இவ்வுலகில் நல்வாழ்வை பெறுவதற்கும் விண்ணுலகில் நித்திய பெருவாழ்வை பெறுவதற்கும் அநேக போதனைகளை செய்த இயேசுநாதர், மனிதர்கள் எப்பொழுதும் தாழ்மையாக இருக்க வேண்டும் என்பதையும் கற்பித்தார். ஒருமுறை தன்னுடைய சீடர்களுடன் உணவருந்தி கொண்டிருந்த இயேசு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து தன்னுடைய சீடர்களின் கால்களை ஒருவர் பின் ஒருவராக கழுவி, ஒரு துண்டினால் துடைக்க தொடங்கினார். இதை அவருடைய சீடர்கள் சற்று அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் பார்த்தனர்.
கடவுளாகவும், தங்களுக்கு போதகராகவும், அநேக மக்களுக்கு தலைவனாகவும் இருக்கிற இயேசுநாதர் தங்கள் கால்களை கழுவுவது எப்படி என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். இயேசு ஒவ்வொரு சீடரின் கால்களையும் கழுவிக் கொண்டு வந்த போது, சீமான் பேதுரு என்ற இயேசுவின் சீடன் ஆண்டவரே, நீரா என் கால்களை கழுவப்போகிறீர்? நீர் ஒருபோதும் என்னுடைய கால்களை கழுவக்கூடாது என்று வேண்டிக்கொண்டான். இயேசுவோ, “நான் செய்கிறதை இப்பொழுது நீ அறிந்து கொள்ள மாட்டாய், பின்னர் அறிந்து கொள்வாய்; நான் உன் கால்களை கழுவ விட்டால் என்னிடத்தில் உனக்கு எந்த பங்கும் இல்லை!” என்று பேதுருவிடம் சொன்னார்.
அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் உணவருந்த அமர்ந்தார். “நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் “போதகர்” என்றும் “ஆண்டவர்” என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன். பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல: தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரை விடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இவற்றை நீங்கள் அறிந்து அதன் படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று தனது சீடர்களிடம் சொன்னார். மேலும், மற்றவர்களை தங்களை விட மேன்மை பெற்றவர்களாக எண்ணி நடத்த வேண்டும் என்பதையும் இயேசு கற்றுக் கொடுத்தார்.
இவற்றையெல்லாம் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த இயேசுவின் சீடர்கள் தாழ்மை என்றால் என்ன என்பதை தங்களது தலைவனிடமிருந்து நேரடியாக கற்றுக் கொண்டார்கள்! இப்படி அவர்கள் கற்றுக் கொண்டதை இயேசுவின் சீடர்கள் பின்னாளில் அதை தங்கள் வாழ்நாள் முழுவதும் கடை பிடித்தார்கள்! தங்களை விட கீழ் நிலையில் இருந்தவர்களையும் தங்களுக்கு சரிசமமாக நடத்தி அவர்களுடன் நட்பு பாராட்டினார்கள்!
சண்டைக்கும், வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைக் குறித்து அல்ல, பிறரைக் குறித்தே அதிக அக்கறை கொள்ள வேண்டும். இயேசுநாதர் கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை உயர்வாக எண்ணாமல், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றிய அவர், மனிதரின் பாவங்களை மன்னிக்க, சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார் என்று திருமறை போதிக்கிறது!
இந்த கட்டுரை இந்து தமிழ் திசை, ஆனந்த ஜோதி இணைப்பிதழுக்காக எழுதப்பட்டு, ஜூலை 27, 2023 அன்று வெளிவந்துள்ளது.