Bring the tribe of Levi near, and present them before Aaron the priest, that they may minister unto him.
எண்ணாகமம் 1:49-53
49
நீ லேவி கோத்திரத்தாரை மாத்திரம் எண்ணாமலும், இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்கள் தொகையை ஏற்றாமலும்,
50
லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்.
51
வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர் அதை இறக்கிவைத்து, அது ஸ்தாபனம் பண்ணப்படும்போது, லேவியர் அதை எடுத்து நிறுத்தக்கடவர்கள்; அந்நியன் அதற்குச் சமீபத்தில் வந்தால் கொலை செய்யப்படக்கடவன்.
52
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தங்கள் பாளயத்தோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடக்கடவர்கள்.
53
இஸ்ரவேல் புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கி, லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார்.
எண்ணாகமம் 2:17
பின்பு ஆசரிப்புக்கூடாரம் லேவியரின் சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ, அப்படியே அவரவர் தங்கள் வரிசையிலே தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப் போகக்கடவர்கள்.
எண்ணாகமம் 2:33
லேவியரோ, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே எண்ணப்படவில்லை.
எண்ணாகமம் 8:6-15
6
நீ இஸ்ரவேல் சந்ததியாரினின்று லேவியரைப் பிரித்தெடுத்து, அவர்களைச் சுத்திகரிப்பாயாக.
7
அவர்களைச் சுத்திகரிக்கும்படி அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: அவர்கள்மேல் சுத்திகரிக்கும் ஜலத்தைத் தெளிப்பாயாக; பின்பு அவர்கள் சர்வாங்க சவரம்பண்ணி, தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, தங்களைச் சுத்திகரிக்கக்கடவர்கள்.
8
அப்பொழுது ஒரு காளையையும், அதற்கேற்ற எண்ணெயிலே பிசைந்த மெல்லியமாவாகிய போஜனபலியையும் கொண்டுவரக்கடவர்கள்; பாவநிவாரணபலியாக வேறொரு காளையையும் நீ வாங்கி.
9
லேவியரை ஆசரிப்புக்கூடாரத்துக்கு முன் வரச்செய்து, இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரையும் கூடிவரப்பண்ணுவாயாக.
10
நீ லேவியரைக் கர்த்தருடைய சந்நிதியில் வரப்பண்ணினபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கைகளை லேவியர்மேல் வைக்கக்கடவர்கள்.
11
லேவியர் கர்த்தருக்குரிய பணிவிடை செய்யும்பொருட்டு, ஆரோன் அவர்களை இஸ்ரவேல் புத்திரரின் காணிக்கையாகக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டப்படும் காணிக்கையாய் நிறுத்தக்கடவன்.
12
அதன்பின் லேவியர் தங்கள் கைகளைக் காளைகளுடைய தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு நீ லேவியருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, கர்த்தருக்கு அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியாகவும் செலுத்தி,
13
லேவியரை ஆரோனுக்கும் அவன் குமாரனுக்கும் முன்பாக நிறுத்தி, அவர்களைக் கர்த்தருக்கு அசைவாட்டப்படும் காணிக்கையாக்கி,
14
இப்படி நீ லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய்; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்.
15
இப்படி அவர்களைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக்கக்கடவாய்; அதன்பின்பு லேவியர் ஆசரிப்புக்கூடாரத்தில் பணிவிடை செய்யப் பிரவேசிக்கக்கடவர்கள்.
எண்ணாகமம் 8:22-26
22
அதற்குப்பின்பு லேவியர் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் முன்பாக ஆசரிப்புக்கூடாரத்தில் தங்கள் பணிவிடையைச் செய்யும்படி பிரவேசித்தார்கள்; கர்த்தர் லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்தார்கள்.
23
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
24
லேவியருக்குரிய கட்டளை என்னவென்றால்: இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் சேனையிலே சேவிக்க வரவேண்டும்.
25
ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைசெய்யாமல் திருப்பணி சேனையை விட்டு,
26
ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக்காக்கிறதற்குத் தங்கள் சகோதரரோடேகூட ஊழியஞ்செய்வதேயன்றி, வேறொரு சேவகமும் செய்யவேண்டியதில்லை; இப்படி லேவியர் செய்யவேண்டிய வேலைகளைக்குறித்துத் திட்டம்பண்ணக்கடவாய் என்றார்.
எண்ணாகமம் 16:9-11
9
கர்த்தருடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம்மண்டையிலே சேரப்பண்ணும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும்,
10
அவர் உன்னையும் உன்னோடேகூட லேவியின் புத்திரராகிய உன்னுடைய எல்லாச் சகோதரனையும் சேரப்பண்ணினதும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ?
11
இதற்காக நீயும் உன் கூட்டத்தார் அனைவரும் கர்த்தருக்கு விரோதமாகவே கூட்டங்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் எம்மாத்திரம் என்றான்.
எண்ணாகமம் 18:2-6
2
உன் தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன் சகோதரரையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன் குமாரருமோ சாட்சியின் கூடாரத்துக்குமுன் ஊழியம் செய்யக்கடவீர்கள்.
3
அவர்கள் உன் காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கக்கடவர்கள்; ஆகிலும் அவர்களும் நீங்களும் சாகாதபடிக்கு, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சேராமல்,
4
உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்துக்கடுத்த எல்லாப் பணிவிடையையும் செய்ய, ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக் காக்கக்கடவர்கள்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக்கூடாது.
5
இஸ்ரவேல் புத்திரர்மேல் இனிக் கடுங்கோபம் வராதபடிக்கு, நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின் காவலையும் காக்கக்கடவீர்கள்.
6
ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்கு தத்தமாகக் கொடுத்தேன்.
யாத்திராகமம் 32:26-29
26
பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்.
27
அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
28
லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள்.
29
கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன்தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாயிருக்கிறதினால், கர்த்தருக்கு உங்களைப் பிரதிஷ்டைபண்ணுங்கள் என்று மோசே சொல்லியிருந்தான்.
உபாகமம் 33:8
லேவியரைக்குறித்து: நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரிடத்தில் வாக்குவாதம்பண்ணின உன் பரிசுத்த புருஷன் வசமாய் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக.
உபாகமம் 33:9
தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும்: நீ உங்களைப் பாரேன் என்று சொல்லி, தன் சகோதரரை அங்கிகரியாமல், தன் பிள்ளைகளையும் அறியாமலிருக்கிறவன் வசமாய் அவைகள் இருப்பதாக; அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள்.
மல்கியா 2:4
லேவியோடேபண்ணின என் உடன்படிக்கை நிலைத்திருக்கும்படிக்கு இந்தக் கட்டளையை உங்களிடத்திற்கு அனுப்பினேன் என்கிறதை அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.