ப்பம் முன்பு பார்த்ததை விட மோசமாக இருக்கும். அது என்னவென்று பார்ப்போம்.
4. யோவான் 5:39 “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.” இந்த இடத்தில், இயேசுகிறிஸ்து யூதர்களிடம் இவ்விதமாய் சொல்கிறார், வேத வார்த்தைகளை நீங்கள் ஆராயுங்கள், அவைகள் என்னைக் குறித்து சாட்சியளிக்கின்றன. என்ற வார்த்தைகளை, அவர்கள் இயேசுகிறிஸ்து அந்த வார்த்தைகளை இந்து மத வேதங்களையும் சேர்த்து கூறுகிறார், எனவே தான் நாங்கள் இந்து வேதங்களில் அவரைக்குறித்து சாட்சியமளிக்கும் ஒற்றுமையை வெளிக்காட்டி அதன் மூலம் சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறோம் என்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய கள்ள போதனையை நியாயப்படுத்த அந்த சூழலை தவறாக சித்தரிக்கிறார்கள், என்பதற்கு மிகத் தெளிவான சான்றுகளை அந்த வசனப்பகுதியில் நாம் பார்க்கமுடியும்.
1. அந்த வார்த்தைகளை இயேசுகிறிஸ்து யூதர்களிடம் சொல்லுகிறார். சொல்லபோனால் யூதர்களின் வேதங்கள் மோசேயின் நியாயப்பிரமாணம், மற்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் மட்டுமா? அல்லது இந்து வேதங்களா? என்ற இந்த கேள்வியை ஞாயிறு பள்ளிக் குழந்தைகளைக் கேட்டால் கூட முதலாவதாக சொன்னது தான் என்று பதிலை சொல்லுவார்கள். இயேசுகிறிஸ்து தன்னைப் பற்றி சாட்சியளிப்பதாக எந்த வசனத்தைக் குறித்து அவர் சொல்லுகிறாரோ? அந்த வேத வசனத்தை அவரே வேறு இடத்தில் தெளிவுபடுத்துகிறார். லூக்கா 24:44-47 “அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி: எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.” இந்தப் வசனத்தில் இயேசு தம்முடைய சீஷர்களுக்கு யூதர்களிடம் குறிப்பிட்ட வேதவசனங்களை தெளிவாக விளக்கினார். அந்த விளக்கத்தில் அவர் எந்த இடத்திலும் இந்த கள்ளப் போதர்கள் போதிக்கும் இந்து மத வேதங்களைப் பற்றி காணப்படவில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், மற்ற அப்போஸ்தலர்களும் வேத வாக்கியங்கள் என்று எங்கு குறிப்பிட்டாலும், தேவன் அவர்களுக்கு அருளிய வேத வசனங்களை தான் மேற்க்கோள் காட்டுகிறார்களே. தவிர பிறமத வேதங்களை அல்ல. மத்தேயு 21:42 “இயேசு அவர்களை நோக்கி: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?” மத்தேயு 26:56 “ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.” அப்போஸ்தலர் 15:21 “மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்.”
2. அந்த இடத்தில், இயேசுகிறிஸ்து யூதர்களை நோக்கி, உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று உணர்ந்து நீங்கள் வேதவாக்கியங்களைத் தேடுகிறீர்கள் என்றார். மேலும், யூதர்கள் அடிக்கடி வாசிப்பதும், ஆராய்வதும் என்ன? மோசேயின் நியாயபிரமாணமும், தீர்க்கதரிசன புத்தகங்களா? அல்லது இந்து மத வேதாங்களா? இந்த வசனப்பகுதியை பாருங்கள். அப்போஸ்தலர் 13:27 “எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்.” இதன்படி, யூதர்கள் ஆராய்வதும், வாசிப்பதும் தீர்க்கதரிசிகள் மூலம் தேவன் கொடுத்த வார்த்தைகளை மட்டுமே! அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் அவற்றைப் படித்தார்கள், ஆனாலும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி வசனத்தில் எழுதப்பட்டிருப்பதை புரிந்துக்கொள்ள அவர்களால் முடியவில்லை, எனவே தான் இயேசு கிறிஸ்துவை இகழ்ந்தனர்.
அப்போஸ்தலர்களும் இயேசுகிறிஸ்து தங்களுக்கு அறிவித்த வார்த்தைகளின்படி, பழைய ஏற்பாட்டில் அவரைப் பற்றி எழுதப்பட்ட அனைத்து இடங்களையும் விவரித்து சுவிசேஷத்தை அறிவித்தனர். அவர்களின் சுவிசேஷங்களிலும் மற்றும் நிருபங்களிலும் அந்த வேத வசனங்கள் என்னவென்று என்பதை நாம் காண்கிறோம். அவைகளில் எங்கும் பிறமத வேதத்திலிருந்து இயேசு கிறிஸ்துவை குறிப்பிட்டதாக நமக்கு காணப்படவில்லை. அவர்கள் மேற்கோள் காட்டிய அனைத்தும் மோசேயின் நியாயப்பிரமாணமும், தீர்க்கதரிசிகளின் ஆகமமும் மற்றும் சங்கீத புத்தகங்களில் உள்ளதே.
