படிப்புகள்: 15
Print

பாடல் பிறந்த கதை

 பாடல் : இயேசு நேசிக்கிறார்

 
பல்லவி
இயேசு நேசிக்கிறார், - இயேசு நேசிக்கிறார்;
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மா தவமோ!
 
சரணங்கள்
1. நீசனாமெனைத் தான் இயேசு நேசிக்கிறார்,
மாசில்லாத பரன் சுதன்றன்  முழு
மனதால் நேசிக்கிறார்.
            - இயேசு
2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிலல் ஆச்சரியம்.
             - இயேசு
3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்,
நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம்.
             - இயேசு
4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார் ;
அதை நினைந்தவர் அன்பின் கரத்துளே
ஆவலாய்ப் பறப்பேன்.
             - இயேசு
5. ராசன் இயேசுவின்மேல் இன்ப கீதஞ்சொலில்,
ஈசன் இயேசெனைத் தானேசித்தாரென்ற
இணையில் கீதஞ் சொல்வேன்.
             - இயேசு

பத்தொன்பதாம் நூற்றாண்டில், யாழ்ப்பாணத்தில்,  கொலைக் குற்றத்திற்காகத் தூக்குத்தண்டனை பெற்ற சுப்பிரமணியம் கோவிந்தசாமி என்ற கைதி ஒருவர் சிறைச்சாலையில் இருந்தார்.  சிறைச்சாலைக் கைதிகள் மத்தியில் ஊழியம் செய்து வந்த நற்செய்திப் பணியாளர் ஒருவர், அவரைச் சந்தித்து, அன்பாகப் பேசி, ''இயேசு உங்களை நேசிக்கிறார்" என்று கூறினார். தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து நேசிப்பவர் எவரும் உண்டோ என வியந்த அவர், நம்ப மறுத்து, ''உண்மை தானா?'' என வினவினார்.  நற்செய்திப் பணியாளர் தமது கையிலிருந்த வேதபுத்தகத்தைக் காட்டி, ''இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் உண்மை அதுவே''  எனக் கூறினார்.

அதைத் தொடர்ந்து, பல வாரங்கள் இருவரும் வேதபுத்தகத்தைச் சேர்ந்து வாசித்து, இயேசுவின் தியாக அன்பைக் குறித்துச்  சிந்தித்தனர்.  தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நாளுக்கு முன்னர், அக்கைதி ஆண்டவரை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, ஞானஸ்நானம் பெற்று, பிரெக்கன்ரிஜ் என்ற புதுப் பெயரும் பெற்றார்.

அவரைத் தூக்கிலிட்டபின், அவருடைய உடைமைகளை அவரது சிறை அறையிலிருந்து எடுத்துச் செல்ல, அவரது உறவினர் வந்தனர்.  அப்போது, அவர் தலையணைக்குக் கீழே, ஒரு சிறு காகிதத்தில் இப்பாடல் எழுதப்பட்டிருந்தது.

இப்பாடலின் ஒவ்வொரு அடியையும், தன் வாழ்வின் அனுபவ சாட்சியாக, பிரெக்கன்ரிஜ் எழுதியிருக்கிறார்  எனக் கூறினால், அது மிகையாகாது.  அவர் தன் வாழ்வின் இறுதி நாட்களை, நல் நம்பிக்கையுடையவராய், தன் அன்பர் இயேசுவோடு என்றென்றும் வாழும் பரலோக வாழ்வை எதிர்நோக்கியவராய், தைரியத்துடன், சாட்சியாக அச்சிறைச்சாலையில் நடத்தியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.