Sihon
எண்ணாகமம் 21:21-35
21
அப்பொழுது இஸ்ரவேலர் எமோரியரின் ராஜாவாகிய சீகோனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:
22
உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தவு கொடுக்கவேண்டும்; நாங்கள் வயல்களிலும், திராட்சத்தோட்டங்களிலும் போகாமலும், துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும், உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும் ராஜபாதையில் நடந்துபோவோம் என்று சொல்லச்சொன்னார்கள்.
23
சீகோன் தன் எல்லை வழியாய்க் கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்தரவு கொடாமல், தன் ஜனங்களெல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலருக்கு விரோதமாக வனாந்தரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான்.
24
இஸ்ரவேலர் அவனைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அர்னோன் தொடங்கி அம்மோன் புத்திரரின் தேசத்தைச்சார்ந்த யாப்போக்குவரைக்குமுள்ள அவனுடைய தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன் புத்திரரின் எல்லை அரணிப்பானதாயிருந்தது.
25
இஸ்ரவேலர் அந்தப் பட்டணங்கள் யாவையும் பிடித்து, எஸ்போனிலும் அதைச் சார்ந்த எல்லாக் கிராமங்களிலும் எமோரியருடைய எல்லாப் பட்டணங்களிலும் குடியிருந்தார்கள்.
26
எஸ்போனானது எமோரியரின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாயிருந்தது; அவன் மோவாபியரின் முந்தின ராஜாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அர்னோன் வரைக்கும் இருந்த அவன் தேசத்தையெல்லாம் அவன் கையிலிருந்து பறித்துக்கொண்டான்.
27
அதினாலே கவிகட்டுகிறவர்கள்: எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் ஸ்திரமாய்க் கட்டப்படுவதாக.
28
எஸ்போனிலிருந்து அக்கினியும் சீகோனுடைய பட்டணத்திலிருந்து ஜூவாலையும் புறப்பட்டு, மோவாபுடைய ஆர் என்னும் ஊரையும், அர்னோனுடைய மேடுகளிலுள்ள ஆண்டவமார்களையும் பட்சித்தது.
29
ஐயோ, மோவாபே, கேமோஷ் தேவனின் ஜனமே, நீ நாசமானாய்; தப்பி ஓடின தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குச் சிறைகளாக ஒப்புக்கொடுத்தான்.
30
அவர்களை எய்துபோட்டோம்; எஸ்போன் பட்டணம் தீபோன் ஊர்வரைக்கும் நாசமாயிற்று; மேதோபாவுக்குச் சமீபமான நோப்பா பட்டணபரியந்தம் அவர்களைப் பாழாக்கினோம் என்று பாடினார்கள்.
31
இஸ்ரவேலர் இப்படியே எமோரியரின் தேசத்திலே குடியிருந்தார்கள்.
32
பின்பு, மோசே யாசேர் பட்டணத்துக்கு வேவுபார்க்கிறவர்களை அனுப்பினான்; அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அங்கே இருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.
33
பின்பு பாசானுக்குப் போகிற வழியாய்த் திரும்பிவிட்டார்கள்; அப்பொழுது பாசான் ராஜாவாகிய ஓக் என்பவன் தன் சமஸ்த ஜனங்களோடும் அவர்களை எதிர்த்து யுத்தம்பண்ணும்படிக்கு, எத்ரேயுக்குப் புறப்பட்டு வந்தான்.
34
கர்த்தர் மோசேயை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும், அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே வாசமாயிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தபடியே இவனுக்கும் செய்வாய் என்றார்.
35
அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாயிராதபடிக்கு அவனையும், அவன் குமாரரையும், அவனுடைய சகல ஜனங்களையும் வெட்டிப்போட்டு, அவன் தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்.
உபாகமம் 2:30-37
30
ஆனாலும் தன் தேசத்தைக் கடந்து போகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.
31
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இதோ, சீகோனையும் அவன் தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல் அவன் தேசத்தை வசப்படுத்தி, சுதந்தரித்துக்கொள் என்றார்.
32
சீகோன் தன்னுடைய எல்லா ஜனங்களோடுங்கூட நம்மோடே யுத்தம்பண்ணப் புறப்பட்டு, யாகாசிலே வந்தான்.
33
அவனை நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும் அவன் குமாரரையும் அவனுடைய சகல ஜனங்களையும் முறிய அடித்து,
34
அக்காலத்தில் அவன் பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த ஸ்திரீ புருஷரையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் சங்காரம்பண்ணினோம்.