அப்போஸ்தலர் 28:23 “அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கிச் சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சி கொடுத்து (விவராமாய்) விஸ்தரித்துப் பேசினான்.” ஒரு வாதத்திற்காக, இதுவரை நாம் பார்த்து ஆராய்ந்த விளக்கங்களையெல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு, இந்தப் கள்ள போதகர்கள் சொல்லுவதுப்போல் இயேசுகிறிஸ்து தன்னைப் பற்றி எழுதப்பட்டது என்று சொன்னவைகளில் இந்து வேதங்களும் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில், மற்றொரு சிக்கல் உள்ளது. அது என்னவென்றால், இந்து வேதங்தகள் எழுதப்பட்ட சமஸ்கிருத மொழியையும் ஆராய்ந்த சில ஆய்வாளரின் கருத்துப்படி, அவற்றில் ஒன்று கூட கிறிஸ்துவுக்கு முன் எழுதப்படவில்லை. அந்த நூல்கள் அனைத்தும் கிறிஸ்துவுக்கு பிறகுதான், அதுவும் அவர் வாழ்ந்த நூறு ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டது. இந்த வாதம் உண்மை என்பதற்கு அந்த நூல்களில் எழுதப்பட்ட சில நிகழ்வுகள் சான்றாக உள்ளது. தற்போது அது நம்முடைய தலைப்பு அல்ல, என்பதால் நான் அவற்றை இங்கே குறிப்பிடவில்லை. இந்து சமயத் தலைவர்கள் தங்களின் வேதங்கள் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டவை என்று சொன்னால் மட்டும் போதாது! அதற்கு தகுந்த ஆதாரத்தை காட்ட வேண்டும். எனவே, கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் இந்து வேதங்கள் எழுதப்படவில்லை என்று உறுதியாக சொல்லமுடியும். வரலாறு இப்படி இருக்கும் பட்சத்தில், புறமத வேதங்களும் என்னைப்பற்றி சாட்சியளிக்கின்றன என்று இயேசுகிறிஸ்து எப்படிச் சொல்லமுடியும்? ஒருவேளை இந்த கள்ள போதனைகளை செய்கிறவர்கள் இந்து வேதங்கள் கிறிஸ்துவுக்கு முன்னரே இருந்தன, என்பதற்கு அவர்களாவது தகுந்த ஆதாரத்தை காட்ட முடியுமா? இதுவரை நாம் பார்த்தவற்றில் இருந்து, அவர்களின் முழு வாதமும் வேத வசனத்தின் வாய்மொழியாக உடைந்து போனதால், உணர்வுபூர்வமாக எப்படி அவர்களின் வாதத்தை தொடர்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம். "தேவனிடத்தில் பட்சபாதம் இல்லை என வேதாகமம் சொல்லுவதை, அவர்கள் எப்படி சொல்லுகிறார் என்றால் பாரபட்சம் இல்லாத தேவன் யூதர்களுக்காக மட்டுமே வேதத்தை எழுதினாரா? அவர்களை மட்டுமே ஆசீர்வதித்தாரா? புறஜாதியார்களுக்கு அவ்விதமான வேதத்தை எழுதவில்லையா? அப்படியென்றால் அவர் பட்சபாதம் உள்ளவாராக மாறுவார், என்று அவர்கள் நம்மைக் கேள்வி கேட்பார்கள்.
அவர்கள் போதிப்பதே உண்மையானதுப் போல் போதிப்பார்கள், உண்மை என்னவென்றால் தேவன் யூதர்களின் மூலமாக வேதத்தை எழுதி, அவர்களை மட்டுமே ஆசீர்வதித்திருந்தாலும், புறவினத்தார்கள் வேதத்தை வாசிக்கவும், அதன்படி அவர்கள் நடக்கவும் கூடாது என்று எந்தவித நிபந்தனையையும் தேவன் சொல்லவில்லை. மோசேயின் நியாயப்பிரமானத்தை படித்தால் அதற்குப் பல சான்றுகள் உள்ளன. உதாரணத்திற்கு, எண்ணாகமம் 9:14 “ஒரு பரதேசி உங்களிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமானால், அவன் அதைப் பஸ்காவின் கட்டளைப்படியும் அதின் முறைமையின்படியும் ஆசரிக்கக்கடவன்; பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே கட்டளை இருக்கவேண்டும் என்று சொல் என்றார்.” அவர்களுடைய வாதத்தின்படி, தேவன் தம்முடைய வார்த்தைகளை யூதர்களுக்கு அருளியதைப் போல புறவினத்தாரைக் கொண்டு எழுதாத பட்சத்தில், தேவன் பட்சபாதம் உள்ளவராக இருப்பார், எனவே தான் அவர் தனது வார்த்தையை புறவினத்தாரால் எழுதப்பட்டதில் யூதர்களால் எழுதப்பட்ட வேதத்தில் யெகோவா என்ற பெயரைப்போல் அந்த வேதத்தில் இல்லை. இதன்படி கூட தேவன் பட்சபாதம் உள்ளவர் தானே!
