After he had slain Sihon the king of the Amorites, which dwelt in Heshbon, and Og the king of Bashan, which dwelt at Astaroth in Edrei:
உபாகமம் 2:26-37
26
அப்பொழுது நான் கெதெமோத் வனாந்தரத்திலிருந்து எஸ்போனின் ராஜாவாகிய சீகோனிடத்தில், சமாதான வார்த்தைகளைச் சொல்லும்படி ஸ்தானாபதிகளை அனுப்பி:
27
நான் உம்முடைய தேசத்தைக் கடந்துபோகும்படி உத்தரவுகொடும்; வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் பெரும்பாதை வழியாய் நடப்பேன்.
28
சேயீரில் குடியிருக்கிற ஏசாவின் புத்திரரும், ஆர் பட்டணத்தில் குடியிருக்கிற மோவாபியரும் எனக்குச் செய்ததுபோல, நீரும், நான் யோர்தானைக் கடந்து, எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் சேருமட்டும்,
29
எனக்குப் புசிக்க ஆகாரத்தையும் குடிக்கத் தண்ணீரையும் கிரயத்துக்குத் தாரும்; நான் கால்நடையாய்க் கடந்து போகமாத்திரம் உத்தரவுகொடும் என்று சொல்லி அனுப்பினேன்.
30
ஆனாலும் தன் தேசத்தைக் கடந்து போகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.
31
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இதோ, சீகோனையும் அவன் தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல் அவன் தேசத்தை வசப்படுத்தி, சுதந்தரித்துக்கொள் என்றார்.
32
சீகோன் தன்னுடைய எல்லா ஜனங்களோடுங்கூட நம்மோடே யுத்தம்பண்ணப் புறப்பட்டு, யாகாசிலே வந்தான்.
33
அவனை நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும் அவன் குமாரரையும் அவனுடைய சகல ஜனங்களையும் முறிய அடித்து,
34
அக்காலத்தில் அவன் பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த ஸ்திரீ புருஷரையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் சங்காரம்பண்ணினோம்.
35
மிருகஜீவன்களையும் நாம் பிடித்த பட்டணங்களில் கொள்ளையடித்த பொருள்களையுமாத்திரம் நமக்கென்று வைத்துக்கொண்டோம்.
36
அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும் ஆற்றண்டையில் இருக்கிற பட்டணமும் தொடங்கி, கீலேயாத்வரைக்கும் நமக்கு எதிர்த்து நிற்கத்தக்க அரணிப்பான பட்டணம் இருந்ததில்லை, எல்லாவற்றையும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்.
37
அம்மோன் புத்திரருடைய தேசத்தையும், யாபோக் ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்.
உபாகமம் 3:1-11
1
பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப் போகிற வழியாய்ப் போனோம்; பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல ஜனங்களோடும் நம்மோடே எதிர்த்து யுத்தம்பண்ணும்படி புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான்.
2
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய ஜனங்கள் எல்லாரையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தது போல, அவனுக்கும் செய்வாய் என்றார்.
3
அப்படியே நம்முடைய தேவனாகிய கர்த்தர் பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல ஜனங்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமற்போகுமட்டும் அவனை முறிய அடித்தோம்.
4
அக்காலத்திலே அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்தோம்; அவர்களிடத்தில் நாம் பிடித்துக்கொள்ளாத பட்டணம் இல்லை; பாசானிலிருந்த ஓகின் ராஜ்யமான அறுபது பட்டணங்களுள்ள அர்கோப் தேசம் முழுவதையும் பிடித்தோம்.
5
அந்தப் பட்டணங்களெல்லாம் உயர்ந்த மதில்களாலும் வாசல்களாலும் தாழ்ப்பாள்களாலும் அரணாக்கப்பட்டிருந்தது; அவைகள் அன்றி, மதிலில்லாத பட்டணங்களும் அநேகம்.
6
அவைகளையும் சங்காரம்பண்ணினோம்; நாம் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்ததுபோல, அந்த எல்லாப் பட்டணங்களிலுமுள்ள புருஷரையும் ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் சங்காரம்பண்ணினோம்.
7
ஆனாலும் பட்டணங்களிலுள்ள ஆஸ்தியையும் சகல மிருகஜீவன்களையும் நமக்கென்று கொள்ளையிட்டோம்.
8
இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதொடங்கி, எர்மோன் மலைவரைக்குமுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் எமோரியருடைய இரண்டு ராஜாக்களிடத்திலுமிருந்து பிடித்தோம்.
9
சீதோனியர் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியரோ அதைச் சேனீர் என்கிறார்கள்.
10
சமனான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்யத்தின் பட்டணங்கள் மட்டுமுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம்.
11
மீந்திருந்த இராட்சதரில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன் மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினாற் செய்த அவனுடைய கட்டில் மனிதருடைய கை முழத்தின்படியே, ஒன்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; அது அம்மோன் புத்திரருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா?
