If thou shalt hear say in one of thy cities, which the LORD thy God hath given thee to dwell there, saying,
யோசுவா 22:11-34
11
ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான் தேசத்துக்கு எதிரே இஸ்ரவேல் புத்திரருக்கு அடுத்த யோர்தானின் எல்லைகளில் ஒரு பீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேள்விப்பட்டார்கள்.
12
அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் சபையாரெல்லாரும் அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணும்படி சீலோவிலே கூடி,
13
கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் புத்திரரிடத்துக்கும் காத் புத்திரரிடத்துக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருடைய குமாரனாகிய பினெகாசையும்,
14
அவனோடேகூட இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு பிதாவின் குடும்பத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகப் பத்துப் பிரபுக்களையும் அனுப்பினார்கள்; இஸ்ரவேலின் சேனைகளிலே ஆயிரவர்களுக்குள்ளே ஒவ்வொருவனும் தன் தன் பிதாவின் குடும்பத்துக்குத் தலைவனாயிருந்தான்.
15
அவர்கள் கீலேயாத் தேசத்திலே ரூபன் புத்திரர் காத் புத்திரர் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாராகிய இவர்களிடத்திற்கு வந்து:
16
நீங்கள் இந்நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரண்டு, இந்நாளிலே கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணும்படியாக உங்களுக்கு ஒரு பீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாகப் பண்ணின இந்தத் துரோகம் என்ன?
17
பேயோரின் அக்கிரமம் நமக்குப் போதாதா? கர்த்தருடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்நாள்வரைக்கும் நாம் அதினின்று நீங்கிச் சுத்தமாகவில்லையே.
18
நீங்கள் இந்நாளில் கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரளுவீர்களோ? இன்று கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணுவீர்களோ? அவர் நாளைக்கு இஸ்ரவேல் சபையனைத்தின்மேலும் கடுங்கோபங்கொள்வாரே.
19
உங்கள் காணியாட்சியான தேசம் தீட்டாயிருந்ததானால், கர்த்தருடைய வாசஸ்தலம் தங்குகிற கர்த்தருடைய காணியாட்சியான அக்கரையிலுள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள்.
20
சேராவின் குமாரனாகிய ஆகான் சாபத்தீடான பொருளைக்குறித்துத் துரோகம்பண்ணினதினாலே, இஸ்ரவேல் சபையின்மேலெல்லாம் கடுங்கோபம் வரவில்லையா? அவன் ஒருவன்மாத்திரம் தன் அக்கிரமத்தினாலே மடிந்துபோகவில்லையென்று கர்த்தருடைய சபையார் எல்லாரும் சொல்லச்சொன்னார்கள் என்றார்கள்.
21
அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், இஸ்ரவேலின் ஆயிரவரின் தலைவருக்குப் பிரதியுத்தரமாக:
22
தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலரும் அறிந்துகொள்ளுவார்கள்; அது இரண்டகத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர்.
23
ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்தப் பீடத்தைக் கட்டினதே அல்லாமல், கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்கதகனபலியையாகிலும் போஜனபலியையாகிலும் சமாதானபலிகளையாகிலும் செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், கர்த்தர் அதை விசாரிப்பாராக.
24
நாளைக்கு உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் என்ன?
25
ரூபன் புத்திரர் காத் புத்திரர் ஆகிய உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே கர்த்தர் யோர்தானை எல்லையாக வைத்தார்; கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளைக் கர்த்தருக்குப் பயப்படாதிருக்கச் செய்வார்கள் என்கிற ஐயத்தினாலே நாங்கள் சொல்லிக்கொண்டது என்னவென்றால்:
26
சர்வாங்கதகனத்திற்கு அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்கதகனங்களாலும் பலிகளாலும் சமாதானபலிகளாலும் நாங்கள் கர்த்தரின் சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியாருக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும்,
27
கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று உங்கள் பிள்ளைகள் நாளைக்கு எங்கள் பிள்ளைகளோடே சொல்லாதபடிக்குமே, ஒரு பீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம்.
28
நாளைக்கு எங்களோடாவது, எங்கள் சந்ததியாரோடாவது அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சிக்காக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின கர்த்தருடைய பலிபீடத்தின் சாயலான பீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம்.
29
நம்முடைய தேவனாகிய கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத்தவிர, நாங்கள் சர்வாங்க தகனத்திற்கும், போஜனபலிக்கும், மற்றப் பலிக்கும் வேறொரு பீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணுவதும், இன்று கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதும், எங்களுக்குத் தூரமாயிருப்பதாக என்றார்கள்.
30
ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசே புத்திரரும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடே இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரவரின் தலைவரும் கேட்டபோது, அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது.
31
அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் குமாரனாகிய பினெகாஸ் ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் மனாசே புத்திரரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய் அப்படிக்கொத்த துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம்முடைய நடுவே இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரைக் கர்த்தரின் கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.
32
ஆசாரியனான எலெயாசாரின் குமாரனாகிய பினெகாசும், பிரபுக்களும், கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் விட்டு, கானான் தேசத்திற்கு இஸ்ரவேல் புத்திரரிடத்தில், திரும்பிவந்து, அவர்களுக்கு மறுசெய்தி சொன்னார்கள்.