நமக்கிருக்கும் உணர்வுபூர்வமான வாதங்களை தேவன் மீது வைத்து அவர் இப்படி செய்தால் அவரிடம் பாரபட்சமில்லை, என்று வாதிடுவது நமது அறிவினத்தைக் காட்டுகிறது. மனிதர்களாகிய நாம் நிர்ணயித்துள்ள அளவுகோலின் படி அவர் செய்யமாட்டார். தேவன் நிர்ணயித்துள்ளதின் படியே நாம் நடந்துக் கொள்ளவேண்டும். வேத வசனத்தில் உள்ளவற்றையே நாம் விசுவாசிக்க வேண்டும். இயேசுகிறிஸ்து ஒரு தெய்வீக மனிதனாக இந்த உலகத்திற்கு வரும்முன், தேவன் பூமியிலுள்ள மனிதர்களுக்கு இரண்டு வழிகளில் தன்னை வெளிப்படுத்தி காண்பித்தார். அவை "பொதுவான வெளிப்பாடு" மற்றும் "சிறப்பு வெளிப்பாடு" அதாவது (வேதத்தின் வெளிப்பாடு) என்று அழைக்கப்படுகின்றன. பொதுவான வெளிப்பாடு என்பது, தேவன் படைத்த இந்த படைப்பின் மூலமாகவும், மனிதர்களின் மனசாட்சி மூலமாகவும் தன்னை அனைவருக்கும் வெளிப்படுத்தினார்.
ரோமர் 1:19,20 “தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.” அப்போஸ்தலர் 14:17 “அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப் பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.” ரோமர் 2:14,15 “அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.” இந்த வசனங்களின்படி, தாம் உண்டாக்கின படைப்பின் மூலமாகவும், மனசாட்சியின் மூலமாகவும், தேவன் தன்னை படைப்பின் மூலம் அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்தினார், இதுவே “பொதுவான வெளிப்பாடு” என்று அழைக்கப்படுகிறது. இவற்றின்படி எந்த ஒரு மனிதனும் தேவனை ஓரளவிற்கு உணர்ந்து தன் மனசாட்சியின் மூலம் தேவனின் விருப்பப்படி வாழ முயலலாம். மேலும் “சிறப்பு வெளிப்பாடு” அதாவது (வேதத்தின் வெளிப்பாடு) என்பது தேவன் சிலரை தனக்கென ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுக்குத் தோன்றி, தம்முடைய வார்த்தையை எழுத வைத்தார். அது இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே உரித்தானது. சங்கீதம் புத்தகம் 147:19,20 “யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா.” இந்த சிறப்பான வெளிப்பாட்டின் மூலம் தேவன் தன்னை யூதர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தியிருந்தாலும், படைப்பின் மூலமாகவும், மனசாட்சியின் மூலமாகவும் தேவனை அறிந்த சாதாரண மக்கள் யூத வேதங்களைப் படிக்கலாம், அவருடைய பண்டிகைகளை அனுசரிக்க முடியும். இவ்விதமாக தேவன் பட்சபாதம் உள்ளவர் அல்ல எனபது நமக்கு தெளிவாகிறது.
இறுதியாக, தேவனுடைய வார்த்தையை குழப்பி மோசம்போக்கும் இந்த கள்ள போதகர்களுக்கு எனது எச்சரிக்கை: லேவியராகமம் 10:1,2 “பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.” எண்ணாகமம் 3:4 “நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்தரத்தில் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய சந்நிதியில் மரித்துப்போனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்கள் தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.” இங்கே, ஆரோனின் குமாரர்களான நாதாபும், அபியூவும் தேவன் கட்டளையிடாத வேறோரு நெருப்பை ஆலயத்தில் கொண்டு வந்ததினால் அவர்கள் அந்த நெருப்பில் எரிக்கப்பட்டனர், அதேபோல இவர்கள் திருச்சபைகளுக்குள் வேதாகமத்திற்கு புறம்பான போதனைகளை கொண்டு வருகிறார்கள். கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அந்த உபதேசத்தையே தொடர்ந்தால், விளைவு மிகவும் மோசமாக இருக்கும்.