எண்ணாகமம் 21:21-35
21
அப்பொழுது இஸ்ரவேலர் எமோரியரின் ராஜாவாகிய சீகோனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:
22
உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தவு கொடுக்கவேண்டும்; நாங்கள் வயல்களிலும், திராட்சத்தோட்டங்களிலும் போகாமலும், துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும், உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும் ராஜபாதையில் நடந்துபோவோம் என்று சொல்லச்சொன்னார்கள்.
23
சீகோன் தன் எல்லை வழியாய்க் கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்தரவு கொடாமல், தன் ஜனங்களெல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலருக்கு விரோதமாக வனாந்தரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான்.
24
இஸ்ரவேலர் அவனைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அர்னோன் தொடங்கி அம்மோன் புத்திரரின் தேசத்தைச்சார்ந்த யாப்போக்குவரைக்குமுள்ள அவனுடைய தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன் புத்திரரின் எல்லை அரணிப்பானதாயிருந்தது.
25
இஸ்ரவேலர் அந்தப் பட்டணங்கள் யாவையும் பிடித்து, எஸ்போனிலும் அதைச் சார்ந்த எல்லாக் கிராமங்களிலும் எமோரியருடைய எல்லாப் பட்டணங்களிலும் குடியிருந்தார்கள்.
26
எஸ்போனானது எமோரியரின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாயிருந்தது; அவன் மோவாபியரின் முந்தின ராஜாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அர்னோன் வரைக்கும் இருந்த அவன் தேசத்தையெல்லாம் அவன் கையிலிருந்து பறித்துக்கொண்டான்.
27
அதினாலே கவிகட்டுகிறவர்கள்: எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் ஸ்திரமாய்க் கட்டப்படுவதாக.
28
எஸ்போனிலிருந்து அக்கினியும் சீகோனுடைய பட்டணத்திலிருந்து ஜூவாலையும் புறப்பட்டு, மோவாபுடைய ஆர் என்னும் ஊரையும், அர்னோனுடைய மேடுகளிலுள்ள ஆண்டவமார்களையும் பட்சித்தது.
29
ஐயோ, மோவாபே, கேமோஷ் தேவனின் ஜனமே, நீ நாசமானாய்; தப்பி ஓடின தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குச் சிறைகளாக ஒப்புக்கொடுத்தான்.
30
அவர்களை எய்துபோட்டோம்; எஸ்போன் பட்டணம் தீபோன் ஊர்வரைக்கும் நாசமாயிற்று; மேதோபாவுக்குச் சமீபமான நோப்பா பட்டணபரியந்தம் அவர்களைப் பாழாக்கினோம் என்று பாடினார்கள்.
31
இஸ்ரவேலர் இப்படியே எமோரியரின் தேசத்திலே குடியிருந்தார்கள்.
32
பின்பு, மோசே யாசேர் பட்டணத்துக்கு வேவுபார்க்கிறவர்களை அனுப்பினான்; அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அங்கே இருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.
33
பின்பு பாசானுக்குப் போகிற வழியாய்த் திரும்பிவிட்டார்கள்; அப்பொழுது பாசான் ராஜாவாகிய ஓக் என்பவன் தன் சமஸ்த ஜனங்களோடும் அவர்களை எதிர்த்து யுத்தம்பண்ணும்படிக்கு, எத்ரேயுக்குப் புறப்பட்டு வந்தான்.
34
கர்த்தர் மோசேயை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும், அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே வாசமாயிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தபடியே இவனுக்கும் செய்வாய் என்றார்.
35
அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாயிராதபடிக்கு அவனையும், அவன் குமாரரையும், அவனுடைய சகல ஜனங்களையும் வெட்டிப்போட்டு, அவன் தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்.
யோசுவா 12:2-6
2
அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின் எல்லையான யாபோக்கு ஆறுமட்டுமுள்ள தேசத்தையும்,
3
சமனான வெளிதுவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரோத் கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல் மட்டும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான்.
4
இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணி,
5
எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர், மாகாத்தியர் எல்லைமட்டும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாயிருந்த பாதிக் கீலேயாத்மட்டும் இருக்கும் பாசான் அனைத்தையும் ஆண்டான்.
6
அவர்களைக் கர்த்தரின் தாசனாகிய மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தார்கள்; அத்தேசத்தைக் கர்த்தரின் தாசனாகிய மோசே ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகக் கொடுத்தான்.
யோசுவா 13:10-12
10
எஸ்போனிலிருந்து அம்மோன் புத்திரரின் எல்லைமட்டும் ஆண்ட எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குரிய சகல பட்டணங்களையும்,
11
கீலேயாத்தையும், கெசூரியர் மாகாத்தியருடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும்,
12
அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆண்டு, மோசே முறிய அடித்துத் துரத்தின இராட்சதரில் மீதியாயிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காமட்டுமிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.
நெகேமியா 9:22
அவர்களுக்கு ராஜ்யங்களையும் ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.
சங்கீதம் 135:11
எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்து,
சங்கீதம் 136:19
எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 136:20
பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.