35
மிருகஜீவன்களையும் நாம் பிடித்த பட்டணங்களில் கொள்ளையடித்த பொருள்களையுமாத்திரம் நமக்கென்று வைத்துக்கொண்டோம்.
36
அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும் ஆற்றண்டையில் இருக்கிற பட்டணமும் தொடங்கி, கீலேயாத்வரைக்கும் நமக்கு எதிர்த்து நிற்கத்தக்க அரணிப்பான பட்டணம் இருந்ததில்லை, எல்லாவற்றையும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்.
37
அம்மோன் புத்திரருடைய தேசத்தையும், யாபோக் ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்.
உபாகமம் 3:1-11
1
பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப் போகிற வழியாய்ப் போனோம்; பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல ஜனங்களோடும் நம்மோடே எதிர்த்து யுத்தம்பண்ணும்படி புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான்.
2
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய ஜனங்கள் எல்லாரையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தது போல, அவனுக்கும் செய்வாய் என்றார்.
3
அப்படியே நம்முடைய தேவனாகிய கர்த்தர் பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல ஜனங்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமற்போகுமட்டும் அவனை முறிய அடித்தோம்.
4
அக்காலத்திலே அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்தோம்; அவர்களிடத்தில் நாம் பிடித்துக்கொள்ளாத பட்டணம் இல்லை; பாசானிலிருந்த ஓகின் ராஜ்யமான அறுபது பட்டணங்களுள்ள அர்கோப் தேசம் முழுவதையும் பிடித்தோம்.
5
அந்தப் பட்டணங்களெல்லாம் உயர்ந்த மதில்களாலும் வாசல்களாலும் தாழ்ப்பாள்களாலும் அரணாக்கப்பட்டிருந்தது; அவைகள் அன்றி, மதிலில்லாத பட்டணங்களும் அநேகம்.
6
அவைகளையும் சங்காரம்பண்ணினோம்; நாம் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்ததுபோல, அந்த எல்லாப் பட்டணங்களிலுமுள்ள புருஷரையும் ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் சங்காரம்பண்ணினோம்.
7
ஆனாலும் பட்டணங்களிலுள்ள ஆஸ்தியையும் சகல மிருகஜீவன்களையும் நமக்கென்று கொள்ளையிட்டோம்.
8
இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதொடங்கி, எர்மோன் மலைவரைக்குமுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் எமோரியருடைய இரண்டு ராஜாக்களிடத்திலுமிருந்து பிடித்தோம்.
9
சீதோனியர் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியரோ அதைச் சேனீர் என்கிறார்கள்.
10
சமனான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்யத்தின் பட்டணங்கள் மட்டுமுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம்.
11
மீந்திருந்த இராட்சதரில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன் மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினாற் செய்த அவனுடைய கட்டில் மனிதருடைய கை முழத்தின்படியே, ஒன்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; அது அம்மோன் புத்திரருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா?
நெகேமியா 9:22
அவர்களுக்கு ராஜ்யங்களையும் ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.
and all the
யோசுவா 10:1-12
1
யோசுவா ஆயியைப் பிடித்து, சங்காரம்பண்ணி, எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தபடி, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது,
2
கிபியோன் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல் பெரிய பட்டணமும், ஆயியைப்பார்க்கிலும் பெரிதுமாயிருந்தபடியினாலும், அதின் மனுஷரெல்லாரும் பலசாலிகளாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.
3
ஆகையால், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி:
4
நாங்கள் கிபியோனைச் சங்கரிக்கும்படி, நீங்கள் என்னிடத்தில் வந்து, எனக்குத் துணைசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும், இஸ்ரவேல் புத்திரரோடும் சமாதானம்பண்ணினார்கள் என்று சொல்லி அனுப்பினான்.
5
அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியரின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லாச் சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாகப் பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினார்கள்.
6
அப்பொழுது கிபியோனின் மனுஷர் கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் ஆளனுப்பி: உமது அடியாரைக் கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை இரட்சித்து, எங்களுக்குத் துணைசெய்யும்; பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின் ராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாய்க் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள்.
7
உடனே யோசுவாவும் அவனோடேகூடச் சகல யுத்தமனுஷரும் சகல பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள்.
8
கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார்.
9
யோசுவா கில்காலிலிருந்து இராமுழுதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான்.
10
கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்.
11
அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்கா மட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப்பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.
12
கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்து நில்லுங்கள் என்றான்.