Thou shalt not kill.
யாத்திராகமம் 21:14
ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என்பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டுபோய்க் கொலைசெய்யவேண்டும்.
யாத்திராகமம் 21:20
ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது தனக்கு அடிமையானவளையாவது, கோலால் அடித்ததினாலே, அவன் கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.
யாத்திராகமம் 21:29
தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்று போட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலை செய்யப்படவேண்டும்.
ஆதியாகமம் 4:8-23
8
காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.
9
கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.
10
அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.
11
இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக் கொள்ள தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
12
நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.
13
அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது.
14
இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.
15
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.
16
அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.
17
காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்.
18
ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.
19
லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர்.
20
ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.
21
அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர், நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.
22
சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.
23
லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவி கொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்;
ஆதியாகமம் 9:5
உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.
ஆதியாகமம் 9:6
மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.
லேவியராகமம் 24:21
மிருகத்தைக் கொன்றவன் பதில் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன்.
எண்ணாகமம் 35:16-34
16
ஒருவன் இருப்பு ஆயுதத்தினால் ஒருவனை வெட்டினதினால் அவன் செத்துப்போனால், வெட்டினவன் கொலைபாதகனாயிருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும்.
17
ஒருவன் ஒரு கல்லை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவன்மேல் எறிகிறதினாலே அவன் செத்துப்போனால் கல்லெறிந்தவன் கொலைபாதகனாயிருக்கிறான்; அவன் கொலைசெய்யப்படவேண்டும்.
18
ஒருவன் தன் கையில் ஒரு மர ஆயுதத்தை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவனை அடித்ததினால் அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகனாயிருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும்.
19
பழிவாங்கவேண்டியவனே கொலைபாதகனைக் கொல்லவேண்டும்; அவனைக் கண்டமாத்திரத்தில் அவனைக் கொன்று போடலாம்.
20
ஒருவன் பகையினால் ஒருவனை விழத்தள்ளினதினாலாயினும், பதுங்கியிருந்து அவன் சாகத்தக்கதாய் அவன்மேல் ஏதாகிலும் எறிந்ததினாலாயினும்,
21
அவனைப் பகைத்து, தன் கையினால் அடித்ததினாலாயினும், அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகன்; அவன் கொலைசெய்யப்படவேண்டும், பழிவாங்குகிறவன் கொலைபாதகனைக் கண்ட மாத்திரத்தில் கொன்றுபோடலாம்.
22
ஒருவன் பகையொன்றும் இல்லாமல் சடுதியில் ஒருவனைத் தள்ளி விழப்பண்ணினதினாலாயினும், பதுங்கியிராமல் யாதொரு ஆயுதத்தை அவன்மேல் பட எறிந்ததினாலாயினும்,
23
அவனுக்குப் பகைஞனாயிராமலும் அவனுக்குத் தீங்கு செய்ய நினையாமலும் இருக்கையில், ஒருவனைக் கொன்று போடத்தக்க ஒரு கல்லினால் அவனைக்காணாமல் எறிய, அது அவன்மேல் பட்டதினாலாயினும், அவன் செத்துப்போனால்,
24
அப்பொழுது கொலைசெய்தவனையும் பழிவாங்குகிறவனையும் சபையார் இந்த நியாயப்படி விசாரித்து,
25
கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்துக்கு அவனைத் திரும்பப் போகும்படி செய்யக்கடவர்கள்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன்.
26
ஆனாலும் கொலைசெய்தவன் தான் ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது,
27
பழிவாங்குகிறவன் கொலை செய்தவனை அடைக்கலப்பட்டணத்துக்கு வெளியே கண்டுபிடித்துக்கொன்றுபோட்டால், அவன்மேல் இரத்தப்பழி இல்லை.
28
கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அடைக்கலப் பட்டணத்திலிருக்கவேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன் சுதந்தரமான காணியாட்சிக்குத் திரும்பிப்போகலாம்.
29
இவைகள் உங்கள் வாசஸ்தலங்களிலெங்கும் உங்கள் தலைமுறைதோறும் உங்களுக்கு நியாயவிதிப் பிரமாணமாயிருக்கக்கடவது.
30
எவனாகிலும், ஒரு மனிதனைக்கொன்றுபோட்டால், அப்பொழுது சாட்சிகளுடைய வாக்குமூலத்தின்படியே அந்தக் கொலைபாதகனைக் கொலைசெய்யக்கடவர்கள்; ஒரே சாட்சியைக்கொண்டுமாத்திரம் ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச்செய்யலாகாது.
31
சாகிறதற்கேற்ற குற்றஞ்சுமந்த கொலைபாதகனுடைய ஜீவனுக்காக நீங்கள் மீட்கும் பொருளை வாங்கக்கூடாது; அவன் தப்பாமல் கொலைசெய்யப்படவேண்டும்.
32
தன் அடைக்கலப்பட்டணத்துக்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன் நாட்டிற்குத் திரும்பிவரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும் பொருளை வாங்கக்கூடாது.
33
நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.
34
நீங்கள் குடியிருக்கும் என் வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; கர்த்தராகிய நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே வாசம்பண்ணுகிறேன் என்று சொல் என்றார்.
உபாகமம் 5:17
கொலை செய்யாதிருப்பாயாக.
உபாகமம் 19:11-13
11
ஒருவன் பிறனொருவனைப் பகைத்து, அவனுக்குப் பதிவிருந்து, அவனுக்கு விரோதமாய் எழும்பி, அவன் சாகும்படி அவனை அடித்து, இந்தப் பட்டணங்களில் ஒன்றில் ஓடிப்போயிருப்பானாகில்,
12
அந்தப் பட்டணத்தின் மூப்பர்கள் ஆள் அனுப்பி, அங்கேயிருந்து அவனைக் கொண்டுவரும்படி செய்து, அவன் சாகும்படிக்கு அவனை இரத்தப்பழி வாங்குகிறவன் கையில் ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.
13
உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; குற்றமில்லாத இரத்தப்பழியை இஸ்ரவேலை விட்டு விலக்கக்கடவாய்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்.
2சாமுவேல் 12:9
கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.
2சாமுவேல் 12:10
இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.
2இராஜாக்கள் 21:16
கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணின அந்தப் பாவமும் தவிர, அவன் எருசலேமை நாலு மூலைவரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாய், குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான்.
2நாளாகமம் 24:22
அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்று போட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.
சங்கீதம் 10:8-11
8
கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன.
9
தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, அவனைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.
10
திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.
11
' தேவன் அதை மறந்தார் என்று, அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார்' என்றும், தன் இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான்.
நீதிமொழிகள் 1:11
எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்;
நீதிமொழிகள் 1:18
இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளிவைத்திருக்கிறார்கள்.
ஏசாயா 26:21
இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.
எரேமியா 26:15
ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான்.
மத்தேயு 5:21
கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
மத்தேயு 5:22
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.
அப்போஸ்தலர் 28:4
விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது அழனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
ரோமர் 13:9
எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.
கலாத்தியர் 5:21
பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
1தீமோத்தேயு 1:9
எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,
யாக்கோபு 2:11
ஏனென்றால், விபசாரஞ்செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரஞ்செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய்.
யாக்கோபு 2:13
ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக்கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.
1யோவான் 3:12-15
12
பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.
13
என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.
14
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்.
15
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.