8
இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையை விட்டுஎடுத்து,
9
நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.
10
நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்வரையில் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கும்படி அவர்களை நாட்டினேன்.
11
உன்னுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் உன்னை நீங்கலாக்கி, இளைப்பாறவும் பண்ணினேன்; இப்போதும் கர்த்தர் உனக்கு வீட்டை உண்டுபண்ணுவார் என்பதைக் கர்த்தர் உனக்கு அறிவிக்கிறார்.
12
உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைப்பண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.