33
அந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது; ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள்மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சை விட்டு, இஸ்ரவேல் புத்திரர் தேவனை ஸ்தோத்திரித்தார்கள்.
34
கர்த்தரே தேவன் என்பதற்கு அந்தப் பீடம் நமக்குள்ளே சாட்சியாயிருக்கும் என்று சொல்லி, ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் அதற்கு ஏத் என்று பேரிட்டார்கள்.
நியாயாதிபதிகள் 20:1
அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்.
நியாயாதிபதிகள் 20:2-17
2
சகல ஜனங்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் சகல கோத்திரத்தாரும் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடி நின்றார்கள்; அவர்கள் பட்டயம் உருவுகிற நாலு லட்சம் காலாட்கள்.
3
இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவுக்கு வந்த செய்தியைப் பென்யமீன் புத்திரர் கேள்விப்பட்டார்கள்; அந்த அக்கிரமம் நடந்தது எப்படி, சொல்லுங்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேட்டார்கள்.
4
அப்பொழுது கொலை செய்யப்பட்ட ஸ்திரீயின் புருஷனாகிய லேவியன் மாறுத்தரமாக: நானும் என் மறுமனையாட்டியும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே இராத்தங்க வந்தோம்.
5
அப்பொழுது கிபியாபட்டணத்தார் எனக்கு விரோதமாய் எழும்பி, என்னைக் கொலை செய்ய நினைத்து, நான் இருந்த வீட்டை இராத்திரியிலே வளைந்து கொண்டு, என் மறுமனையாட்டியை அவமானப்படுத்தினார்கள்; அதினாலே அவள் செத்துப்போனாள்.
6
ஆகையால் இஸ்ரவேலிலே அவர்கள் இப்படிப்பட்ட முறைகேட்டையும் மதிகேட்டையும் செய்தபடியினால், நான் என் மறுமனையாட்டியைப் பிடித்துத் துண்டித்து, இஸ்ரவேலின் சுதந்தரமான சகல நாடுகளுக்கும் அனுப்பினேன்.
7
நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரராமே, இங்கே ஆலோசித்துத் தீர்மானம்பண்ணுங்கள் என்றான்.
8
அப்பொழுது எல்லா ஜனங்களும் ஏகமாய் எழும்பி: நம்மில் ஒருவரும் தன் கூடாரத்திற்குப் போகவும்படாது, ஒருவனும் தன் வீட்டிற்குத் திரும்பவும்படாது.
9
இப்பொழுது கிபியாவுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: சீட்டுப்போட்டு அதற்கு விரோதமாகப் போவோம்.
10
பென்யமீன் கோத்திரமான கிபியா பட்டணத்தார் இஸ்ரவேலிலே செய்த எல்லா மதிகேட்டுக்கும் தக்கதாக ஜனங்கள் வந்து செய்யும்படிக்கு, நாம் தானிய தவசங்களைச் சம்பாதிக்கிறதற்கு, இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நூறு பேரில் பத்துப்பேரையும், ஆயிரம் பேரில் நூறுபேரையும், பதினாயிரம் பேரில் ஆயிரம்பேரையும் தெரிந்தெடுப்போம் என்றார்கள்.
11
இஸ்ரவேலரெல்லாரும் ஒன்றுபோல ஏகோபித்துப் பட்டணத்திற்கு முன்பாகக் கூட்டங்கூடி,
12
அங்கே இருந்த இஸ்ரவேலின் கோத்திரத்தார் பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி: உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன?
13
இப்பொழுது கிபியாவில் இருக்கிற பேலியாளின் மக்களாகிய அந்த மனுஷரை நாங்கள் கொன்று, பொல்லாப்பை இஸ்ரவேலை விட்டு விலக்கும்படிக்கு, அவர்களை ஒப்புக்கொடுங்கள் என்று சொல்லச் சொன்னார்கள்; பென்யமீன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரராகிய தங்கள் சகோதரரின் சொல்லைக் கேட்க மனமில்லாமல்,
14
இஸ்ரவேல் புத்திரரோடு யுத்தம்பண்ணப் புறப்படும்படிக்கு, பட்டணங்களிலிருந்து கிபியாவுக்கு வந்து கூடினார்கள்.
15
கிபியாவின் குடிகளிலே தெரிந்து கொள்ளப்பட்ட எழுநூறு பேரையல்லாமல் அந்நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயம் உருவுகிற மனுஷரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர் என்று தொகையிடப்பட்டது.
16
அந்த ஜனங்களெல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட இடது கை வாக்கான எழுநூறுபேர் இருந்தார்கள்; அவர்கள் அனைவரும் ஒரு மயிரிழையும் தப்பாதபடிக்குக் கவண்கல் எறிவார்கள்.
17
பென்யமீன் கோத்திரத்தையல்லாமல் இஸ்ரவேலிலே பட்டயம் உருவுகிற மனுஷர் நாலு லட்சம்பேர் என்று தொகையிடப்பட்டது; இவர்களெல்லாரும் யுத்தவீரராயிருந்தார்கள்.